Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் தேர்ந்தெடுத்து, இறைத்தூதர்களின் வழியாக ஆன்மீகப் போதனைகள் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறை வழிகாட்டியாக, இறைத்தூதர்கள் கொண்டு வந்த வேதங்களில் ”முந்தய வேதங்கள் ஏன் பாதுகாக்கப்படவில்லை?” என்ற கேள்விக்கு ”திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?” என்ற தலைப்பில் விளக்கம் எழுதியிருந்தோம்.

சகோதரர் எழில் என்பவர் நாம் எழுதிய விளக்கத்தைப் படித்து விட்டு இறைவனுக்கு அறிவுரை வழங்கும் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். பொதுவாக கடவுளைப் படைப்பவர்களுக்கு கடவுளுக்கே அறிவுரை சொல்வது பெரிய விஷயமில்லை. அதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் ஆதரிக்கிறது. ஆதரிக்கட்டும் அதிலே நமக்கு ஆட்சேபனை எதுவுமில்லை! அவர் பதித்துள்ளக் கருத்துக்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது?  என்ற விளக்கத்திற்கு எதிர் கருத்துக்கள்...
****************************************************
//இந்த காரணத்தைப் பார்ப்போம்.
அல்லாவுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று வைத்துக்கொள்வோம்.

அதனால் சீரழிக்கப்பட்டபின்னர் அதனை சரிக்கட்ட இன்னொரு இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலைக்கு வருகிறார்.
ஆனால், அல்லா எல்லாம் அறிந்தவர் என்றே கூறப்படுகிறது.
அல்லா எதிர்காலம் அறிந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.
எதிர்காலம் அறிந்த அல்லா, இது போல மனிதர்களின் சொந்தக்கருத்து திணிக்கப்பட்டு தான் அனுப்பிய வேதம் சீரழிக்கப்படும் என்று தெரிந்தவராகவே இருப்பார். ஆனால், அல்லா அதனை ஒன்றும் தடுக்கவில்லை. சீரழிக்கப்படக்கூடாது என்று உண்மையிலேயே அல்லா விரும்பியிருந்தால், எல்லாம் வல்ல அல்லாவால் அந்த பழைய வேதங்கள் சீரழிக்கப்படாமல் தடுக்க முடிந்திருக்கும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ஆகவே சீரழிக்கப்பட்டதற்கு அல்லாவே காரணம் என்று கூறலாம்.
ஆகவே இவ்வாறு வேதங்கள் மாற்றப்பட்டதற்கு அந்த வேதங்களை பின்பற்றுபவர்களை குறை சொல்வது முட்டாள்த்தனம்.//
****************************
//ஏன் ஒரு காலத்தில் விலக்கி வைக்கப்பட்டவை பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும்? அல்லது முன்னர் அனுமதிக்கப்பட்டவை ஏன் பின்னர் விலக்கி வைக்கப்பட வேண்டும்? இந்த பிரச்னையை விவாதம் இல்லாமல் முந்தைய வேதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டு விடலாமே? அதாவது, இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள். இந்த வருடத்திலிந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்ற வேண்டாம். இந்த ஊரில் இருந்தால், இதனை பின்பற்றவேண்டாம் என்று முதலாவதாக கொடுத்த வேதத்திலேயே சுத்தமாக எழுதி வைத்துவிட்டு அந்த வேதத்தை மக்கள் சீரழிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாமே?//
*****************************
//மிகச்சரி. ஆனால், இது ஆட்சியாளராக வெவ்வேறு நபர்கள் வருவதால் நடக்கிறது. ஆனால், உலகத்து மக்களுக்கு வாழும்முறை எழுதித்தரும் அல்லா, ஒரே மாதிரியான மாற்றமில்லாத வேதத்தை கொடுத்து அதனை பாதுகாத்திருக்கலாமே?//
*******************************
//மாற்றமில்லாத ஒரே ஒரு வேதத்தை எந்த இறைதூதர் இடையூறும் இல்லாமல் ஒரு புத்தகத்தில் எழுதி, அதனை யாரும் எபோதும் படித்துக்கொள்ளலாம் என்று மனிதர்களின் மூளையில் மாற்றமுடியாதபடி செருகி விட்டால், இந்த இறைதூதர் பிரச்னையே இல்லையே? இறைதூதர் இப்படி நடந்துகொண்டார் அதனால் இந்த வேதம் சரியல்ல என்று மக்கள் கூற எந்த விதமான காரணமும் இல்லாமல், எல்லோரும் சரியாக தெரிந்துகொண்டிருப்பார்களே!// – எனக்குத் தேவையில்லாத வேலை.
********************************
//நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே! இன்று ஒவ்வொரு இறைதூதரின் பின்னால் நிற்பவர்களுக்கும் பின்னால் வந்த இறைதூதரை இறைதூதர் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றும் அல்லது அதனைப் பற்றி விவாதம் செய்வதற்கும் இடமில்லாமல் போயிருக்குமே!//
**********************************
இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?//
//இதனை முன்னமே செய்திருக்கலாம்!// 
***********************************
பொதுவாக, ”அனைத்தையும் அறிந்தவன் இறைவன்” என்றால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துகிற மாதிரி சட்டங்களைக் கொண்ட – முழுமை பெற்ற ஒரே வேதமாக வழங்கிருக்கலாமே, அப்படி ஏன் செய்யவில்லை? இதைத்தான் மேலேயெழுப்பியுள்ள கருத்துக்களின் சராம்சம்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

