Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல கர்த்தரின் திருநாமத்தால்…


இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்த வாதிகளில் ஒருவர்  என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறே இயேசுவை அறிமுகப்படுத்தியுள்ளதால் அப்படி நம்புவது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

இயேசுவை நம்புகின்ற, அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்ற கிறித்தவ சமயத்தினர் இயேசுவைக் கடவுளின் குமாரர் என்றும் அவரே கடவுள் என்றும் நம்பி வழிபட்டு வருகின்றனர்.

உலகின் இரு பெரும் மார்க்கங்களால் ஏற்கப்பட்டுள்ள இயேசுவைப் பற்றிய சரியான முடிவு என்ன? இது பற்றி அலசும் கடமையும், உரிமையும் நமக்கிருக்கின்றது.

குர்ஆனில் இயேசுவைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ள வசனங்களை மேற்கோள் காட்டி ‘இயேசு இறை மகனே’ என்று முஸ்லிம்களையும் நம்பச் செய்யும் முயற்சிகளில் கிறித்தவ சமயத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த அவசியம் மேலும் அதிகரிக்கின்றது.

பைபிளைப் பற்றியும், குர்ஆனைப் பற்றியும் ஞானமில்லாதவர்கள் கூடநியாயமான பார்வையுடன் ஆராய்ந்தால் கடவுளுக்கு மகனிருக்க முடியாது என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.

இப்படித் தெளிவான முடிவுக்கு வர வாய்ப்பிருந்தும் மத குருமார்களால் தவறாக வழி நடத்தப்பட்டு, சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்ற கர்த்தரின் போதனைக்கு மாற்றமாக, கடவுளுக்குக் குமாரனைக் கற்பித்து, பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடையும் வாய்ப்பை கிறித்தவ சகோதரர்கள் தவற விட்டு வருகின்றனர்.

எனவே இயேசு இறை மகனா? அல்லது மனிதரா? என்பதை பைபிளின் துணையுடன் இந்நூலில் விளக்கியுள்ளேன். இந்நூலை நான்கு பகுதிகளாக வகைப்படுத்தியிருக்கிறேன்.

எந்தக் காரணங்களால் இயேசுவை இறை மகன் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனரோ அந்தக் காரணங்களால் ஒருவரை இறை மகன் எனக் கூற முடியாது என்பதை முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.
கடவுளுக்கென சில இலக்கணங்களை பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகின்றது. மனிதனுக்குரிய இலக்கணங்களையும் பைபிள் குறிப்பிடுகின்றது. பைபிளில் கடவுளுக்குரிய இலக்கணங்களாகக் கூறப்பட்ட பல விஷயங்கள் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. அதே சமயம் மனிதனுக்குக் கூறப்படுகின்ற அத்தனை இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன என்பதைஇரண்டாம் பகுதியில் விளக்கியுள்ளேன். இயேசு இறை மகனல்லர்  என்று இறைவனே சில இடங்களில் கூறுவதாக பைபிள் ஒப்புக் கொள்கிறது. இயேசுவும் தாம் இறை மகனல்லர்  என்று பல இடங்களில் வாக்கு மூலம் தந்துள்ளார். இத்தகைய சான்றுகளை முன்னிருத்தி இயேசு இறை மகனல்லர் என்பதை மூன்றாம் பகுதியில் விளக்கியுள்ளேன்.

‘இயேசு இறை மகன்’  என்பதைக் குர்ஆன் ஒப்புக் கொள்வதாக கிறித்தவர்களால் செய்யப்பட்டு வரும் பிரச்சாரத்தின் போலித்தனத்தையும், அவர்கள் எழுப்பும் வாதங்களுக்கான நேர்மையான பதிலையும் இஸ்லாமிய அடிப்படையில் இயேசுவின் நிலை என்ன என்பதையும் நான்காம் பகுதியில் விளக்கியுள்ளேன்.

இந்நூலை விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடும் ஆய்வு நோக்கோடும் வாசிக்கும் கிறித்தவச் சகோதரர்கள் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள்.

இயேசுவைக் கடவுளாகவோ கடவுளின் குமாரராகவோ கருதாமல், அவர் தூய்மையான தீர்க்கதரிசி என்ற உண்மையை உணர்வார்கள்.

இறைவனுக்கு மகனா…?

* இறைவன் தனித்தவன்
* யாரிடமும் எந்தத் தேவையுமற்றவன்
* அவன் யாரையும் பெறவில்லை
* யாராலும் பெறப்படவுமில்லை
* அவனுக்கு நிகராக யாருமே இல்லை
* அவனே அகிலங்களைப் படைத்தவன்
* பரிபாலிப்பவன்
* ஆக்க, அழிக்க ஆற்றலுள்ளவன்
* என்றென்றும் நிலையாக ஜீவித்திருப்பவன்

இதுவே கடவுளைப் பற்றி அறிவுக்குப் பொருத்தமான உண்மை.
கடவுளுக்கு மனைவி, மக்கள், அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்ற உறவினர்களைக் கற்பனை செய்து, கடவுளின் தன்மையை சிலர் மாசுபடுத்துகின்றனர்.

தங்களுக்கு வேதமுண்டு; அது தீர்க்கமான சான்றுகளைக் கொண்டது என்று நம்புகின்ற கிறித்தவச் சகோதரர்களும் இந்த மாயையில் வீழ்ந்து பைபிளின் சான்றுகளுக்கும், இயேசுவின் போதனைக்கும் மாற்றமாக, இறைவனுக்கு மகன் உண்டு  என்று நம்பி வருகின்றனர்.

அவர்களின் நம்பிக்கைப் படி இயேசு கடவுளின் குமாரர் தாமா என்பதை ஆராயும் முன் இறைவனுக்கு மகன் தேவையா என்பதைப் பார்ப்போம்.

