Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About



abuzaidalathary@gmail.com

பைபிளை இறைவேதமாக ஏற்றுக்கொண்டுள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் “இயேசு உலகில் அவதரித்தார்” என்றும் “அவர் பல‌ அற்புதங்களை நிகழ்த்தினார்” என்றும் “மனிதர்களின் பாவமீட்சிக்காய்” சிலுவையில் அறையப்பட்டு மரித்து, பின்பு உயிர்த்தெழுந்தார் என்றும் நம்புகின்றனர்.

எனினும் பைபிள் விபரிக்கும் இயேசு, கிருஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ‘இயேசு’ என்ற பாத்திரம் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா? வாழ்ந்தவராயின் வரலாறு இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறது என்பதை மத, இன, மொழி, தேச வேறுபாடுகள் இன்றி பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் விமர்சகர்களும் ஆய்வுகள் செய்துள்ளனர்;  செய்துவருகின்றனர்.

இவ்வாறு “கிருஸ்துவ இயேசுவு“க்கும் “வரலாற்று இயேசு” வுக்குமிடையேயான ஒப்பீட்டு ரீதியான விபரங்களை தமிழில் தரும் நாம் இது பற்றிய தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், ஆதாரங்கள் அடிப்படையிலான மாற்றுக் கருத்துகளையும் பெரிதும் வரவேற்கின்றோம்.

“வரலாற்று இயேசு” தொடர்பில் அண்மைக்காலம் வரை பல்வேறுபட்ட ஆய்வாளர்களும் பல ஆய்வு நூற்களை வெளியிட்டுள்ளனர். அவைகளுள் குறிப்பிடத்தக்கதாக:

1.வரலாற்று இயேசு-  பேராசிரியர் கிரீபிலியூப்
2.நம்பிக்கையிலிருந்து பகுத்தறிவை நோக்கி- ப்ரூஸ்பர் அல்பிரீக்
3.இயேசு கிருஸ்து ஒரு மூடப்புராணம்- முன்னால் கிருஸ்துவ மதபோதகர் கைபூ
4.வரலாற்று இயேசுவைத் தேடி-  அல்பிரட்ஸ் பைஸ்டர்
5.கடவுளாய்ப் போன மனிதன்-  ஜீரார் மீஸாதியஃ
ஆகிய நூற்களைச் சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறு பைபிள் கூறும் “இயேசு கிருஸ்துவை” வரலாற்று ரீதியாக ஆய்வுக்குட்படுத்திய அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” தொடர்பில் மூன்று விதமான பிரிவினராகக் காணப்படுகின்றனர்.

1. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் வரலாற்றில் ஒரு போதும் வாழவில்லை என ஒரேயடியாக மறுத்துரைக்கும் சாரார்.
2. கிருஸ்துவம் கூறும் ”இயேசு” என்பவர் வரலாற்றில் வாழ்ந்த, அக்காலத்தில் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட புராணப் பாத்திரங்கள் பலதை வைத்து திருச்சபையால் சோடிக்கப்பட்ட ஒரு “கலவைப் பாத்திரம்” என்று கூறும் சாரார்.
3. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் ஏனைய ”தீர்க்கதரிசிகள்” போன்று சாதாரணமாக அற்புதங்கள் நிகழ்த்தி, உபதேசங்கள் செய்து வாழ்ந்த ஒருவரே அன்றி சுவிஷேசங்கள் சித்தரிப்பது போன்ற ஒரு பாத்திரம் அல்ல என்று கூறும் சாரார்.

இவ்வாறு பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த, சிந்தனைப் பிண்ணனிகளைக் கொண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் பைபிள் கூறும் இயேசுவை, கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு”வை நிராகரிக்கும் வகையில் முடிவுகளைக் கூறுவதற்கான முக்கிய காரணம் என்ன‌ என்பதையே இக்கட்டுரையில் நாம் அலச உள்ளோம்.

எனவே, பைபிள் கூறும் “கிருஸ்தவ இயேசு” பற்றிய விபரங்களை முதலில் பார்த்து விட்டு பின்பு “வரலாற்று இயேசு” பற்றி நோக்குவோம்.

கிருஸ்துவ இயேசு

கிருஸ்துவர்கள் இறைவேதமாக நம்பும் பைபிள், அதன் புதியஏற்பாடு “இயேசு” பற்றி பின்வரும் விபரங்களைத் தருகின்றது.

