Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட முஸ்லிம்கள் இறைவனையும், இறைத்தூதரையும் அனைத்து உலக விஷயங்களையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும்.

''உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட அவனது தூதரை விட அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்!'' (திருக்குர்ஆன், 009:024)

இஸ்லாத்தை விட மேலாக உறவுகளுக்கும், உலக செல்வங்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை என மேற்கண்ட இறைவசனம் ஆழமாக உணர்த்துகிறது. அதனால் இஸ்லாத்திற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடலாம் என்று அர்த்தம் கொள்ள இந்த வசனத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை! திருக்குர்ஆனின் மற்ற வசனங்கள் பிறருக்கு அநீதி இழைத்து வரம்பு மீறி நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. (அதனால் படிப்பவர்கள் தங்கள் கற்பனையை வேறு திசையில் தட்டி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

பெற்றோருக்குக் கட்டுப்பட வேண்டும், உறவுகளைப் பேண வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. எவன் ஒருவன் உறவை முறித்துக் கொள்கிறானோ அவனுடன் உள்ள உறவை நான் முறித்துக் கொள்வேன் என்று இறைவன் கூறுவதாக நபிமொழி இயம்புகிறது.

பூமியில் பரந்து சென்று உலக செல்வங்களைத் தேடிக் கொள்ளுங்கள். வீடு, தோட்டம், துரவுகள் என செல்வங்களை எந்த அளவுக்கு உங்களால் சம்பாதிக்க முடியுமோ, அவற்றை ஆகுமான வழியில் எவ்வளவும் சம்பாதித்து சேகரித்துக் கொள்ளுங்கள் என்றும் இஸ்லாம் அனுமதிக்கிறது!

ஆனாலும், ஏகத்துவ கொள்கைக்கு மாற்றமாக பெற்றோரும், உறவினரும் போதித்தால் அதற்கு இணங்காமல் இஸ்லாத்திற்கே முதலிடம் வழங்க, இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும். இறைவழியில் செலவிட நேர்ந்தால் தமது செல்வங்களை தயக்கமில்லாமல் செலவிட முன் வர வேண்டும். என்பதே திருக்குர்ஆன் 009:024வது வசனத்தின் சுருக்கமான விளக்கம்.

''உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (புகாரி, 0015. முஸ்லிம்)

பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள், உலக மாந்தர்கள் அனைவரையும் விட இறைத்தூதர் (ஸல்) அவர்களே ஒரு முஸ்லிமிற்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும். பிரியமானவர் என்றால், இம்மை எனும் இந்த உலக வாழ்க்கையில் வழிகாட்டியாகவும், மறைவான மறுமை வாழ்க்கை மீதான அவர்கள் அச்சமூட்டி எச்சரித்ததை நம்பிக்கை கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றிட வேண்டும்.

''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்'' (திருக்குர்ஆன், 003:031)

இம்மை, மறுமை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு முன்மாதிரியாக முஸ்லிம்கள் பின்பற்றிட ஒரே மாமனிதர் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை! எனவும் திருக்குர்ஆன் வசனங்கள் சான்றுகள் பகிர்கின்றன.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு தனி மனிதரல்ல. இறைவனின் தூதுவர் எனும் மாபெரும் அந்தஸ்தை பெற்று இஸ்லாம் எனும் முழு மார்க்கமாகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் நுபுவத்தைக் கீழ்த்தரமாக, கேவலமாக, அசிங்கப்படுத்தினால் அது இஸ்லாத்தை அவமதிப்பதாகும். அதை முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையே வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

கண்பார்வையற்ற ஒரு மனிதரின் (தாய்மையடைந்த) அடிமைப்பெண், நபி (ஸல்) அவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் நிந்தனைகள் பல செய்து கொண்டும் இருந்தாள். அம்மனிதர் பலமுறை மன்னித்தும் நபி (ஸல்) அவர்களை திட்டுவதை அவள் நிறுத்தவில்லை. அவர் பலமுறை அவளை எச்சரித்தும் அவள் திருந்தவில்லை. ஒரு நாள் இரவு அவள் நபி (ஸல்) அவர்களை அசிங்கமாகத் திட்டித் தீர்த்தாள், நபிகளை வசைமாறிப் பொழிந்தாள். எனவே கண்தெரியாத அந்த மனிதர் ஒரு கத்தியை எடுத்து அவளின் வயிற்றில் குத்திவிட்டார். இதனால் அவளும் அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது. மறுநாள் காலை இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்கள் அவையை கூட்டினார்கள் பிறகு மக்களை நோக்கி கேட்டார்கள். ''மக்களே உங்களை பரிவுடன் கேட்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது? மேலும் அவர் இவ்வவையில் இருப்பின் எழுந்து நிற்க வேண்டும் என்று அவர்மீது எனக்குள்ள உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்கள். பின்னர் மக்களிடமிருந்து ஒருவர் எழுந்து நின்றார்.

