Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று தாமே சொல்லிக் கொள்ளவில்லை என்றொரு தவறானக் கருத்து வைக்கப்படுகிறது. முஹம்மது நபியை, அல்லாஹ்வின் தூதர் என்று மக்களாக விரும்பி அழைத்துக் கொண்டனர் என்று இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்தும் பேசப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சுய அறிமுகம் செய்து கொள்ளாமல், முஹம்மதை இறைத்தூதர் என்று மக்கள் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்? இது சாத்தியமா? என்று பார்ப்போம்.

அறிமுகமில்லாத எவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது உதாரணமாக:

ஒருவரைச் சந்திக்கும் பொழுது அவர் நானொரு பொறியாளர் என அறிமுகப்படுத்திய பின்னர் அவர் ஒரு பொறியாளர் என்பதைத் தெரிந்து கொள்வோம். இதை அவராகச் சொல்லாமல் அவரைத் தெரிந்து கொள்ள முடியாது. இன்னொரு வழி: அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் மூலமாகத் அறிந்து கொள்ள முடியும். அது, அவர் மற்றவருக்கு ஏற்கெனவே தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் என்று பொருள்.

நபித்துவ வாழ்வுக்கு முன், நபி (ஸல்) அவர்களை முஹம்மத் என்ற பெயரில் மக்கா நகர் மக்கள் அறிந்திருந்தனர். முஹம்மத் உண்மையாளர், மிக நம்பிக்கையானவர் என்று நன்மதிப்பும் வைத்திருந்தனர். நபியவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால், இறைத்தூதுவராக நியமிக்கப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை, அதாவது அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கும் வரை வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள்.

(நபியே) இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. (திருக்குர்ஆன், 028:086)

இவ்வாறே நம் கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (நபியே) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்,(042:052)

நாற்பது வயதுக்கு முன் வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? என்பது கூட நபியவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தாம் நபியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் உணர்த்துகின்றன. நபியவர்களுக்கு முதன்முதல் இறைச் செய்தி வந்தபோது அதையும் அவர்களால் உறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால் அவனது தூதுவராகத் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். இந்தத் தேர்வு இறைவனுக்கும், நபியவர்களுக்கும் மட்டுமுள்ள தொடர்பாக இருக்கிறது. அப்படியானால் இறைவன் நபியவர்களைத் தூதராகத் தேர்ந்தெடுத்தச் செய்தி மூன்றாமவருக்கு எப்படித் தெரிந்தது? என்ற விடையில்லாக் கேள்வி இங்கு எழுகிறது.

முஹம்மது நபி (ஸல்)அவர்கள் தாம் ஒரு இறைத்தூதர் என்று மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரே இறைவனின் பக்கம் மக்களை அழைத்து, ஏகத்துவ இஸ்லாமியப் பிராச்சாரத்தைத் துவங்கினார்கள்.

நபியவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே!'' என்றும் அழைத்து வந்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதராக தாமாகச் சொல்லிக் கொண்டதில்லை என்பது சரியான வாதமல்ல! மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் தம்மை இறைத்தூதர் என சுய அறிமுகம் செய்து கொண்டார்கள் எனபதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' (திருக்குர்ஆன், 007:158)

''நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம்'' (திருக்குர்ஆன், 004:079 இன்னும் பார்க்க: 004:170. 033:040)

முஹம்மது நபியவர்கள் மனிதகுலம் அனைவருக்கும் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றே திருக்குர்ஆன் மக்களிடையே அறிமுகம் செய்கிறது. குர்ஆன் வசனங்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் வாய் வார்த்தைகள் வழியாகவே இறைவன் அருளினான். ''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' எனும் வசனத்தின் வாயிலாக தம்மை இறைத்தூதர் என மக்களிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும்படி திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டதில்லை என்ற வாதம் தவறானது என்பதை மேற்கண்ட வசனங்கள் மெய்பிக்கிறது.

மேலும், ''(நபியே) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக'' (026:214) என்ற வசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று எச்சரித்தார்கள்.

''அல்லாஹ்வின் தூதர்'' (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது'' என்று எச்சரிக்கை செய்கிறார்கள். (புகாரி, 4771)

இங்கு தமது தந்தையுடன் பிறந்த சகோதரி, உறவு முறையில் அத்தையாகிய ஸஃபிய்யாவை நோக்கி ''அல்லாஹ்வின் தூதரின் அத்தையே'' எனத் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையில், ''இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்'' என்று உடன்படிக்கையில் எழுதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, 2732) (அவ்வாறு எழுத குறைஷியர் சார்பில் ஒப்பந்தம் செய்தவர் மறுத்து விட்டால் என்பது தனி விஷயம்)

இன்னும் அழைப்புப் பணியில், அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுத நாடியபோது அரசர்கள் முத்திரை இல்லாத கடிதங்களை படிக்க மாட்டார்கள் என்பதால் வெள்ளியிலான மோதிரத்தை தயார் செய்தார்கள். அதில் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று பதித்தார்கள்.

அல்லாஹ்

ரஸூல்

முஹம்மது


என்று அதில் மூன்று வரிகளாக இருந்தது (புகாரி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் அஸ்ஹாம் என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும்..
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவுக்கு எழுதுவது...
மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்களிலெல்லாம் இறைத்தூதர் முஹம்மது எழுதிக்கொள்வது என்று தம்மை அல்லாஹ்வின் தூதர் என்றே அறிமுகம் செய்து கொண்டார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள், சொல்லாலும், எழுத்தாலும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என சுய அறிமுகப்படுத்திய பின்னரே அவர்கள் இறைத்தூதர் என மற்றவர்கள் அறிந்துகொண்டார். அறிந்து நபியவர்களைப் பின்பற்றியவர்கள் முஹம்மதை இறைத்தூதர் என ஒப்புக் கொண்டு, நபியை "அல்லாஹ்வின் தூதரே!" என்று அழைத்து வந்தார்கள்.

ஆகவே, முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்தியதில்லை என்பது தவறானக் கருத்து மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு முரண்படும் கருத்துமாகும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை 

நன்றி:   http://abumuhai.blogspot.com 

0 Comments:

Post a Comment