கடவுளுக்கு மகன் தேவையில்லை!

யார் மரணத்தையும், முதுமையையும், பலவீனத்தையும் எதிர்பார்க்கிறாரோ அவருக்குத் தான் சந்ததிகள் தேவை!

யார் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் பால் தேவையுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் – தங்களின் தள்ளாத வயதில் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக – வாரிசு தேவை!
மனிதனிடம் இந்தப் பலவீனங்கள் இருக்கும் காரணத்தினால் தான் அவன் வாரிசுகளை விரும்புகிறான்.

மரணமோ, முதுமையோ ஏற்படாது எனும் உத்தரவாதத்துடன் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ஒரு போதும் அவன் வாரிசை விரும்ப மாட்டான். தன் மீது காரணமில்லாமல் சுமைகளை ஏற்றிக் கொள்ளவும் மாட்டான்.
மரணம், முதுமை போன்ற பலவீனங்களை எதிர்பார்த்திருக்கும் போதே, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது சிரமம் என்றெண்ணி இரண்டோடு மனிதன் நிறுத்திக் கொள்கிறான். உருவான கருவைக் கூட கலைத்து விடுகிறான்.

சந்ததிகளால் தனக்கு ஆதாயம் இருக்கிறது என்ற நிலையிலேயே ஒரு அளவுக்கு மேல் குழந்தைகளை விரும்பாத மனிதன், குழந்தைகளால் எந்த ஆதாயமும் இல்லை என்றால் ஒருக்காலும் குழந்தைகளை விரும்ப மாட்டான்.
கடவுளை நம்புகின்ற மக்கள் கடவுளுக்கு மரணம் உண்டு என நம்புவதில்லை.
கடவுள் களைப்படைந்து விடுவார் என்றும் நம்புவதில்லை.

அவ்வாறிருந்தும் கடவுளுக்குச் சந்ததிகளைக் கற்பனை செய்து விட்டனர்.
கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே கடவுளுக்குச் சந்ததி தேவையில்லை என்பதை மறுக்க மாட்டார்.

இயேசு இறை மகன்  என்று நீண்ட காலமாக நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தவர் இது போன்ற தர்க்க வாதங்களுக்காகத் தங்களின் நம்பிக்கையை விட்டு விட மாட்டார்கள்.

எனவே எந்தக் காரணங்களால் இயேசுவை இறை மகன் என நம்புகிறார்களோ அந்தக் காரணங்களை அலசி, அவர்களும் ஏற்கும் வகையில் விளக்கியாக வேண்டும். அவர்களே வேதம் என்று நம்புகின்ற நூலிலிருந்து அதற்குரிய சான்றுகளை எடுத்து வைக்க வேண்டும். அது தான் அவர்களுக்குச் சரியான தெளிவையளிக்கும்.

பகுதி ஒன்று

1 இயேசு என் குமாரன் எனக் கர்த்தர் கூறுவது:

1. இயேசுவைத் தமது குமாரன் என்று கர்த்தரே பைபிளிள் குறிப்பிட்டுள்ளார்.
2. இயேசுவும், கர்த்தரும் ஒன்றுக்குள் ஒன்று என பைபிள் கூறுகிறது.
3. பைபிள் இயேசுவை ஆண்டவர் என்கிறது.
4. இயேசு தந்தையின்றிப் பிறந்தார்.
5. இயேசு ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.
6. இறந்த பின் இயேசு உயிர்த்தெழுந்தார்.
7. இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்.
என்பன போன்ற காரணங்களால் இயேசுவைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ கிறித்தவ மக்கள் நம்புகின்றனர்.

இயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று உரைத்தது. (மத்தேயு 3:17)

என்னுடைய நேச குமாரன் என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்? என்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.
கர்த்தர் தனது நேசகுமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

பைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.

பைபிளில் இறை மகன்' என்று குறிப்பிடப்பட்டவர்கள் பற்றிய விபரத்தைக் காண்போம்.

இஸ்ரவேல் இறை மகன்

அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார். (யாத்திராகமம் 4:22,23)

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான். (எரேமியா 31:9)

இயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும்.

இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. அசரீரியான சப்தம் தான் அவ்வாறு கூறியதாகக் காணப்படுகிறது. அது கடவுளின் சப்தமாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிசாசு கூட இவ்வாறு விளையாடி இருக்க முடியும்.
முன்பொரு முறை பிசாசு இயேசுவைச் சோதித்ததாக மத்தேயு 4:9,10 வசனங்கள் கூறுகின்றன.

ஆனால் இஸ்ரவேலைக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்.

இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்' (சங்கீதம் 2:7)
என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக்குமாரனாய் இருப்பான்.
(முதலாம் நாளாகமம் 17:13)

சாலமோன் இறை மகன்

அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார். (முதலாம் நாளாகமம் 22:10)

எப்ராயீம் இறை மகன்

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான். (எரேமியா 31:9)

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.
(இரண்டாம் சாமுவேல் 7:14)

இயேசு இறை மகன் எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்? இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன் எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானதாகும்.

எல்லா மக்களும் தேவ குமாரர்கள்

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! (உபாகமம் 14:1)

தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார்.
(சங்கீதம் 68:5)
திக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால் அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே! அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே! எங்களுக்கு உதவுங்கள் என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே? அது ஏன்?

இறை மகன் எனும் அடைமொழி கடவுளின் புத்திரர்கள் எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை; இறைவனின் அடியார்கள்  எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
இறை மகன்  என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

இயேசுவின் வாக்கு மூலம்

மேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன் மக்களைக் கடவுளின் புத்திரர்கள்' என்று சொல்லியிருக்கிறார்.

மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார். (மத்தேயு 6:14,15)

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள். (மத்தேயு 5:9)

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். (மத்தேயு 5:45)

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7:11)

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
(மத்தேயு 23:9)

அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். (யோவான் 1:12)

அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள். (லூக்கா 6:35)

பவுல் வாக்கு மூலம்

இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைந்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே. ஆனால் இவர் கூட தன்னையுமறியாமல் இறைவனுக்கு மட்டும் மகனாக இருக்க முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.

நாம் தேவனுடைய சந்ததியராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுத்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
(அப்போஸ்தலர் 17:29)

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி 
கொடுக்கின்றார். (ரோமர் 8:16)

அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார். (இரண்டாம் கொரிந்தியர் 6:18)

* எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.
* இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.
* இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.

இதிலிருந்து குமாரர்  எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதல்வர்கள்  எனும் அர்த்தத்திலே அப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் பிறகும் கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அனைவருமே புதல்வர்கள் தாம் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இறை மகன்  என்பதன் பொருள்

இயேசு இறை மகன் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளார்.. இன்னும் பலரும் இறை மக்கள் என்று கூறப்பட்டுள்ளனர். இதை எப்படிப் புரிந்து கொள்வது?
தங்கள் மனோ இச்சைப் பிரகாரம் விளக்கம் கொடுத்துப் புரிந்து கொள்வதை விட பைபிளின் வெளிச்சத்தில் புரிந்து கொண்டால் தான் பைபிளை மதித்தவர்களாக ஆக முடியும்.
* இறை மகன், இறைக் குமாரன் என்பன போன்ற சொற்களுக்கு இறைவனிலிருந்து பிறந்தவர், அதனால் இறைவனாகவே ஆகிவிட்டவர் என்று பொருள் கொள்வதா?
* அல்லது இறைவன் விரும்பும் விதமாக தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்று பொருள் கொள்வதா?

இதைத் தான் கிறித்தவர்கள் விளங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்!
இறை மகன் என்பது போன்ற சொற்களுக்கு முதலாவது அர்த்தம் இருக்க முடியாது.

கிறித்தவர்களே இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கு அந்தச் சொல் பயன்படுத்தப்படும் போது முதலில் சொன்ன பொருளைக் கொள்வதில்லை. அப்படியானால் அந்தச் சொல்லுக்கு இரண்டாவது பொருளே கொண்டாக வேண்டும். பைபிளும் கூட இதை உறுதி செய்கின்றது.

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
(மத்தேயு 23:9)

பூமியில் உள்ள ஒருவரையும் பிதா – தந்தை என்று சொல்லக் கூடாது என்று இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகிறது. அந்தக் கட்டளையின் பிரகாரம் நம்மைப் பெற்ற தந்தையைக் கூட தந்தை என்று கூறக் கூடாது. அவ்வாறு கூறினால் இந்தக் கட்டளையை மீறுவதாக ஆகும்.
ஆனாலும் ஒவ்வொரு கிறித்தவரும் தனது தந்தையை தந்தை என்று தான் கூறுகிறார்.

அப்படியானால் ஒருவரையும் பிதா என்று கூறக் கூடாது என்ற கட்டளையை அவர் மீறுகிறாரா? என்பதைச் சிந்திக்கும் போது தான் இங்கே பிதா  என்பது எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும் பிதா என்பது இரண்டு பொருளில் பயன்படுத்தப்படும் சொல் என்பதும் புரிகிறது.
படைத்தவன், கடவுள் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு.
பெற்ற தந்தை எனவும் பொருள் உண்டு.

படைத்தவன், கடவுள் என்ற பொருளிலேயே இங்கே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.

பூமியில் உள்ள எவரையும் கடவுள் என்று கூறாதீர்கள். பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்கள் கடவுள் என்று சொல்லிப் பார்த்தால் இதன் அர்த்தம் தெளிவாக விளங்குகிறது.

பூமியில் உள்ள எவரையும் உங்கள் தந்தை என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருப்பவரே உங்கள் தந்தை என்று சொல்லிப் பார்த்தால் அது அனர்த்தம் ஆகிறது.

பள்ளிக் கூடங்களில், அரசு அலுவலகங்களில், வாக்காளர் பட்டியலில், ரேஷன் கார்டுகளில், பாஸ் போர்ட்டுகளில், திருமணப் பதிவேடுகளில் இன்னும் பல சந்தர்ப்பங்களில் உங்கள் தந்தையின் பெயர் என்ன என்று கேட்கப்பட்டால் பரலோகத்திலிருப்பவர் என்று கிறித்தவர்கள் கூறுவார்களா? அல்லது தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரைக் கூறுவார்களா?

நிச்சயமாக தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரையே கூறுவார்கள்! அப்படியானால் பைபிளின் கட்டளையைக் கிறித்தவர்கள் மீறி விடுகிறார்களே! இந்தக் கட்டளையை மீறாமல் உலகில் வாழவே முடியாதே! இப்படித் தான் அவர்கள் கூறப் போகிறார்களா?

நிச்சயமாகக் கூற மாட்டார்கள். பிதா  என்பது கடவுள் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தான் கூறுவார்கள்.
பிதா என்பதற்குப் படைத்தவன்  என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் குமாரன் என்பதற்கு படைக்கப்பட்டவன்  என்ற பொருளைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது.

பிதா என்பதற்கு இறைவன் என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் மகன் என்பதற்கு அடியான் என்பது தான் பொருளாக இருக்க முடியும்.