1.இயேசு பற்றிய, இயேசுவுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நூற்றுக்கணக்கான “முன்னறிவுப்புகள்” பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. இயேசு, யூத சமுதாயத்துக்கு மத்தியில் யூதமத போதனைகளை க்கடைப்பிடிப்பவராக, சடங்கு சம்பிரதாயங்களை எதிர்ப்பவராக வாழ்ந்தார்.

எனவே, இயேசு பற்றிய விபரங்களை அக்காலயூதர்கள் நன்கறிந்திருந்தனர்.

2.இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய விஷேட நட்சத்திரத்தை அடையளங்கண்டு பாலஸ்தீனத்திற்கு கிழக்கே பாரசீகத்திலிருந்து (இன்றையஈரான்) ஞானிகள் வருகை தந்து இயேசுவை பணிந்து சென்றனர். (ம‌த்தேயு 2: 1-12)

எனவே, இயேசு பற்றிய விபரங்களை பாரசீகர்கள் அறிந்திருந்தனர்.

3. பாரசீக ஞானிகளிடத்தில் இருந்து அக்கால ஆட்சியாளன் ‘ஏரோது ராஜாவும் எருசலேம் நகரமக்கள் அனைவரும்’ இயேசு பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர்.(மத்தேயு 2:3)

எனவே இயேசு பற்றிய விபரங்களை ஆட்சியாளனும் எருசலேம் மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.

4. ஏரோது ராஜா “யூதர்களின் அரசன்” பிறந்து விட்டான் என்ற அச்சத்தின் காரணமாக “பெத்தலேகம்” மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் உள்ள குழந்தைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டான். ( மத்தேயு 2:16)

இக்கொலை நடவடிக்கையில் 14,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக கிருஸ்துவ மூலங்கள் உறுதி செய்ய வேறு சிலரோ இத்தொகை 144,000ஆக இருக்கலாம் எனக் கணிக்கின்றனர்.

எனவே, இந்த நகரங்களில் வாழ்ந்தவர்கள், அக்குழந்தைகளின் குடும்பத்தார்கள், உறவினர்கள் என குறைந்தது கால் மில்லியன்-இரண்டரை இலட்சம் மக்களாவது இச்சம்பவத்தினால் இயேசு பற்றிய விபரங்களைஅறிந்திருந்தனர்.

5.இக்கொலை நடவடிக்கைக்குப் பயந்து இயேசுவின் குடும்பம் எகிப்துக்கு தப்பிச் சென்று சிலகாலம் அங்கு வாழ்ந்தனர். (மத்தேயு2: 14-15)
எனவே, எகிப்தியர்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

6.பின்பு, இயேசு பயணங்கள் பல மேற்கொண்டு இன்றைய பாலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசங்களுக்குச் சென்று அங்கு மக்கள் கூடும் இடங்களில் போதனைகள் செய்தார். இத்தகைய உபதேசங்களின் இறுதியில் ‘சுவிஷேச ஆசிரியர்கள்’ பெரும்பாலும் “அதிகமானவர்கள் இயேசுவை விசுவாசித்தனர்” என்று எழுதியுள்ளனர். (மத்தேயு4: 14 -15 மற்றும் 4: 23- 24)

எனவே, பலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசமக்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

7.இயேசு மக்களுக்கு பகிரங்க சொற்பொழிவுகள் ஆற்றியதுடன் யூதமதத்தலைவர்களுடன் சர்ச்சைப்படுபவராகவும், தேவாலயங்களுக்குள் நுழைந்து வியாபாரிகளின் பலகைகளை கவிழ்த்துப் போடுபவராகவும் இருந்தார்.(யோவான் 2:13-25)
எனவே, மத்தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

8.பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் இயேசு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவைகளின் எண்ணிக்கை சுமார் நாற்பது அளவில் சுவிஷேசங்களில் கூறப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கலாநிதி வில்லியம் ஹாம்பல் என்பவர் தனது “வரலாற்று மற்றும் விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும்” என்ற நூலில் 302ம் பக்கம் முதல் 319ம் பக்கம் வரை பைபிள் கூறும் இயேசுவின் அற்புதங்களையும் அதை அறிந்தவர்களது எண்ணிக்கையையும் பட்டியலிட்டுள்ளார்.

கீழ்வரும் அட்டவனையினூடாக அதை நாமும் நோக்குவோம்.

