Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

பகுதி நான்கு

இயேசுவைப் பற்றி திருக்குர்ஆன்

கிறித்தவ நண்பர்களே! இயேசு எந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தாரோ அந்த ஓரிறைக் கொள்கை உங்கள் மத குருமார்களின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக, முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டது. கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவக் கொள்கைக்கும் எந்தவிதச் சம்மந்தமுமில்லாத அளவுக்கு இயேசுவும் புறக்கணிக்கப்பட்டு விட்டார். நாம் இது வரை எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்களிலிருந்தே இதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
அப்படியானால் இயேசு போதித்த அந்தக் கொள்கையை எங்கே தேடுவது? எப்படிப் பின்பற்றுவது?

கிறித்தவ மார்க்கத்தின் எந்தப் பிரிவினரிடமும் இயேசு வலியுறுத்திப் பிரச்சாரம் செய்த ஓரிறைக் கொள்கையை நிச்சயமாக நீங்கள் காண முடியாது.
'ஏலீ ஏலீ லாமா சபக்தானி – என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்று இயேசு இறுதிக் கட்டத்தில் சப்தமிட்டதாகப் பைபிள் கூறுகிறது.
அதை உறுதியாக நீங்கள் நம்புகிறீர்கள்.
நான் தேவனல்லன் என்றும் என்னால் என்னைக் காத்துக் கொள்ள இயலாது என்றும் என்னைப் படைத்த தேவனின் சித்தப்படியே யாவும் நடக்கும் என்றும் இந்த வாக்கு மூலத்தன் மூலம் இயேசு தெளிவுபடுத்தி விட்டார்.
(உங்கள் நம்பிக்கைப்படி) இயேசுவின் கடைசி மூச்சு அடங்கிய நேரத்திலும் இயேசு வலியுறுத்திய இந்தக் கொள்கையை நீங்கள் காற்றில் பறக்க விட்டு விட்டீர்கள்.

இயேசுவின் உயிர் மூச்சாகத் திகழ்ந்த இந்த ஓரிறைக் கொள்கையை அவர் போதித்த அதே வடிவில் நீங்கள் பின்பற்ற விரும்பினால் இஸ்லாத்தில் உங்களை இணைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
ஆம்! இஸ்லாத்தின் வேத நூலாகிய திருக்குர்ஆன் இயேசு போதித்த அதே கொள்கையை மிகத் தெளிவாக வழிமொழிகின்றது. யூதர்கள் இயேசுவின் மீதும் அவரது தாயார் மேரியின் மீதும் சுமத்திய களங்கத்தைக் குர்ஆன் முழுமையாகத் துடைத்தெறிகின்றது.

இயேசுவுக்குக் கடவுள் தன்மை இருக்கவில்லை என்பதைக் கூறும் அதே நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புக்களையும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

முஹம்மத் நபியவர்கள் எப்படி தேவனின் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க வந்த தூதராக இருந்தார்களோ அது போலவே இயேசுவும் தூதராக இருந்தார் என்பதையும் திருக்குர்ஆன் விளக்குகின்றது.
கிறித்தவ நண்பர்களே! உங்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் இயேசுவைக் குறித்த திருக்குர்ஆனின் வசனங்கள் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறோம்.

அன்னை மேரியைப் பற்றி

அவர்கள் (யூதர்கள்) தமது உடன்படிக்கையை முறித்ததாலும், கர்த்தரின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி தூதர்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது கர்த்தர் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர். அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மேரியின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், கர்த்தரின் தூதரான மேரியின் மகன் கிறிஸ்து எனும் இயேசுவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.)
(அல்குர்ஆன் 4:155-156)

திருக்குர்ஆன், அன்னை மேரியின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கி உரிய முறையில் கண்ணியப்படுத்துகின்றது.
தனது கற்பைக் காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம். அவரையும், அவரது புதல்வரையும் அகிலத்தாருக்கு சான்றாக்கினோம்.
(அல்குர்ஆன் 21:91)

மேரியின் மகனையும், அவரது தாயாரையும் சான்றாக ஆக்கினோம். செழிப்பும், நிலையான தன்மையும் கொண்ட உயரமான இடத்தில் அவ்விருவரையும் தங்க வைத்தோம். (அல்குர்ஆன் 23:50)