இந்தச் சாதாரண உண்மையைக் கிறித்தவர்கள் விளங்கிக் கொண்டால் இயேசு இறைவனுக்குப் பிறந்தவர்; அதனால் இறைவனாகவே ஆகி விட்டவர் என்று கூற மாட்டார்கள்! இறை குமாரன் என்று இயேசு குறிப்பிடப்படுவதால் அவரும் இறைவனே என்று நம்புகின்ற கிறித்தவர்களின் நம்பிக்கை எவ்வளவு தவறானது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

பைபிளின் பிரகடணம்

ஒரே கடவுளாகிய கர்த்தர் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். (யாத்திராகமம் 20:3)

என்னையன்றி வேறு தேவர்கள் உனக்கு வேண்டாம் என்ற கர்த்தரின் கூற்று தெரிவிப்பதென்ன? கடவுளாகிய கர்த்தரைத் தவிர வேறு தேவர்கள் கிடையாது என்பது தானே? இதற்கு முரணாக, இயேசு இறை மகன் என்று எப்படிக் கூற முடியும்?

கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது. (உபாகமம் 4:35)

இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.(உபாகமம் 6:4-6)

நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை (ஏசாயா 46:9)என்று கர்த்தர் கூறினார்.

நானும் கடவுள் என்று கர்த்தர் கூறினால் இயேசுவையும் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்புவதில் நியாயமிருக்கும்.

நானே – நான் மட்டுமே – கடவுள் என்ற பைபிளின் இவ்வசனம் இயேசு உள்ளிட்ட எவரும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றது.
எனக்கு இணையில்லை; நிகரில்லை என்ற சொற்கள் இன்னும் இதை அழுத்தமாகக் கூறுகிறது. இதற்கு முரணாக இறை மகன் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவது பைபிளுக்கே முரணாகத் தோன்றவில்லையா?

ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன். (யோவான் 17:3,4) என்று இயேசு கூறினார்.
கிறித்தவர்கள் எந்த இயேசுவைக் கடவுளாகக் கருதி வழிபட்டு வருகிறார்களோ அந்த இயேசு கூறிய போதனை இது!

நான் கடவுள் இல்லை  என்று இயேசு தருகின்ற தெளிவான ஒப்புதல் வாக்கு மூலம் இது.

* மெய்யான ஒரே கடவுளாகிய  என்று அவர் கூறியதன் மூலம் தாம் கடவுள் அல்லர்  என்று ஒப்புக் கொள்கிறார்.
* நீர் அனுப்பினவராகிய இயேசு  என்று அவர் கூறியதன் மூலம் தாம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே என்று ஒப்புக் கொள்கிறார்.
 * நான் செய்யும் படி நீர் எனக்குத் தந்த வேலையைச் செய்து முடித்து என்று கூறுவதன் மூலம் அந்த ஒரே கடவுளின் கட்டளைப்படி நடக்கக் கடமைப்பட்டவன் நான்  என்றும் கூறுகிறார்.
* செய்து முடித்து என்பதன் மூலம் நான் வந்த வேலை முடிந்து விட்டது; இனி என்னை அழைப்பதில் பயனில்லை என அறிவிக்கிறார்.

நான் இறைவனுக்குப் பிறந்தவனுமல்லன்; இறைவனுமல்லன் என்று இயேசு பிரகடனம் செய்ததற்கு முரணாக, இறை மகன் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வது இயேசுவையே அவமதிக்கும் போக்காகக் கிறித்தவர்களுக்கு ஏன் தோன்றவில்லை?

முதன்மையான கற்பனை

போதகரே! நியாயப் பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்மாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூர்வாயாக. இது முதலாம் பிரதான கற்பனை என்றார்.

(மத்தேயு 22:36-38) பாதி இதயத்தையும், பாதி ஆத்மாவையும், பாதி மனத்தையும் இயேசுவுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பது பிரதானமானதும், முதன்மையானதுமான கற்பனையை மீறுவதாகும்.

இறை மகன் என்பதற்கு அவர்கள் கொள்கின்ற பொருள் சரி தான் என்றால் இயேசு இவ்வாறு கூறியிருப்பாரா?

அந்த நாளை குமாரனும் அறியார்

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
(மார்க்கு 13:32) என்று இயேசு கூறினார்.

இயேசுவே கடவுள் என்றால் அந்த நாளும், நாழிகையும் தமக்குத் தெரியாது; பிதாவுக்கு மட்டுமே தெரியும் என்று கூறியிருப்பாரா? கடவுளுக்குத் தெரியாதது என்று ஏதும் இருக்க முடியுமா? கிறித்தவர்கள் சிந்திக்கட்டும்!

கடவுளின் ராஜ்ஜியத்தில் அதிகாரம் இல்லை

அவர் அவளை நோக்கி  உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்றாள்.(மத்தேயு 20:21)

இதற்கு இயேசு கூறிய பதிலென்ன? நான் அவ்வாறு அருளுவேன் என்று கூறவில்லை.

அவர் கூறிய பதில் இது தான்:

அவர் அவர்களை நோக்கி  என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும், என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருள்வது என் காரியமல்ல
என்றார். (மத்தேயு 20:23)

கர்த்தரின் சன்னதியில் அனைவரும் நிறுத்தப்பட்டிருக்கும் அந்நாளில் சொர்க்கத்தை வழங்குவதும், நரகத்தை வழங்குவதும் கர்த்தரின் தனிப்பட்ட அதிகாரம். எனக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று இயேசு அறிவிப்பது கிறித்தவர்கள் உண்மையை விளங்கப் போதிய ஆதாரமாகும்.

கடவுளின் ராஜ்ஜியத்தில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று இயேசு அறிவித்த பின்னரும் இறை மகன் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்டு, இயேசுவிடம் வேண்டுதல் செய்வதும் அவரை வழிபடுவதும் சரி தானா?

கடவுள் அழிவில்லாதவர்; காணப்படாதவர்

நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென்.        (ஒ தீமோத்தேயு 1:17)

கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே! (பைபிள் போதனைப் படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?

இயேசுவைப் பற்றிப் பிடிக்காதே!