தொடர் இலக்கம்
அற்புதம்
ஆதாரம் அறிந்தவர்களது எண்ணிக்கை
1
முப்பெத்தெட்டு வருட நோயாளியை இயேசு குணப்படுத்தல் யோவான் 5: 5-9
200
2
பத்து குஷ்டரோகிகளைக் குணப்படுத்தல் லூக்கா 1 7:12-14
1000
3
நாலாயிரம் பேருக்கு உணவளித்தல் மாற்கு 8: 1-‍ 9
4000
4
அதிக நோயாளிகளைக் குணப்படுத்தல் மாற்கு 1: 32-34
4000
5
இரண்டு மீன்கள், கொஞ்ச ரொட்டிகளை வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் யோவான்     7: 1-‍14
5000
6
கலீலியோ, யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தானுக்கு அக்கரை திருசீதோன் பட்டணங்களின் அநேக நோயாளிகளக் குணப்படுத்தல் மாற்கு 3: 8-11
20,000
7
கலீலியோ கடலுக்கு கிழக்கு பகுதியில் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தல். மத்தேயு      15: 29-31
20,000
8
இயேசு தடவியவர்கள் அனைவரும் குணமடைதல் மாற்கு 6: 53-56
40,000
9
இயேசுவின் பேரால் அற்புதங்கள் நிகழ்த்தும் 72 பேரை இயேசு இரண்டிரண்டு பேராக நகரங்களுக்கு அனுப்பி வைத்தல் லூக்கா 10: 1-17
72,000
10
தீய ஆவியினால் பிடிக்கப்பட்டவனை இயேசு குணப்படுத்தல் மாற்கு 5: 2-15
அப்பகுதி மக்கள் அனைவரும்

இவ்வட்டவணையின்படி ‘கலாநிதி வில்லியம் ஹாம்பல்’ அவர்கள் “இயேசுவின் காலத்தில் 20 இலட்சம் மக்கள் வசித்தார்கள் என்றிருந்தால் அதில் குறைந்தது 5% வீதமான மக்கள் அதாவது, ஒரு இலட்சம் பேர் இயேசுவின் அற்புதங்களைக் கண்டோ அல்லது கேள்விப்பட்டோ இருப்பார்கள்” என்ற முடிவுக்கு வருகிறார்.

சுருங்கக்கூறின், மருத்துவ வசதிகள் அதிகமில்லாத அன்றைய காலகட்டத்தில் சுவிஷேசங்களில் “ஒரு நடமாடும் வைத்தியசாலையாக” சித்தரிக்கப்படும் இயேசு பற்றிய விபரங்களை அதிகம் பேர் அறிந்திருந்தார்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாயிருக்கிறது.

இதனோடு சேர்த்து “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகின்றேன்” (யோவான்21:25) என்ற இறுதி சுவிஷேசத்தின் இறுதி வசனத்தையும் நாம் கவனத்திற்கொண்டால் பைபிள் கூறும் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” அக்காலமக்கள் அனைவரும் அறிந்துவைத்திருந்த ஒரு “ஜனரஞ்சகநாயகனாக” இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

9.இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்ற தீர்மானம் ரோமசக்கரவர்த்தியின் பிராந்திய ஆட்சியாளரான பிலாத்து என்பவரால் நிறைவேற்றப்பட்டது. (யோவான்18:29 – 19:16)
எனவே அரசஅதிகார அலுவலகர்கள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

10.பின்பு, பெருந்திரளான மக்கள் மத்தியில் பொது இடத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.
எனவே, அப்பிராந்திய மக்கள் அனைவரும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

11.இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் மரணித்தவர்கள் கல்லறைகளில் இருந்து உயிர்த்தெழுந்து நகரங்களில் நுழைந்து அதிக மக்களுடன் பேசினர்.    (மத்தேயு 27:52-53)
எனவே, இயேசுவின் மரணத்தை அந்நகரங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.

12.அவ்வேளையில், பூமி அதிர்ச்சி ஏற்பட்டு மலைகளும் பிளந்ததுடன் பூமியெங்கும் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (லூக்கா 23:44)
ஆக, பைபிளின் பிரகாரம் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” என்பவர் முதல் நூற்றாண்டில் பாமரர்கள், மதத்தலைவர்கள், மருத்துவர்கள், அரசஅதிகாரிகள், பௌதீகவியலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என சகல மட்டத்து மக்களாலும் பிராந்திய வேறுபாடு இன்றி அறியப்பட்ட “ஜனரஞ்சக நாயகனாக” இருந்தார் என்பதை நாம் நோக்கினோம்.

இனி “வரலாற்று இயேசு” வின் பக்கம் எமது பார்வையை திருப்புவோம்.

