Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

திருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்!

பைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் ‘குர்ஆனில் சரித்திரத் தவறு – மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா?’ என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.

குர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ? 

இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:

3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: ‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்’ எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) ‘அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

19:27 பின்னர் (மர்யம் – மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: ‘மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!’

19:28 ‘ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை’ (என்று பழித்துக் கூறினார்கள்).

இந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான (?) கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

விளக்கம்:

யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

என்ன கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா? இந்த அபாரமான கண்டுபிடிப்பை (?) படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு  


நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்

உனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.
நீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.
 
எவ்வளவு வெறித்தனம்? எத்தனை நாள் கோபமோ! இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும்? அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.

இந்த தவறை (?) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

 இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ? என்று எழுதுகின்றார்.

இவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.

ஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா? அல்லது பலருக்கும் இருக்குமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை (?) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று ‘மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது’ என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஏன் யோசிக்கவில்லை? குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா? மாட்டார்களா? வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றதா? இல்லையா? குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை?

உதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் ‘யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்’ என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், ‘மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும்? இங்கே மத்தேயு தவறாக – கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா? அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா?
குர்ஆனில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா? இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே – (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், ‘ஹாரூனுடைய சகோதரி’ என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு ‘மூசாவின் சகோதரியே!’ என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே? எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி ‘ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது?’ என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் ‘பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்’ என்று விளக்கமளித்தார்கள்.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)

இந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் -நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே!

ஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்) ஆனால் இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார்? அவரது தாயார் யார்? அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா? இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் – அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்? சற்று சிந்திக்க வேண்டாமா?

மரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக ‘ஹாருனின் சகோதரரியே’ என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே! அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா? அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை ‘பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி’ என்று வாதிடுவார்களா?

அது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா? அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா? அதுவும் ‘முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்’ என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா? பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா? இருக்கின்றது? நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும்? குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும்? அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.

அடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.

குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?

அந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

முதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்? சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான ‘புரோட்டஸ்டன்ட்’ பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்? சிந்திக்க வேண்டாமா?


எனவே கிறிஸ்தவர்களே! இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் – சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

நன்றி: egathuvam.blogspot.com

0 Comments:

Post a Comment