இயேசு அவளை நோக்கி, என்னைத் தொடாதே! நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்குப் போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். (யோவான் 20:17)

இயேசுவைப் பற்றிப் பிடித்துக் கொள்வதில் நித்திய ஜீவனை அடைய முடியாது என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவாக விளக்குகின்றது.
பிதா என்பதன் பொருளையும் இயேசுவின் இந்தக் கூற்று தெளிவாக விளக்குகின்றது.

இயேசு மனுஷ குமாரன்

இறை மகன் என்பதை இறைவன் என்று தவறான பொருளில் புரிந்து கொண்ட கிறித்தவர்கள், இயேசு தம்மை மனிதன் என்றும் மனுஷ குமாரன் என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்?
அதற்கு இயேசு,  நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.
(மத்தேயு 8:20)

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.(மத்தேயு 9:6)

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவைன மகிமைப்படுத்தினார்கள்.
(மத்தேயு 9:8)

பின்பு இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். (மத்தேயு 16:13) மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
(மத்தேயு 16:27)
அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும் போது, இயேசு அவர்களை நோக்கி மனுஷ குமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார் எனக் கூறினார். (மத்தேயு 17:22) ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். (மத்தேயு 17:12)

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி, மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். (மத்தேயு 17:9)

அதற்கு இயேசு, மறுஜென்ம காலத்திலே மனுஷ குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரெண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 19:28)
இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷ குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புக் கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து… (மத்தேயு 20:18)

அப்படியே மனுஷ குமாரனும் ஊழியங் கொள்ளும் படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும். (மத்தேயு 24:27)

மனுஷ குமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். (மத்தேயு 26:24)

அதற்கு இயேசு, நீர் சொன்னபடி தான். அன்றியும், மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(மத்தேயு 26:64)

பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷ குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது என்றார்.
(மத்தேயு 26:45) மேற்கண்ட இடங்களில் இயேசு தம்மை மனுஷ குமாரன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சுவிஷேசங்களிலும் பல இடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசுவை இறை மகன் எனக் கூறும் வசனங்களை விட இவை அதிக எண்ணிக்கையிலானவை. இயேசு கடவுள் தன்மை பெற்ற, கடவுளின் மகனாக ஆகி விட்டார் என்றால் அவர் தம்மை மனுஷ குமாரன் என ஏராளமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது ஏன்?
நாம் எடுத்துக் காட்டிய இந்த வசனங்கள் யாவும் இயேசு கடவுளாகவோ, கடவுளுக்குப் பிறந்தவராகவோ, கடவுள் தன்மை பெற்றவராகவோ இருக்கவில்லை என ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.
இவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இறை மகன் என்பதை விளங்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட பைபிள் வசனங்களை நிராகரிப்பதாக ஆகும்.

இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்; இறைவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து வந்த நல்ல மனிதர்  என்று இறை மகன் என்பதைப் புரிந்து கொண்டால் பைபிளின் அனைத்து வசனங்களையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும். கிறித்தவர்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?
இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்னரும் இறை மகன் என்பதை இறைவன் என்று புரிந்து கொள்வதில் கிறித்தவர்கள் பிடிவாதம் காட்டினால் பைபிளில் இறை மகன் எனக் கூறப்பட்ட அனைவரையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவை வழிபடுகின்றவர்கள் கூட இயேசுவைப் போல் இறை குமாரர்கள் தாம்! அப்படித் தான் பைபிள் கூறுகிறது. அவர்களே இறை மக்களாக – அதாவது இறைவனாக – இருக்கையில் இன்னொருவரை வழிபடலாமா? இரண்டு அர்த்தங்களில் அவர்கள் எதை ஏற்றாலும் இயேசுவை அழைக்கவோ, வழிபடவோ எந்த நியாயமும் கிடையாது.

ஒன்றுக்குள் ஒன்று

2. ஒன்றுக்குள் ஒன்று என்றால் கடவுள் எனப் பொருளா? இயேசுவை மட்டும் கடவுளின் குமாரர் என்று நம்பி அவரை வணங்கி வழிபடும் கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரத்தை அலசுவோம்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்
(யோவான் 10:30)
நானும், பிதாவும் வெவ்வேறானவர்கள் அல்லர்; நான் தான் பிதா; பிதா தான் நான்; இருவரும் ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து விட்டோம் என்பது இதன் பொருள். எனவே இயேசுவும் கடவுள் தாம் என்பதும் கிறித்தவர்களின் ஆதாரம்.
இதே கருத்திலமைந்த யோவான் 14:10 வசனத்தையும் அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

இறை மகன் எனும் சொல்லைத் தவறான பொருளில் புரிந்து கொண்டது போலவே நானும் பிதாவும் ஒன்றே எனும் சொல்லையும் கிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கி விட்டனர். இவர்கள் புரிந்து கொண்ட பொருள் தவறானது தான் என்பதை பைபிளின் வெளிச்சத்திலேயே நிரூபிக்க முடியும்.
நான் என் பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். (யோவான் 14:20)

நான் என் பிதாவில் இருக்கிறேன் என்று இயேசு கூறியதால் இயேசுவும், பிதாவும் ஒருவரே எனத் தவறான பொருள் கொண்ட கிறித்தவர்கள், நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறேன் என்று இயேசு கூறியதையும் அதே போன்று விளங்க மறுப்பது ஏன்?
நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறேன் என்று இயேசு கூறியதை மக்களும் இயேசுவும் வேறு இல்லை; மக்கள் தாம் இயேசு; இயேசு தான் மக்கள் என்று விளங்குவார்களா?