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரைநம்பிக்கை கொண்டோருக்கு கர்த்தர் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மேரியையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:11, 12)

இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன் என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!அவர் ஈன்றெடுத்த போது, என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை கர்த்தர் நன்கறிவார். ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மேரி என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார். அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, மேரியே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டார். இது கர்த்தரிடமிருந்து கிடைத்தது. கர்த்தர் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறார் என்று (மேரி) கூறினார்.
(அல்குர்ஆன் 3:35 36, 37)

மேரியே! கர்த்தர் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண் களை விட உம்மைச் சிறப்பித்தார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! மேரியே! உனது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக! (என்றும் வானவர்கள் கூறினர்.) (அல்குர்ஆன் 3:42, 43)

இயேசுவைப் பற்றி

அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை கர்த்தர் தன்னளவில் உயர்த்திக் கொண்டார். கர்த்தர் மிகைத்தவராகவும் ஞானமுடையோராகவும் இருக்கிறார். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (இயேசு, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார். (அல்குர்ஆன் 4:155-159)

யூதர்களால் இயேசு கொல்லப்படாமல் தேவனளவில் உயர்த்திக் கொள்ளப்பட்டார் என்பதைக் கூறி, திருக்குர்ஆன் அவரை உரிய முறையில் கண்ணியப்படுத்துகின்றது.

இயேசு தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே கர்த்தரை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! எனக் கூறினார். கர்த்தரே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவார். எனவே அவரையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி (என்றும் கூறினார்.) (அல்குர்ஆன் 43:63, 64)

மேரியே! (மேரியே!) கர்த்தர் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறார். மேரியின் மகனான இயேசு எனும் கிறிஸ்து என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதி மிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்ல வராகவும் இருப்பார்' (என்றும் கூறினர்) இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்? என்று அவர் கேட்டார். தான் நாடியதை கர்த்தர் இவ்வாறே படைக்கிறார். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் ஆகு என்பான். உடனே அது ஆகி விடும் என்று இறைவன் கூறினான். அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக் கொடுப்பான். இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.) உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; கர்த்தரின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். கர்த்தரின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது (என்றார்) எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே கர்த்தரை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!  கர்த்தரே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும் (எனவும் கூறினார்)அவர்களிடம் (இறை) மறுப்பை இயேசு உணர்ந்த போது கர்த்தருக்காக எனக்கு உதவுவோர் யார்? என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள்,  நாங்கள் கர்த்தரின் உதவியாளர்கள். கர்த்தரை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாக இரும்! என்றனர். எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்! (எனவும் கூறினர்)(இயேசுவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். கர்த்தரும் சூழ்ச்சி செய்தார். கர்த்தர் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவர்.

இயேசுவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை கியாமத் நாள் வரை (என்னை) மறுப்போரை விட மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக் கிறேன் என்று கர்த்தர் கூறியதை நினைவூட்டுவீராக! பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன். (என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.
(அல்குர்ஆன் 3:45-56)
கர்த்தரிடம் இயேசுவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து ஆகு என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
(அல்குர்ஆன் 3:59)

மேரியின் மகன் இயேசுவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா? என்று சீடர்கள் கூறிய போது, நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் கர்த்தருக்கு அஞ்சுங்கள்! என்று அவர் கூறினார். அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண்மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, இதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம் என்று அவர்கள் கூறினர். கர்த்தரே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் அது இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்  என்று மேரியின் மகன் இயேசு கூறினார். உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்  என்று கர்த்தர் கூறினார்.
(அல்குர்ஆன் 5:112-115)

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) கர்த்தரின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன் என்று மேரியின் மகன் இயேசு கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது தெளிவான சூனியம் எனக் கூறினர். (அல்குர்ஆன் 61:6)

நம்பிக்கை கொண்டோரே! மேரியின் மகன் இயேசு சீடர்களிடம் கர்த்தருக்காக எனக்கு உதவுபவர் யார்? எனக் கேட்ட போது நாங்கள் கர்த்தரின் உதவியாளர்கள் என்று சீடர்கள் கூறினர். அது போல் நீங்களும் கர்த்தரின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்! இஸ்ராயீலின் மக்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டனர். மற்றொரு பிரிவினர் (நம்மை) மறுத்தனர். நம்பிக்கை கொண்டோரை அவர்களுடைய எதிரிகள் விஷயத்தில் பலப்படுத்தினோம். எனவே அவர்கள் வெற்றி பெற்றனர். (அல்குர்ஆன் 61:14)