வரலாற்று இயேசு

பைபிளை இறைவேதமாக ஏற்றுள்ள கிருஸ்தவர்களது நம்பிக்கையின்படி ‘இயேசு’ என்ற பாத்திரம் அக்கால மக்கள் அனைவரும் அறிந்திருந்த ஒரு “ஜனரஞ்சகமான பாத்திரம்” என்பதை முதல் பகுதியில் நோக்கினோம்.

பைபிள் கூறும் பிரகாரம் சகல தரப்பு மக்களாலும் நன்கு அறியப்பட்டிருந்த இயேசு பற்றிய விபரங்கள், செய்திகள் அக்காலமக்களின், அப்பிரதேசவாசிகளின் இலக்கியங்கள், புத்தகங்கள், ஆவணங்களில் குறைந்தது சில நூறு தடவைகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். ஏன் சில ஆயிரம் தடவைகள் என நாம் கூறினாலுங்கூட அது மிகையாகது.

இவ்வாறு சகல விதத்திலும் சகல தரப்பு மக்களிடமும் பிரபல்யமான “கிருஸ்துவ இயேசு” பற்றி அக்கால அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் என்ன வாக்கு மூலம் தருகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

1.சிறிய பிப்லினூஸ் (கி.பி 61- 124)
இரண்டாம் நூற்றாண்டில் கிருஸ்துவர்கள் இயேசு பற்றிப் பாடிய பக்திப்பாடல் ஒன்றின் ஒரு வரியை மாத்திரம் இவர் குறிப்பிட்டுள்ளார்.
பைபிள் கூறும் இயேசு பற்றி எந்தத் தகவலையும் இவர் தரவில்லை.

2.தாஸிதூஸ் (கி.பி 55 – 120)
“நீறோன் மன்னன் காலத்தில் ரோம் நகரில் ஏற்பட்ட தீவிபத்து பற்றியும் ‘கிருஸ்து’என்ற பேரில் இருந்து தோற்றம் பெற்ற கிருஸ்துவர்கள் பற்றியும்……” என்று போகிற போக்கில்,  உறுதியில்லாத வதந்திகள் என்ற வகையில் சில வரிகளை எழுதியுள்ளார்.
அது தவிர இவர் இயேசு பற்றி எந்தத் தகவலையும் தரவில்லை.

3. பெரிய பிலீனூஸ் / காயூஸ்பிலீன் (கி.பி 23-79)
மிகப் பெரும் இலத்தீன் வரலாற்றாசிரியரும் பௌதீகவியலாளருமான ‘பிலீனூஸ்’ அவர்கள் கி.பி 65-70 காலப் பகுதியில் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்து ஐந்து வருடகாலம் அங்கே தங்கியிருந்து பல்வேறு விடயங்களையும் மிக நுணுக்கமாக எழுதியுள்ளார்.

1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட “சாக்கடல் சாசனங்களுக்குச் சொந்தக்காரர்களான கும்ரான் குகைவாசிகள்” தொடர்பில் அன்று இவர் எழுதிய குறிப்புகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் பொருந்திப் போவது இவரது நுணுக்கமான வரலாற்றுப் பதிவுக்கு சான்று பகர்கிறது.

குறித்த “கும்ரான்” பகுதியில் இருந்து சில மைல்கள் தூரத்தில்தான் “கிருஸ்துவ இயேசு” வாழ்ந்த ,அற்புதங்கள் நிகழ்த்திய பிரதேசங்கள் காணப்படுகின்றன.
அத்துடன் பௌதீகவியலாளரான இவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி, மலைகள் பிளவுபட்ட சம்பவம், சூரிய கிரகணம் என்பன இவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியரும், பௌதீகவியலாளருமான “பிலினூஸ்” அவர்கள் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்?
ஒன்றுமில்லை”

4.பீலூன் அலெக்ஸந்தரிய்யா (கி.மு 10-கி.பி 50)
அலெக்ஸந்தரிய்யாவில் வாழ்ந்த பிரபல்யமான யூத தத்துவவியலாளரான இவர் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள் தொடர்பில் பலவிடயங்களை எழுதியுள்ளார்.

இயேசு காலத்து ஆட்சியாளன் “பிலாத்து” பற்றியும் குறிப்பிட்டுள்ள இவர் “யோவான் தனது சுவிஷேசத்தை எழுத முன்னரே “வார்த்தை” (லோகோஸ்) பற்றி பல இடங்களில் விரிவாக விளக்கியுள்ளார்.