இயேசுவும், மக்களும் ஒன்று தான் என்ற நிலைஏற்படுவதுடன் மக்கள் அனைவருமே கடவுள் தான் என்ற விபரீதமும் இதனால் ஏற்படும்.
கிறித்தவர்களின் இந்தத் தவறான போக்கு இயேசுவை மட்டும் கடவுளாக்கவில்லை; மக்களையும் கடவுளாக்கி விடுகின்றது. இதன் விபரீதம் கிறித்தவர்களுக்குப் புரியாமல் போனது ஏன்?
இன்னும் தெளிவாக இயேசு கூறுவதைக் கேளுங்கள்!
நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும் படி நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
(யோவான் 17:21)

இயேசு கடவுளுக்குள்ளும், கடவுள் இயேசுவுக்குள்ளும் இருப்பது போல் மக்களெல்லாம் அவ்விருவருக்குள்ளும் இருப்பதாக இயேசுவே கூறுகிறார்.
அப்படியானால் மக்களெல்லாம் கடவுள்கள் தாம் என்று இதை ஏன் கிறித்தவர்கள் புரிந்து கொள்வதில்லை? அவர்கள் வேதத்திலேயே அவர்களுக்கு நம்பிக்கையில்லையா?
எல்லா மக்களுமே கடவுளர்கள் என்றால் இயேசுவுக்கு இதில் என்ன சிறப்பு இருக்கிறது? மக்களே கடவுளர்களாக இருக்கும் போது யாரையும் அவர்கள் வழிபடுவதில் ஏதேனும் நியாயமிருக்கிறதா? இதைச் சிந்தித்தால் நானும் பிதாவும் ஒன்றே' என்று இயேசு கூறியதன் சரியான பொருளை விளங்கிக் கொள்ளலாம்.

நெருங்கிய நட்பு கொண்ட இருவரைப் பற்றி  இருவரும் இரண்டறக் கலந்து விட்டார்கள் எனக் குறிப்பிடுவது உலகமெங்கும் ஏற்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒரு நபராகி விட்டார்கள். ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவி விட்டனர்  என்று இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இருவருக்கிடையே அதிக நெருக்கம் உள்ளது என்றே இந்தச் சொல்லைப் புரிந்து கொள்வார்கள்.
பைபிளும் கூட இவ்வாறு பொருள் கொள்வதற்கே இடம் தருகின்றது.
இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
(ஆதியாகமம் 2:24)

கணவன் மனைவி இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்பதால் இருவரும் ஒருவர் தாம் என்று புரிந்து கொள்வதுண்டா?
தங்கள் மனைவி சாப்பிட்டதும் தங்கள் வயிறு நிரம்பி விட்டதாக எண்ணிச் சாப்பிடாமல் இருப்பார்களா?
தம் இயற்கைத் தேவையைத் தம் மனைவியை விட்டு நிறைவேற்றுவார்களா?
மனைவி இறந்து விட்டால் அவர்களும் இறந்து விட்டதாக எண்ணிக் கல்லறைக்குள் புதைக்கப்பட்டு விடுவார்களா?மாட்டார்கள்.
கணவன் மனைவி இருவரின் நெருக்கம் மற்றெவரது நெருக்கத்தை விட அதிகமானது என்று தானே இதைப் புரிந்து கொள்வார்கள். இயேசு கூறியதையும் அதே போன்று புரிந்து கொள்வது தானே அறிவுடைமை.
இதனிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள். இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். (மார்க்கு 10:7,8)

புதிய ஏற்பாட்டில் உள்ள இவ்வசனத்தில் இருவராயிராமல்' என்று இன்னும் அழுத்தத்துடன் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு விஷயத்தில் கூட இருவராயிராமல்' எனக் கூறப்படவில்லை. இதை எவ்வாறு கிறித்தவ உலகம் புரிந்து கொள்கிறதோ அவ்வாறு தானே இயேசு கூறியதையும் புரிந்து கொள்ள வேண்டும்?

3. ஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா?

பைபிளில் இயேசு சில இடங்களில் ஆண்டவர் எனவும், தேவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். இதற்கு கடவுள் என்று பொருள்; இயேசு கடவுள் எனத் தெளிவாக குறிப்பிடப்படுவதால் அவர் கடவுள் தாம் என்பது கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரமாகும். இந்த ஆதாரமும் அவரைக் கடவுள் என்று ஏற்பதற்கு உதவப் போவதில்லை. ஏனெனில் பைபிள் இதற்கு மாற்றமாகக் கூறுகிறது.

கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள்
இயசு அவர்களை நோக்கி, நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன். அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என் மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை. நீர் மனுஷனாயிருக்க உன்னை தேவனென்று சொல்லி இவ்விதமாக தேவதூஷனஞ் சொல்லுகிறபடியினால் உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவ வசனத்தை பெற்றுக் கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க வேதவாக்கியமும் தவறாததாயிருக்க. (யோவான் 10:32-35)

இயேசு மனிதராயிருந்தும் ஆண்டவர் எனக் கூறிக் கொண்டதால் யூதர்கள் அவரைக் கல்லெறியத் திட்டமிட்டார்கள். இதற்கு இயேசு பதிலளிக்கும் போது கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள் எனக் கூறுகிறார். கடவுள் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையைத் தாம் பயன்படுத்தவில்லை. தேவர்கள் என்றால் கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் என்பதே பொருள் எனத் தெளிவுபடுத்துகிறார்.

பைபிளில் பயன்படுத்தப்படும் ஆண்டவர்  தேவர் என்பது போன்ற பதங்கள் கடவுளின் தூதர்கள் , கடவுளின் வார்த்தையைப் பெற்றவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இது சரியான சான்றாகும்.

இயேசு, தேவர் எனத் தம்மைக்கூறிக் கொண்டது கடவுள் என்ற அர்த்தத்தில் தான் என்று கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அதற்கும் மேற்கண்ட வசனத்தில் போதுமான மறுப்பிருக்கின்றது.