இவ்வேதத்தில் மேரியை பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (மேரி) கூறினார். நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன் என்று அவர் கூறினார். எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்? என்று (மேரி) கேட்டார். அப்படித் தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளையாகும் என உமது இறைவன் கூறுகிறான்' என்று அவர் கூறினார். பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா? என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும் (என்றார்) நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன் என்று கூறுவாயாக! (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். மேரியே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே? என்று அவர்கள் கேட்டனர். ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை (என்றனர்) அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்? என்று அவர்கள் கேட்டார்கள். உடனே அவர் (அக்குழந்தை) நான் கர்த்தரின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை தூதராக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது (என்றார்) இவரே மேரியின் மகன் இயேசு. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே. எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன். ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு என்று தான் அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும். கர்த்தரே எனது இறைவனும் உங்கள் இறைவனுமாவார். எனவே அவரையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி (என்று கூறுவீராக!) (அல்குர்ஆன் 19:16-36)

கர்த்தருக்கு பிள்ளை இல்லை

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)

உஸைர் கர்த்தரின் மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர். கிறிஸ்து கர்த்தரின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். கர்த்தர் அவர்களை அழிப்பார். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? அவர்கள் கர்த்தரையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மேரியின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:30, 31)

கர்த்தர் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டார் என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. கர்த்தரின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா? கர்த்தரின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:68, 69)

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத கர்த்தருக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக! (அல்குர்ஆன் 17:111)

அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை.வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.
(அல்குர்ஆன் 19:88, 93)
அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான். (அல்குர்ஆன் 25:02)

கவனத்தில் கொள்க! கர்த்தர் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தார் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள்.
(அல்குர்ஆன் 37:151, 152)

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாகிய அர்ஷின் இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.
(அல்குர்ஆன் 43:81, 82)

கர்த்தர் மகனை ஏற்படுத்திக் கொண்டார் எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. (அல்குர்ஆன் 2:116)

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:3, 4)

பிதாவின் தேவ வார்த்தையால் அவர் உண்டானார் என்று நீங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம் அதன் காரணத்தால் இயேசு தேவனாகவோ தேவ குமாரனாகவோ ஆக முடியாது என்பதையும் இஸ்லாம் அழுத்தமாகக் கூறி விடுகின்றது.
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! கர்த்தரின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மேரியின் மகன் இயேசு எனும் கிறிஸ்து கர்த்தரின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே கர்த்தரையும், அவரது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. கர்த்தரே ஒரே வணக்கத்திற்குரியவர். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. கர்த்தர் பொறுப்பேற்கப் போதுமானவர். மஸீஹும், நெருக்கமான வானவர்களும் கர்த்தருக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான். நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். கர்த்தரையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காண மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:171-173)

இயேசு சிறந்த மனிதர் என்பதையும் அதே சமயம் அவர் கடவுள் தன்மை பெற்றவர் அல்லர் என்பதையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
மேரியின் (மேரியின்) மகன் கிறிஸ்து தான் கர்த்தர் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். 'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய கர்த்தரை வணங்குங்கள்! கர்த்தருக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை கர்த்தர் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டார். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே கிறிஸ்து கூறினார். மூவரில் (மூன்று கடவுள்களில்) கர்த்தரும் ஒருவர் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். அவர்கள் கர்த்தரிடம் திரும்பி, அவரிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? கர்த்தர் மன்னிப்பவர்; நிகரற்ற அன்புடையவர். மேரியின் மகன் கிறிஸ்து தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!
(அல்குர்ஆன் 5:72-75)

இயேசுவுக்குப் பல சிறப்புக்கள் வழங்கப்பட்டிருந்ததையும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

இதனால் அவர் கடவுளாக முடியாது என்பதையும் திருக்குர்ஆன் கூறுகின்றது.
இயேசு எதைப் பிரச்சாரம் செய்ததாக பைபிளிலிருந்து நாம் நிரூபித்துக் காட்டினோமோ அந்த உண்மையை – கிறித்தவ உலகம் கை கழுவிவிட்ட அந்த உண்மையை – திருக்குர்ஆன் தான் நிலை நிறுத்துகின்றது என்பதற்கு இந்த வசனங்களே சான்று.