பழைய ஏற்பாட்டின் ஆரம்ப‌நூல்களுக்கு விரிவுரை எழுதியுள்ள இவர் “கும்ரான் குகைவாசிகள்” பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிட்டுள்ளார்?.
ஒன்றுமில்லை”

5. ஸின்கா / லூஸியூஸ் அனாயூஸ் (கி.மு 4- கி.பி 65)
ரோம இலக்கியவாதியும், தத்துவவியலாளருமான இவ்வறிஞர் பன்னிரண்டு தத்துவக் கட்டுரைகளையும், ஒரு வானியல் கட்டுரையையும் எழுதியுள்ளார். அத்துடன் எரிமலைகள், சூறாவளிகள், பூமியதிர்ச்சிகள் பற்றி ஆய்வுக்குட்படுத்தி பௌதீகவியல் தொடர்பிலும் ஒரு நூலை எழுதியுள்ள இவர் ரோம சக்கரவர்த்தி ”நீறோன்” என்பவரது ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கும் ஆரம்பகால கிருஸ்துவ போதகரான “பவுல்” என்பவருக்குமிடையே கடிதத் தொடர்புகள் காணப்பட்டதாக ஒரு வரலாற்று வதந்தி நிலவினாலும் அக்கடிதங்கள் நாலாம் நூற்றாண்டில் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை கிருஸ்துவ சமூகமே உறுதி செய்துள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த “ஸின்கா” அவர்கள் இயேசு பற்றியோ அல்லது வானவியல் தொடர்பில் எழுதியவர் என்ற ரீதியில் “இயேசு பிறந்த போது தோன்றிய நட்சத்திரம்” பற்றியோ அல்லது பௌதீகவியலாளர் என்ற வகையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, மலைகளின் பிளவு, சூரிய கிரகணம் பற்றியோ என்ன குறிப்புகளை தந்த்துள்ளார்?
ஒன்றுமில்லை”

6. யூஸ்த் (கி.பி 2 ம் நூற்றாண்டு)
இரண்டாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தின் வட பகுதியில் இயேசு விஜயம் செய்த “கபர்நாகூம்” பகுதியில் வாழ்ந்த வரலாற்றாசிரியரான இவர் “யூத ராஜாக்களின் வரலாறு” என்ற நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய எந்த நூலும் இன்று எம்மத்தியில் இல்லை என்றாலும் இவரது நூற்களில் இருந்து பலவிடயங்களை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொனஸ்தாந்து நோபில் தலைமை கிருஸ்துவ மதகுருக்களில் ஒருவரான “பூதியூஸ்” என்பவர் எடுத்தெழுதியுள்ளார்.
இவரது மேற்கோள்களில் இயேசு பற்றி எமக்கு என்ன தகவல்கள் கிடைக்கின்றன?
ஒன்றுமில்லை”

7 .சுபிதோன்/ ஜாயூஸ்திரான்கிலூஸ் (கி.பி 69 -140)
ரோம வரலாற்றை எழுதிய இவர் கி.பி 122 வரை ரோமச்சக்கரவர்த்தி “ஹாத்ரியான்” என்பவரது அந்தரங்க செயலாளராக கடமையாற்றினார். அத்துடன் 12 சீசரிய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
மேலும் கி.பி 39- 40 காலப்பகுதியில் ரோம சாம்ராஜ்யத்துக்கெதிராக யூதர்கள் செய்த கிளர்ச்சியையும் விரிவாக எழுதியுள்ளார்.
இவ் வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி எந்த விபரங்களை எமக்குத் தருகிறார்?.
எதுவுமில்லை”

8.  யூஸிபியூஸ் பிலாபியூஸ் (கி.பி 38-100)
யூத வரலாற்றாசிரியரான இவர் எருசலேம் பகுதியில் பிறந்து யூதர்களுக்கும் ரோமர்களுக்கும் சண்டை மூண்டபோது கலீலியோவுக்கான ஆட்சிப்பிரதிநிதியாக பதவி வகித்தார். எருசலேம் நகர் கி.பி 70ம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ரோமுக்குச் சென்ற இவர் யூதவரலாறு பற்றி 20 பாகங்கள் கொண்ட நூலை எழுதியுள்ளார். சுமார் 50 எழுத்தாக்கங்களுக்கும் இவர் சொந்தக்காரராக உள்ளார்.

இவரது நூல் ஒன்றில் இவர் “இயேசு பற்றிக் குறிப்பிடுவது போல், இவரை கிருஸ்துவாரச் சித்தரிக்கும் வகையில் சில பந்திகளை பிற்கால கிருஸ்தவர்கள் இடைச்செருகல் செய்துவிட்டனர்.