நான் மட்டும் தேவனல்லன்; கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்ட அனைவருமே தேவர்கள் தாம் என இயேசு குறிப்பிடுகிறார்.

எண்ணற்ற தேவர்கள்

மோசே, ஆபிரகாம், தாவீது, சாலமோன் மற்றும் பல தீர்க்கதரிசிகளும் இறை வார்த்தையைப் பெற்றவர்கள் என பைபிள் கூறுகிறது.

அப்படியானால் அவர்களையெல்லாம் கடவுள்கள் என்று கூறாத கிறித்தவர்கள் இயேசுவை மட்டும் கடவுள் எனக் கூறுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

மோசேயும் தேவர்

கர்த்தர் அவனிடம் மோசேயை நோக்கி  பார்! நான் உன்னைப் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். (யாத்திராகமம் 7:1)

மக்களும் தேவர்கள்

நீங்கள் தேவர்களென்றும் நீங்களெல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
என்று தாவீது தம் சமூகத்தாரிடம் கூறியிருக்கிறார்.
(சங்கீதம் 82:6) தேவர்கள் எனும் சொல் இயேசுவுக்கு மட்டுமின்றி மோசேவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எல்லா மக்களுக்கும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசுவை வழிபடக் கூடியவர்களும் கூட தேவர்களாக இருக்கும் போது இயேசுவை வழிபடுவது என்ன நியாயம்? இயேசுவுக்கு இதில் சிறப்பு என்ன இருக்கிறது?

கிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கிக் கொண்ட ஆண்டவன் என்ற அதே வார்த்தை இன்னும் எத்தனையோ மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுகிறது!

மன்னரும் ஆண்டவரே

அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ராஜ சமூகத்தில் நின்று அவருக்குப் பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு… (முதலாம் ராஜாக்கள் 1:2)
இங்கே மன்னர் ஆண்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வீட்டு எஜமானரும் ஆண்டவரே

வீட்டு எஜமானன் எழுந்து கதவைப் பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்கு திறக்க வேண்டுமென்று… (லூக்கா 13:25)
இவ்வசனத்தில் வீட்டு எஜமானர்கள் ஆண்டவர் எனக் கூறப்படுகின்றனர்.
மத்தேயு 25:11 ஐயும் பார்க்க!

கணவரும் ஆண்டவரே

அந்தப் படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்தாள்… (ஒ பேதுரு 3:6)
இங்கே கணவர் ஆண்டவர் எனக் கூறப்படுகிறார்.

நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள்

நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல்…
(முதலாம் ராஜாக்கள் 1:11)
இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி!
(ஆதியாகமம் 32:18)

நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள் என இங்கே குறிப்பிடப்படுகின்றனர்.
ஆண்டவர் எனும் சொல்

கணவன்
எஜமான்
தலைவன்
நல்லவன்

ஆகியோருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இந்த வசனங்கள் நன்கு விளக்குகின்றன.
இன்றைக்குக் கூட கத்தோலிக்கர்கள் தங்கள் தலைமை குருவை போப் ஆண்டவர் எனக் கூறுவதில்லையா? அவரும் இயசுவைப் போல் கடவுள் தாமா?

இயசுவை ஆண்டவர் என பைபிள் கூறுவதால் அவர் கடவுளே எனக் கிறித்தவர்கள் கூறுகின்ற இந்த வாதமும் அர்த்தமற்றது என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

4. தந்தையின்றிப் பிறந்தால் கடவுளா?

இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் கடவுள் தாம்  எனக் கிறித்தவர்கள் காரணம் காட்டுகின்றனர்.

இந்த வாதமும் அறிவுடையோர் ஏற்கக் கூடிய வாதமன்று. இயேசுக்குத் தந்தையில்லை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
தந்தையின்றிப் பிறந்தார் என்பதில், தந்தையின்றி என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து அவரைக் கடவுளாக்க முயற்சிக்கும் கிறித்தவர்கள், பிறந்தார் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதில்லையே அது ஏன்?

பல ஆண்டுகள் இல்லாமல் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் அவர் தோன்றியுள்ளார் என்பது தானே பிறந்தார் என்பதன் பொருள்.

பல ஆண்டு காலம் இல்லாமலிருந்தார் என்பது கடவுளுக்குப் பொருந்தக் கூடியது தானா? பல ஆண்டுகள் இல்லாமலிருந்தவர் கடவுளாக முடியுமா? கடவுள் பல ஆண்டுகள் இல்லாமல் இருந்தால் உலகம் என்னவாகும்?

தந்தையின்றிப் பிறந்தார் என்ற சொல்லே இயேசு கடவுளில்லை; பிறந்தவர் தாம் – மனிதர் தாம் – என்பதை நன்கு விளக்கவில்லையா?

தந்தையின்றிப் பிறந்தார்  என்ற கூற்றில் தந்தையின்றி  என்ற வார்த்தைக்குக் கூட உரிய அழுத்தத்தைக் கொடுத்தால் இயேசு கடவுள் கிடையாது என்பது கிறித்தவர்களுக்குத் தெரிய வருமே!

தாயின்றிப் பிறக்கவில்லை என்ற கருத்தையே தந்தையின்றி என்ற வார்த்தை தருகிறது. அவர் ஒரு தாய்க்குப் பிறந்தார் என்று தெளிவாகவும் பைபிள் கூறுகிறது.

கடவுள் என்பவனுக்குத் தந்தை தான் இருக்கக் கூடாது; தாய் இருக்கலாம் என்பது தான் கடவுளுக்குரிய இலக்கணமா? அப்படியானால் பரமபிதாவுக்கு – கர்த்தருக்கு ஒரு தாய் இருக்கிறார் என்று கிறித்தவர்கள் கூறப் போகிறார்களா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

தந்தையில்லாமலிருப்பதால் மட்டும் ஒருவர் கடவுளாகி விட முடியாது என்பதே உண்மையாகும். பைபிளே இதை ஒப்புக் கொள்கிறது.