பிறகு அந்த நபர் நபி(ஸல்) அவர்களுக்கு முன் அமர்ந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளின் உரிமையாளன். அவள் கேவலமான வார்த்தைகளால் உங்களை திட்டுவதும், தொடர்ந்து நிந்தனை செய்வதுமாக இருந்தாள். நான் அவளை பலமுறை மன்னித்தேன். இருப்பினும் அவள் உங்களை இகழ்வதை நிறுத்துவதாக இல்லை. அவளை பல முறை நான் எச்சரித்தும் தன் நிலையை மாற்றிக் கொள்வதாக அவள் இல்லை. அவளிடமிருந்து முத்துக்களைப் போன்ற இரு மகன்களைப் நான் பெற்றிருக்கின்றேன். அவள் என்னுடைய மனைவி. கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு ரம்பத்தை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்'' என்றார்.

பிறகு, ''சாட்சியாளர்களாக இருங்கள்! அவளின் இரத்தத்திற்கு பழி வாங்கப்படாது.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அபூதாவூத், நஸயீ )

இந்த நபிமொழிக்கு ஒரு மாற்று மத அடியார் கீழ்கண்டவாறு ''ஷரஹ்'' எழுதியிருக்கிறார்.

//முஹம்மதைத் திட்டினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வயிற்றில் குத்தி கொன்று விட்டு வா. உன் மீது எந்த குற்றமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்//

வேடிக்கையைப் பாருங்கள், முஹம்மதைத் திட்டினால் யாராய் இருந்தாலும் கொன்று விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபியவர்களின் மீது கூசாமல் அவதூறு கூறியிருக்கிறார். மேற்கண்ட நபிமொழியை மீண்டும் படித்துப் பாருங்கள். நபி (ஸல்) அவர்களுக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததே தெரிந்திருக்கவில்லை. பின்னர் மக்கள் கூடியிருந்த அவையில், -''அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது?'' - என்று விசாரிக்கிறார்கள். பிறகு கண் தெரியாத மனிதர் எழுந்து காரணத்தை கூறுகிறார். நடந்த சம்பவங்கள் மிகத் தெளிவாக இருந்தும் அதைத் திரிப்பதில் தேர்ந்தவர்கள் செய்யும் காரியத்தையே இந்த மாற்று மத அடியார் கையாண்டிருக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை என நபிமொழி தொகுப்பு புகாரியில் இடம் பெற்ற செய்தி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளிக்கிறேன் என்று ஆட்டிறைச்சியில் விஷத்தைக் கலந்து கொலை செய்ய முயன்ற யூதப் பெண்ணையும் நபியவர்கள் மன்னித்தார்கள். நபித்துவம் துவக்க காலத்தில் மக்காவில் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது இவர் சூனியக்காரர், பைத்தியக்காரர் என்றெல்லாம் மக்காவாசிகள் விமர்சித்தார்கள். இன்னும் நபியவர்களைக் கொலை செய்யவும் முயன்றார்கள். இப்படித் தம்மை விமர்சித்தவர்களையும், தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களையும் நபி (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை!

வரலாறு இவ்வாறு இருக்க, சம்பந்தமில்லாமல் மேற்கண்ட நபிமொழிக்கு ''ஷரஹ்'' எழுதியவரின் கயமைத்தனம் நன்றாக விளங்குகிறது!

''உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.''

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அந்த நம்பிக்கையை கேவலப்படுத்தினால், அதன் விளைவுதான் இந்த சம்பவம்.

''கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்.''

இதிலிருந்து இஸ்லாத்தை விமர்சிப்பது என்பது வேறு, இஸ்லாத்தைக் கேவலாமாகத் திட்டி வசைமாறிப் பொழிவது என்பது வேறு. இரண்டாவதைச் செய்தால் அவர்கள் கொல்லப்பட்டாலும் அதற்கு ''பழிக்குப் பழி'' இல்லை என்று அந்த சம்பவத்துக்கு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

அதற்காக இன்று இஸ்லாத்தைக் கேவலமாக வசை பாடுபவர்களை தனி ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு குழுவோ கொன்றுவிட வேண்டும் என்று பொருள் இல்லை என்பதை முஸ்லிம்கள் விளங்கியே வைத்துள்ளனர்.

விளங்காத மாற்று மத அடியார்கள், இல்லாத விளக்கத்தை வழக்கம் போல் நபிமொழியில் திணிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இது இஸ்லாத்திற்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை 
 
நன்றி: http://www.islamkalvi.com/
 

0 Comments:

Post a Comment