எனினும், இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அனைவரும் குறித்த பந்திகள் இடைச்செருகல் செய்யப்பட்டதுதான் என்பதிலும் யூஸிபியூஸ் அவர்கள் கிருஸ்தவர் அல்ல, யூதர்தான் என்பதிலும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.
இவ்வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறார்?
ஒன்றுமில்லை”

9. புளூதர்கஸ் (கி.பி 48-125)
கிரேக்க வரலாற்றாசிரியரான இவர் அணியிலக்கணம்,, கணிதம் ஆகிய துறைகளில் பல நூற்களை எழுதியுள்ளார். ரோம், எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்த இவர் கல்வி, பண்பாடு, அரசியல், மதம் தொடர்பிலான பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இன்று காணப்படும் இவரது இரு நூற்களில் இயேசு பற்றி என்ன‌ தகவல்கள் காணப்படுகின்றன?
ஒன்றுமில்லை”

10.சாக்கடல் சாசனச் சுருள்கள் (கி.பி 1ம் நூற்றாண்டு)
1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச்சுருள்களின் சில ஆவணங்கள் இயேசு வாழ்ந்த பகுதியில், இயேசு வாழ்ந்த காலகட்டதில் எழுதப்பட்டதாக இருக்கின்றன.
இச்சுருள்களில் பைபிள் விபரிக்கும் இயேசு பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?
எதுவுமில்லை”

*சாக்கடல் சாசனச் சுருள்கள் எவ்வாறு கிருஸ்துவர்களது மதநம்பிக்கையைத் தகர்த்தெறிகிறது என்பதை தனியாக ஒருகட்டுரையில் வேறொரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.

11.ஸ்த்ராபூன் (கி.மு 58- கி.பி 25)
கிரேக்க அறிஞரும், புவியியலாளருமான இவர் மனித இனங்களின் மூலம், அவர்களின் இடம்பெயர்வு, ஆட்சி உருவாக்கம் பற்றியும் எழுதியுள்ளார்.
இயேசு பற்றி இவர் என்ன கூறுகிறார்?
ஒன்றுமில்லை”

12.ஜூபினால் (கி.பி 14 – 130)  மற்றும் லூகானூஸ் (கி.பி39- 65)
பிரபல்யமான ரோம இலக்கியவாதிகளான இவ்விருவரும் சில இலக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார்கள்.
இவ்விருவரும் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்கள்?
ஒன்றுமில்லை”

இவ்வாறு வரலாற்றின் திரும்பிய திசைகள் எல்லாம் இயேசு பற்றிய தகவல்கள் குறித்து “ஒன்றுமில்லை”! ” ஒன்றுமில்லை”!! “ஒன்றுமேயில்லை”!!! என பதிலளிப்பது பைபிள் கூறும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” என்ற பாத்திரம் “வெறும் கற்பனைப் பாத்திரம்தான்” என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் முடிவுக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது.

நாம் மேற்கண்டவாறு “முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட எந்த வரலாற்று நூற்களிலும், ஆவணங்களிலும் இயேசு பற்றிய விபரங்கள் எதுவும் நம்பகமான முறையில் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை ஆய்வாளர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையே வரலாற்று ஆய்வாளர்கள் “ஒரு நூற்றாண்டின் மௌனம்” என்ற பரிபாஷயில்யில் சுட்டிக்காட்டுவர்.

அத்துடன் பைபிள் கூறும் “கிருஸ்துவ இயேசு”வின் போதனைகளைக் கேட்டு விசுவாசித்தவர்கள் எங்கே? அவர் பிறந்தபோதும் மரித்த போதும் ஏற்பட்ட பூகோள அடையாளங்களைக் கண்டவர்கள் எங்கே? இயேசுவின் அற்புதங்களைக் கண்டவர்கள், கேட்டவர்கள், நிவாரணம் பெற்றவர்கள் அனைவரும் எங்கே? இவர்களில் ஒருவர் கூடவா வரலாற்றுக் குறிப்புகளிலோ, ஆவணங்களிலோ, முதுசங்களிலோ, கல்வெட்டுகளிலோ இயேசு பற்றி எந்த ஒரு குறிப்பையும் எழுதவில்லை என்ற கேள்விக்கு கிருஸ்தவர்களிடம் எந்த பதிலும் இல்லை. பதிலளிக்கவும் முடியாது.


0 Comments:

Post a Comment