Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

அமெரிக்காவும் மேற்கத்திய தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்னர் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் அடிமை வியாபாரப் போக்குவரத்துக்கள் நடந்து வந்தது. ஆப்பிரிக்காவின் கடற்கரை ஓரங்களுக்கு அதன் உட்பகுதியிலிருந்து கருப்பர்கள் பிடித்து வரப்பட்டு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். எனவே அந்தக் கடற்கரைகள் ”அடிமைக் கடற்கரைகள்” என்றே அழைக்கப்பட்டன.

ஒரே ஒரு நூற்றாண்டிற்குள் (1680லிருந்து 1786வரை) குடியேற்ற நாடுகளுக்காக பிரிட்டானியர் அடிமைப்படுத்திய மனிதர்களின் எண்ணிக்கை, ஆங்கிலேய நூலாசிரியர்களின் கணக்குப்படி இரண்டு கோடி ஆகும். ஓராண்டு காலத்தில் 1790ல் மட்டும் 75,000.

அந்த அடிமைகளை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் சிறியதாகவும், அசுத்தமானவையாகவும் இருந்தன. அந்த ஆப்பிரிக்க மக்கள் கப்பலில் சரக்கு வைக்கப்படும் பகுதியில் ஆடு மாடுகளைப் போல் அடைக்கப்பட்டார்கள். அவ்வறைகளின் கூரையைத் தொடுமளவிற்கு ஒருவர் மீது ஒருவராகத் திணிக்கப்பட்டார்கள். 

அவர்களில் பெரும்பாலானோர் மரத்தாலான சிறு அறைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அதில் அவர்களால் அசையக்கூட முடியாது. ஏனென்றால் அச்சிற்றறைகளின் அகலம் 18 அங்குலம்தான். இவ்வாறு ஒருவரின் தலைக்கு மேல் இன்னொருவராக அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முறையான உணவோ, நோய் அல்லது காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைகளோ வழங்கப்படவில்லை.

அடிமைத் தொழிலுக்கும் கட்டாய வேலைக்கும் பிடிக்கப்பட்ட மனிதர்களில் 20 சதவிகிதத்தினர் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கடற்கரைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணமடைந்ததாக மேலை நாட்டு நூலாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

அடிமை வியாபாரம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளால் பிடிக்கப்பட்ட மனிதர்களின் மொத்த எண்ணிக்கை பத்து கோடியாகும். என்று கணக்கிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அடிமை முறையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று ஓயாது வாய்கிழிய அவதூறு பேசுவோரின் வரலாறுதான் இது. 

”உலகில் அடிமை முறையை ஒழித்தவர்கள் நாங்கள் தாம்” என்று மேலை நாட்டினர் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். அதற்கு முன்னால் மேற்கத்திய வல்லரசுகள் ஆப்பிரிக்காவில் பெருமளவில் நுழைந்து அங்கு வாழ்ந்த சுதந்நிர மனிதர்களைப் பிடித்து அடிமைப்படுத்தி தங்கள் புதிய குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள் என்பதை நினைவு கூர்ந்து இனி இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகளைப் பார்ப்போம். 

இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகள்.
 
//அடிமைகளை வைத்துக் கொள்,அடிமை முறை இருக்கட்டும் ஆனால் அழைக்கும் போது அடிமை என்று அழைக்காதே என்பது அடிமை முறையை அழிக்க உதவுமா. யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவதுதானே சரியானதாக இருக்கும்.இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.// 

இஸ்லாம்தான் உலகில் அடிமை முறையை உருவாக்கியது என்பது தவறானக் கருத்தாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய காலத்தில் அந்த மக்களிடையே அடிமை வழக்கமிருந்தது. அதற்கும் முன்னும் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்திலும் அடிமை முறைகள் இருந்திருக்கிறது என்றும் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆகவே அடிமை முறையை இஸ்லாம் உருவாக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கெனவே இருந்த அடிமை வழக்கத்தை இஸ்லாம் அங்கீகரித்து – அடிமைகளை விடுதலை செய்வதை வலியுறுத்தி – அம்முறையைப் படிப்படியாக குறைக்கத் தூண்டியது. எந்த அளவுக்கு தூண்டியது என்றால் – அடிமைகளை விலை கொடுத்து வாங்க வசதிபெற்ற – நபித்தோழர்கள் விலை கொடுத்து வாங்கி பிறகு விடுதலை செய்து, அடிமைகளை சுதந்திர மனிதர்களாக ஆக்கினார்கள். எனவே அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாத்தில் கருத்து வேறுபாடு இல்லை.

தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே போர் கைதிகளை மட்டும் அடிமைகளாக்கிக் கொள்வதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. போரில் சிறைப் பிடித்தக் கைதிகளை அடிமைகளாக்கிக் கொள்வது அன்றைய சமூகங்களின் வழக்கமாகவும் இருந்தது. போரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

1. பிடிபட்டக் கைதிக்குப் பகரமாக பணயத்தொகைப் பெற்றுக்கொண்டு அந்த கைதியை விடுதலை செய்தார்கள்.
2. போர் கைதிக்கு பகரமாக போர்கைதியை மாற்றிக்கொண்டார்.
3. போர் கைதிகளை அடிமைகளாக – அடிமைச் சந்தையில் விற்று விடுவார்கள்.
4. போர் கைதிகளிடம் வேலையை வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக அவர்களை பராமறித்துக் கொண்டார்கள்.

இதுதான் அன்றையப் போர்களில் பிடிபட்ட கைதிகளின் நிலையாக இருந்தது. இதில் முஸ்லிம்கள் மட்டும் பிடிபட்ட போர் கைதிளை .//யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்// என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது கவ்வைக்குதவாத, வாதமட்டுமல்ல, முஸ்லிம்களை கருவறுக்கச் செய்யும் வழியுமாகும். 

எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை ”நீயும் நானும் சமம்” என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். இப்படி ஒரு படுபாதக நிலை இருப்பதோடு, ”நீயும் நானும் சமம்” என்று போர் கைதிகளை உட்கார வைத்து விருந்தும் போட முடியாது. இப்படி நியாயமான காரணங்களால் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்வதை மட்டும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

சுதந்திரமான தனி மனிதனின் உரிமையில் தலையிட்டு, அவனின் உரிமையை நசுக்கி அடிமையாக்கி தொழில் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை மாறாக, அதை வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.. மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” (நபிமொழி புகாரி 2227)

அடிமைகள் பற்றி திருக்குர்ஆன் இரு வசனங்கள்:.
 
4:36.மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

24:32.இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான .உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

நன்றி: http://www.islamkalvi.com/

0 Comments:

Post a Comment