Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அந்த அறிவைக் கொண்டு நன்மையைத் தேர்ந்தெடுப்பது போல, நன்மையெனக் கருதி தீமையையும் தேர்ந்தெடுத்து விடுகிறான். தான் சரிகண்டு – தேர்ந்தெடுக்கும் ஒரு செயல் தனக்கு நன்மையாக இருந்தால் போதும், (பிறருக்கும் தீமையாக இருந்தாலும் பராவாயில்லை) என்று அவனின் அறிவு ஏற்றுக் கொள்கிறது. 

மனிதனின் அத்தியாவசியத் தேவைகள்.

மனிதனின் வாழ்வாதாரத் தேவைகளில் மிக முக்கியமானது உணவாகும். இந்த உணவைப் பெற்றுக் கொள்வதில் அவன் பல வழிகளில் முயற்சிக்கிறான், அவன் முயற்சிக்கும் அத்தனை வழிகளும் சரியே என்று மனிதம் ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணமானமாக:-
1. உணவின் தேவை அவசியமுள்ளவன், ”நேர்மையாக” உழைத்து ஈட்டிய பொருளிலிருந்து உணவைப் பெற்று உண்ணுகிறான் இவனது பசி அடங்கி விடுகிறது.
2. உணவின் தேவையுள்ள மற்றொருவன், உழைப்பதை விட எளியதாக இருக்கிறது என்றெண்ணி , திருட்டின் மூலம் கிடைக்கும் பொருளைக் கொண்டு ”தவறான” முறையில் உண்ணுகிறான் இவனது பசியும் அடங்குகிறது.
இருவரின் நோக்கமும் ஒன்றுதான், இருவரின் பசியும் அடங்கி விட்டது. திருடிச் சாப்பிட்டவனின் முயற்சியும் சரிதான் என்று எவரும் சொல்லமாட்டார்கள், தரத்தில் இருவரின் செயல்களும் ஒரே மாதிரி இல்லை என்பதை எந்த அறிவும் மறுக்காது. தனிமனிதனிலிருந்து தொடங்கும் இந்த சிறு உதாரணத்தையே – இல்லறம், கூட்டு வாழ்க்கை, சமூகம், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், தேசம், சர்வதேசம், வல்லரசுகள் வரை பொருத்திக் காட்டலாம். 

இரு முயற்சிகளும் சமமாகுமா?

வாழ்வாதாரத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மனிதனுக்கு இருவழி முயற்சிகள் உண்டு. இரு வழிகளில், பகுத்தறிவு எதை வேண்டுமானாலும் தெர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நேர்மையான முயற்சிக்குப் பரிசும் – தவறான முயற்சிக்கு தண்டனையும் உண்டு என்பதே எல்லா மதங்களின் நியதி.
நேர்மையான உழைப்பின் மூலம் பொருளீட்டியவனும், அடுத்தவர்களிடம் கோள்ளையடித்து, பிறரை வஞ்சித்து மோசடி செய்துத் தவறாகப் பொருளீட்டியவனும் சமமாக முடியாது. இதைச் சமமாக எண்ணுபவர்களின் நிலை எப்படி இருக்கிறதென்றால் – ஒழுங்காக இரவும், பகலும் அக்கறையுடன் பாடங்களைப் படித்து நன்றாகத் தேர்வெழுதி 90க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களும் – சரியாகப் படிக்காமல் ஊர் சுற்றிவிட்டு பரீட்சையில் 10க்கு மேல் மதிப்பெண்கள் வாங்காத மாணவர்களும், சமமானவர்களே! எல்லாரையும் பாஸாக்கி விட வேண்டும் என்று சொல்லும் அறிவுசாரா வாதத்தையே ஒத்திருக்கிறது.
நாம் சென்ற பதிவில் சொல்லியது போல், வஞ்சித்தவனும் – வஞ்சிக்கப்பட்டவனும் சமமானவர்களே! என்றால், நல்ல உள்ளங்கள் தம்மைத் தீயவற்றிலிருந்து விலக்கிக் கொண்டு வாழ்வது அர்த்தமற்றதாகி – எல்லோரும் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் -நன்மை, தீமையென்று பிரித்துக் கொண்டு வாழவேண்டிய அவசியமே இல்லை.

குற்றவியல் சட்டங்கள்.

அனைத்து நாடுகளும் மனிதர்களின் தவறுகளுக்குத் தக்கத் தண்டனையளிப்பதற்காக குற்றவியல் சட்டங்களை இயற்றி வைத்திக்கிறது. அனைத்து குடிமக்களின் மீது சமமாக இந்தச் சட்டங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்துகின்றதா? நிச்சயமாக இல்லை. பணம் பத்தும் செய்யும் என்பார்கள், வலியவன் – எளியவன் மீது அக்கிரமம் செய்து விட்டு தனது குற்றத்தை மறைக்க அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் பணத்தைப் பாய்ச்சித் தன்னைக் குற்றத்திலிருந்துக் காப்பாற்றிக் கொள்கிறான். பாதிக்கப்பட்டவன் நீதி கேட்டு அதிகாரிகளை நாடினால் ஏற்கெனவே விலை போனவர்கள் – நீதி கேட்டு வந்தவனின் மீது பொய்யான குற்றங்களை ஜோடித்து குற்றவாளியாக்கி தண்ணடனைக்குள்ளாக்கி விடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய அநீதி என்பதை எழுத்தில் வடிக்க இயலாது.
கொலை செய்து மனித உரிமையை மீறியவன் – கொலைகள் செய்வதைத் தொழிலாகக் கொண்டவன் – போதைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து மனித சமுதாயத்தை சீரழிப்பவன் – உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து மனித சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவன் – போலி மருந்துகளை தயார் செய்து மனித சமுதாயத்துக்கு ஆபத்து விளைவிப்பவன். இன்னும் மதங்களின் பெயரால் வெறி பிடித்து வன்முறையில் ஈடுபடுபவன் – பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்துத் தள்ளுபவன் – அதிகாரிகள், ஆட்சியாளர்கள் லஞ்சங்களைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு அநீதம் இழைக்கும் அக்கிரமக்காரர்கள். இன்னும் இதுபோன்ற அயோக்கியர்களெல்லாம் இவ்வுலகின் குற்றவியல் தண்டனைகளிலிருந்து தப்பித்து மிக நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வநியாயக்காரர்களுக்கெல்லாம் தண்டனை என்பதே இல்லையா? நரக தண்டனை பற்றிய நம்பிக்கை இல்லாதவர்கள், இதற்கு நேர்மையான பதிலை வைக்கட்டும். 

நரகம் பற்றிய நம்பிக்கை.

நரக தண்டனை உண்டு! என்பது அனுபவத்தால் விளைந்த நம்பிக்கையல்ல. இறைவனை விசுவாசிப்பதில் ஒரு கிளை நம்பிக்கையே நரகத்தைப் பற்றிய நம்பிக்கையாகும். நரகத்தையும் நம்பாமல் இஸ்லாத்தின் இறைநம்பிக்கை முழுமைபெறாது. (இந்த கோட்பாடு ”நரகத்தையும் கடவுளுக்கு மேலாக அதிகாரம் உள்ளதாக கற்பிதம் செய்கின்றன” என்ற அவதூறையும் இனிவரும் பதிவுகளில் நேசகுமார் சேர்த்துக் கொள்ளட்டும்.) 

நன்றி: www.islamkalvi.com   

0 Comments:

Post a Comment