Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

ஒருவன் தனதுத் தந்தையை நோக்கி ”நீ எனக்குத் தந்தையே இல்லை” என்று தன்னைப் பெற்றத் தந்தையைப் நிராகரித்தானாம். ஆனால் தந்தையின் சொத்தில் மட்டும் எனக்கு வாரிசுரிமையுண்டு என்று உரிமை கொண்டாடினானாம். இதையொத்ததாகவே இருக்கிறது ஓரிறைக் கொள்கையை மறுத்து நிராகரித்து விட்டு, ஒரே இறைவன் ஆயத்தப்படுத்தியுள்ள பரிசுகளில் பங்கு கேட்பதும்.

மறைவானவற்றை நம்புதல்.

ஓரிறைக் கொள்கையின் நம்பிக்கையில் ஒன்றுதான் ”அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்” (2:2) என்பதும் அடங்கும். மறைவானது – மனித புலன்களுக்கு புலப்படாதது என்பது ஜிப்ரீல் உள்பட வானவர்கள், ஜின்கள், சுவர்க்கம், நரகம், மனிதன் மரணித்தபின் அவனின் செயல்களுக்கேற்ப அடக்கஸ்தலத்தில் ஏற்படும் இன்பங்களும், துன்பங்களும், ஒரு நேரத்தில் இந்த உலகம் அழிக்கப்படும் – அழிக்கப்பட்டு முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் – உலகம் அழிக்கப்படுவதற்கு முன் அந்த வினாடி வரையுள்ள மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் – உயிர்ப்பிக்கப்பட்ட அனைவரும் அல்லாஹ்வின் சன்னதியில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். இதையே மறுமைநாள் – இறுதிநாள் என்றும் சொல்வார்கள். இவையும், இன்னும் இது போன்ற மறைவானவைகளைப் பற்றியும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே ”அவர்கள் மறைவானவற்றையும் நம்புவார்கள்” என்பதன் பொருளாகும்.

நியாயத் தீர்ப்பு நாள் பற்றி இஸ்லாம் இப்படிக் கூறுகிறது.

20:15. ”ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது ஆயினும் அதை மறைத்து வைத்துள்ளேன்.

இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் அனைத்து மனிதர்களும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் சன்னதில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் செயல்களுக்குத் தக்க பிரதிபலன்கள் வழங்கப்படும் என்பதை மரணத்திற்குப் பின் உள்ள மறுவுலக வாழ்க்கை என இஸ்லாம் கூறுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தையும், மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்றும் போதனை செய்தபோது, நபி(ஸல்) அவர்களை ஏற்காத மக்கள் ஏகத்துவத்தை எதிர்ப்பதைவிட மறுமை வாழ்க்கையையே கடுமையாக எதிர்த்தார்கள். மறுமை வாழ்க்கையை நம்பாமல் ”மரணத்திற்குப் பின் எழுப்பப்பட மாட்டோம்” என்ற நிராகரிப்பாளர்களின் வாதமும், அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் வசனங்களும் சில..
6:29. அன்றியும் ”இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
6:30. இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று ”ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)” என்று இவர்கள் கூறுவார்கள், அப்போது ”நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
11:7 (நபியே! அவர்களிடம்) ”நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், ”இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
16:38. இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
17:49.இன்னும்; ”(இறந்து பட்டு) எலும்புகளாகவும் உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
37:53. ”நாம் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவுமாகி விட்டபின் (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
56:47.மேலும் அவர்கள், ”நாம் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகி விட்டாலும் நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
64:7. (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர் ”அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் – மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
79:10. ”நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.
79:11. ”மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”
79:12. ”அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
83:4,5. மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

மரணத்திற்குப் பின் உள்ள மறுவுலக வாழ்க்கையைப் பற்றி இங்கு சுட்டிக் காட்டிய இறைவசனங்களோடு இன்னும் அதிகமான வசனங்களைத் திருக்குர்ஆனில் காணமுடியும். மறுமை, சொர்க்கம், நரகம், வானவர்கள், ஜின்கள், அடக்கஸ்தல வேதனை இவையனைத்தும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் நம்பிக்கை. மறுமையில் நபி (ஸல்) அவர்களோடு இன்னும் பல முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்காக சிபாரிசு செய்வார்கள், இதுவும் முஸ்லிம்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. இந்நம்பிக்கையோடு துளியும் சம்பந்தப்படாத – நிராகரிப்பாளர் நேசகுமார் ஆன்மீக இஸ்லாமும் அரசியல் இஸ்லாமும் – II என்ற தனது கட்டுரையில் நரக வேதனையைப் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களை பிரசுரித்து இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் சாடியிருக்கிறார். அவற்றிற்கான விளக்கங்களை அடுத்தடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம் அதற்கு முன்..

இறுதி வேதமாகிய திருக்குர்ஆன், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்படுவதற்கு முன் எல்லா சமுதாயங்களுக்கும் நபிமார்களை அனுப்பி, வேதங்களையும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான், என திருக்குர்ஆன் சொல்லிவிட்டு அவ்வேதங்கள் அனைத்தும் சேர்ததலுக்கும், நீக்கங்களுக்கும் உள்ளாகி மனிதக் கரங்களால் கறைப்படுத்தப்பட்டன என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. இதை உண்மைப்படுத்து வகையில் நேசகுமாரின் கருத்தைப் பாருங்கள்.