தந்தையில்லாதவர் பலர்

ஏனோஸ் சேத்தின் குமாரன். சேத் ஆதாமின் குமாரன். ஆதாம் தேவனாலே உண்டானவன் என்று பைபிள் கூறுகிறது.
(லூக்கா 3:38)  தந்தையின்றிப் பிறந்ததால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் தந்தையுமின்றி, தாயுமின்றி, கருவறை வாசமுமின்றி, தேவனாலே நேரடியாக உண்டாக்கப்பட்ட ஆதாமுக்குக் கடவுளாக அதிகத் தகுதி இருக்கிறதல்லவா? அவரை ஏன் கடவுள் என்றோ, கடவுளின் மைந்தன் என்றோ கிறித்தவர்கள் நம்பவுது இல்லை?

இயேசுவை விடப் பெரிய கடவுள் என்று சொல்லப்படுமளவுக்கு ஆதாமிடம் நியாயமிருந்தும் கூட இயேசுவுக்குச் சமமான கடவுளாகக் கூட ஆதாமை ஏற்காமலிருப்பது கிறித்தவர்களுக்கு முரண்பாடாகத் தோன்றவில்லையா?
ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன், சுத்தமாய் இருப்பது எப்படி? (யோபு 25:4)
இயேசு ஒரு ஸ்திரீயிடம் பிறந்துள்ளதால் தூயவரல்லர்' என்று இவ்வசனம் கூறுகிறது.

ஆனால் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இந்தப் பலவீனம் இல்லை. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப் பண்ணினார். அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர், தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். (ஆதியாகமம் 2:21,22)

மனிதர் அனைவரிடமும் காணப்படுகின்ற ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் என்ற நிலை இவ்விருவருக்கு மட்டுமே இல்லை. இயேசு ஸ்திரீயிடம் பிறந்ததால் அவர் சுத்தமில்லாதவர் என்று பைபிள் கூறுகிறது. சுத்தமில்லாதவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?

பைபிளின் போதனைக்கே முரணாகக் கிறித்தவர்கள் நடக்கிறார்கள் என்பதை இது உணர்த்தவில்லையா?

மெல்கிசேதேக்கு என்பவனைப் பற்றி பைபிள் கூறுகிறது. இவன் கடவுளாகக் கருதப்பட இயசுவை விட அதிகம் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.

இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான். ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர் கொண்டு போய் அவனை ஆசீர்வதித்தான். (எபிரேயர் 7:1)

ஆபிரகாமுக்கே ஆசி வழங்கக் கூடிய தகுதி பெற்ற இவன் யார்? எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவன்? இதோ பைபிள் கூறுகிறது,

இவன் தகப்பனும், தாயும், வம்ச வரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். (எபிரேயர் 7:3)

இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள். கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாம் முதலாய்க் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்கு தசம பாகம் கொடுத்தான். (எபிரேயர் 7:4)

தகப்பன் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக இயேசு இறைவனுக்கு மகனாகி விட்டார் என்று நம்புகின்ற கிறித்தவர்களால்

* தகப்பனுமில்லாத
* தாயுமில்லாத
* வம்ச வரலாறு கூட இல்லாத
* ஆரம்பமும், முடிவும் இல்லாத
* என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய
* எவ்வளவு பெரியவன் பாருங்கள்' என பைபிளே வியக்கக் கூடிய
 
மெல்கிசேதேக்கு என்பவன் கடவுளாகக் கருதப்படவில்லையே! அது ஏன்?
பைபிளில் கூறப்படும் எவரையாவது கடவுள் என்று நம்ப வேண்டுமானால் – அது கடவுளால் அனுமதிக்கப்பட்டதாக இருக்குமானால் – அதற்குரிய முழுத் தகுதியும் மெல்கிசேதேக்குவிடம் இருக்கிறது.

இவனுடன் ஒப்பிடும் போது இயேசு எத்தனையோ மடங்கு குறைந்த தகுதியுடையவராகத் தென்படுகிறார். ஆனாலும் இவைனக் கூட கடவுளின் மகன் எனக் கிறித்தவர்கள் கூறுவதில்லை. இவன் பெயர் கூட கிறித்தவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது என்பது தனி விஷயம்.

கடவுளுக்கு மகனிருக்க முடியாது.

எவரும் கடவுளின் தன்மையைப் பெற முடியாது.
கடவுள் கடவுள் தான்.
மனிதன் மனிதன் தான்

என்று மனசாட்சி தீர்ப்பு வழங்குவதால் ஆதாம், ஏவாள், மெல்கிசேதேக்கு ஆகியோரைக் கடவுளர்கள் என்று கிறித்தவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

ஆனால் இயேசு விஷயத்தில் மட்டும் தங்கள் மத குருமார்கள் போதித்த தவறான போதனைகளின் காரணமாக சிந்திக்க மறுக்கிறார்கள்!

பைபிளின் மீது கிறித்தவர்களுக்கு பரிபூரண நம்பிக்கை இருக்குமானால் இம்மூவரையும் பெரிய கடவுளர்களாகவும் இயேசுவை அவர்களை விட மிகச் சிறிய கடவுளாகவும் தான் ஏற்க வேண்டும்.

அல்லது கர்த்தராகிய ஒருவரைத் தவிர வேறு எவரும் கடவுளாக முடியாது என்று நம்ப வேண்டும்.

இதை விடுத்து இயேசுவையும், இம்மூவரையும் பிரித்துப் பார்த்தால் பைபிள் மீது கிறித்தவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது.
நன்றி: www.onlinepj.com

0 Comments:

Post a Comment