இயேசுவுக்கும் இன்னும் பல தீர்க்கதரிசிகளுக்கும் எவ்வளவு தான் சிறப்புக்கள் வழங்கப்பட்டாலும் அவர்களில் யாரும் மனிதன் என்ற நிலையிலிருந்து விடுபட்டுக் கடவுள் என்ற நிலைக்கு உயர முடியாது என்பதை – இயேசுவே பிரச்சாரம் செய்த இந்தக் கொள்கையை – இஸ்லாம் இன்றளவும் பேணிக் காத்து வருகின்றது.

மேரியுடைய மகன் கிறிஸ்து தான் கர்த்தர்  என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். மேரியின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் கர்த்தர் அழிக்க நாடினால் அவரிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி கர்த்தருக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். கர்த்தர் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவர். (அல்குர்ஆன் 5:17)

இயேசுவையும் அவரது தாயாரையும் தேவன் அழித்துவிடுவான் என்பது இதன் பொருளன்று. மாறாக, இயேசுவாகட்டும் அவருக்கு முன் சென்ற தீர்க்கதரிசியாகட்டும், அவருக்குப் பின் வந்த முஹம்மது நபியாகட்டும்! இவர்கள் அனைவரும் தேவனின் அடிமைகள் தாம்.
தேவனுடைய எந்தக் காரியத்தையும் இவர்களில் எவருமே செய்ய முடியாது. இவர்கள் அனைவரையும் சேர்த்து தேவன் அழிக்க நாடினால் அதைத் தடுத்து நிறுத்தவோ தட்டிக் கேட்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை; ஆற்றலும் இல்லை என்பதே இந்த வசனங்களின் கருத்து.
இயேசுவுடைய கொள்கையை – அவரது பிரச்சாரத்தை – கூட்டாமல், குறைக்காமல், சிதைக்காமல் அதே உயிரோட்டத்துடன் திருக்குர்ஆன் இங்கே எடுத்துரைக்கின்றது.

கிறித்தவ நண்பர்களே! பரலோக ராஜ்ஜியத்தில் நீங்கள் நிறுத்தப்படும் போது இயேசு உங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே! என்னை நோக்கிக் காப்பாற்றுமாறு அலறுபவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது. என் பிதாவை நோக்கி இவ்வாறு அழைப்பவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்' என்று இயேசு கூறியதை பைபிளிலிருந்து முன்னர் எடுத்துக் காட்டினோம். இதே உண்மையைத் திருக்குர்ஆனும் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
மேரியின் மகன் இயேசுவே! கர்த்தரையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா? என்று கர்த்தர் (மறுமையில்) கேட்கும் போது, நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார். நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய கர்த்தரை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன் (எனவும் அவர் கூறுவார்) (அல்குர்ஆன் 5:116-118)

கிறித்தவ நண்பர்களே! பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய உங்களுக்கு விருப்பமிருந்தால்….

இயேசுவைச் சிறந்த மனிதராகவும், தேவனின் தீர்க்கதரிசியாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள்! அவரைக் கடவுள் என்றோ, கடவுளின் மகன் என்றோ கூறாதீர்கள்!

இயேசுவின் போதனையைத் தூய வடிவில் கூறி, பதினான்கு நூற்றாண்டுகளாக அதை நிலைநிறுத்தி வரும் தூய இஸ்லாத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! ஜெயம் பெறுங்கள்!

இதனால் இயேசுவை மறந்தவர்களாக, அவரை அலட்சியப்படுத்தியவர்களாக நீங்கள் ஆக மாட்டீர்கள்! மாறாக இஸ்லாத்தில் நீங்கள் இணைவதன் மூலம் இயேசுவை உரிய முறையில் மதிப்பவர்களாகவும், அவரது போதனைகளைத் தூய வடிவில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் ஆவீர்கள். பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய தேவன் அருள் புரியட்டும்! ஆமென்!

 நூலின் பெயர் : இயேசு இறை மகனா?
 ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

நன்றி: www.onlinepj.com

0 Comments:

Post a Comment