//*ஆனால் ஏனைய மதங்கள் எல்லாம் இந்த கட்டத்தை விட்டு முன்நகர்ந்து விட்டனர். எல்லா மதங்களிலும் இன்று மிகச் சிறுபான்மையினராக உள்ள மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள் மட்டுமே தூசு படிந்த தமது மதநூல்களில் விவரிக்கப் பட்டிருக்கும் இந்த நரகங்களைக் கண்டு பயந்து போயுள்ளனர், மற்றவர்களைப் பயமுறுத்திவருகின்றனர். இஸ்லாமியர் அல்லாத பெரும்பாலானோர் இவற்றைப் பெரிது படுத்துவதில்லை. மற்ற மதங்களில் இவ்வாறிருக்கையில், இஸ்லாமிய சமுதாயம் இந்த விஷயத்தில் இன்னமும் கற்காலத்திலேயே இருக்கிறது. அதற்குக் காரணமும் உண்டு. மதத்தின் பிடி கிறித்துவத்தில், இந்துமதத்தில், ஏனைய மதங்களில் தளர்ந்துவிட்டது இன்று. ஆனால், இஸ்லாத்தில் அப்பிடி ஸ்தூலமகவும், சித்தாந்த ரீதியாகவும் பலமாக முஸ்லிம்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கும் அப்பால் இரு முக்கியக் காரணங்கள் உள்ளன,*//
நரகத்தைப் பற்றி அச்சமூட்டி, எல்லா வேதங்களிலும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. நபிமார்கள் அனைவரும் நரகத்தைப் பற்றி அச்சமூட்டியிருக்கிறார்கள். அதாவது எல்லா மதங்களும் நரக வேதனைக்கு அஞ்சும்படியே போதித்திருக்கின்றன.

//* மதத்தின் பிடி கிறித்துவத்தில், இந்து மதத்தில், ஏனைய மதங்களில் தளர்ந்து விட்டது இன்று.*//
என்று எழுதிய நேசகுமார், மதங்கள் இவர்களைத் தளர்த்தியதா? அல்லது இவர்கள் மதங்களைத் தளர்த்தினார்களா? என்ற விபரங்களை புரியும்படி எழுதவில்லை. ”நீக்கங்கள் உண்டு” என்று எழுதிக் கொள்ளாமல் மதங்களில் சொல்லப்பட்ட நரக எச்சரிக்கையை தமது கரங்களால் நீக்கிவிட்டு ”மதங்கள் தளர்ந்து விட்டது இன்று” எனக் கைக் கூசாமல் எழுதுகிறார்.

//*ஆனால் ஏனைய மதங்கள் எல்லாம் இந்த கட்டத்தை விட்டு முன்நகர்ந்து விட்டனர்.*//

அதாவது வேதங்களின் போதனையால் முன்பு நரகத்தை நம்பியவர்கள், பின் நரகக் கட்டத்தை விட்டு முன்நகர்ந்து விட்டனர் என்பது ஒரு ஸ்திரமான கடவுள் நம்பிக்கை இல்லாதவரின் உளறலாகவே இருக்கிறது.

//*ஆனால், இஸ்லாத்தில் அப்பிடி ஸ்தூலமகவும், சித்தாந்த ரீதியாகவும் பலமாக முஸ்லிம்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.*//
அல்லாஹ் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி ”நபியே நீர் அச்சமூட்டி, எச்சரிப்பவர் தவிர வேறில்லை” என்று திருக்குர்ஆனில் சில வசனங்களில் கூறுவதைக் காணலாம். நரகத்தைப் பற்றிய நம்பிக்கையும், அச்சமும்தான் மனித வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் நீதியை நிலைநாட்டுவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

குறிப்பு:- ஜின் இனத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது, ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறது. ஜின் இனத்திலும் சந்ததிகள் பெருக்கம் உண்டு, ஜின் இனத்தில் சொர்க்கம், நரகம் செல்பவர்களும் உண்டு, நபி (ஸல்) அவர்கள் ஜின் இனத்துக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள், ஜின் இனத்துக்கு ஜின்களிலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டார்கள், மனிதர்களை விட ஜின்கள் பலம் வாய்ந்தவை, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே மனிதர்களும், ஜின்களும் படைக்கப்பட்டார்கள், வானவர்கள் போல் ஜின்களும் மறைவானப் படைப்பு எனவே ஜின்கள் மனிதர்களுக்குத் தெரிய மாட்டார்கள்.

நேசகுமார் ஜின்களை ”ஆவி” என்று எழுதுகிறார். ஆவி, பேய், பிசாசு, காத்து, கருப்பு இது போன்றவையெல்லாம் மூடநம்பிக்கை என்று இஸ்லாம் சொல்கிறது. எனவே ஜின்னை ஆவியென்று நேசகுமார் எழுதியதை நம்பவேண்டாம்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி: www.islamkalvi.com   

0 Comments:

Post a Comment