இன்று கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் இதே சட்டம்தான், ஆண், பெண் என ஒரேயொரு ஜோடியாக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.

முதல் மனிதராகவும், முதல் நபியாகவுமிருந்த ஆதாமிற்கும், அவருடைய மனைவி ஏவாளுக்கும் வழங்கப்பட்ட சட்டம், இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.

முதல் நபி, இறுதி நபி, இந்த இரு நபிகளுக்குமிடையே – எவ்வளவு கால வித்தியாசங்கள். இதற்கிடையில் எத்தனை இறைத்தூதர்களின் வருகைகள் – காலத்திற்கேற்ப சட்டங்களை ரத்து செய்யப்பட்டும், புதிய சட்டங்கள் சேர்க்கப்பட்டும் வேதங்களை வழங்கி, சூழ்நிலைக்குத் தக்கவாறு இறைச் சட்டங்களை மக்களுக்கு அறிவிக்க, இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தது ”இறைவன் அனைத்தையும் அறிந்தவன்” என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

தனி மனிதர், ஒரு குடும்பம், ஒரு கூட்டம், ஒரு ஊர், ஒரு தேசம், பிறகு உலகம் இப்படித்தான் இறைச் சட்டங்கள் விரிவாக்கப்பட்டன. படிப்படியாகத்தான் விரிவாக்கப்பட வேண்டும். அதுதான் அனைத்தையும் அறிந்தவன் வகுத்த சட்டங்களாக இருக்க முடியும். மண்ணுலகில் ஒரு தனி மனிதர் ஒரு குடும்பம் மட்டும் இருக்கும் போது அங்கு ஆட்சியின் சட்டங்கள் அவசியமில்லை.

முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதாம் (அலை) அவர்களின் நேரடி முதல் சந்ததிகளுக்கு சகோதரியைத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தால் மனித இன மறு உற்பத்தி ஏற்படாமல் அழிந்து போய் விடும் என்பதால் சகோதரியைத் திருமணம் செய்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. மனித இனம் பெருகியபோது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு, திருமண உறவில் மாற்றங்கள் செய்யப்பட்டது. 

மனிதனில் பலம், பலவீனம் இதை அடிப்படையாகக் கொண்டே முன்பு அனுமதிக்கப்பட்ட இறைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டங்கள் இலகுவாக்கப்பட்டன. மூஸா (அலை) அவர்களின் சமூகத்திற்கு ஒரு நாளைக்கு 50 நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்தன. 50 நேரத் தொழுகையைக் குறைத்து, முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு ஒரு நாளைக்கு 5 நேரத் தொழுகையாகக் கடமையாக்கப்பட்டது.

காரணம் மனிதனின் பலவீனம். இன்றைய மனிதன் ஒரு நாளைக்கு 24மணி நேரம் போதவில்லை என்று சொல்லுமளவுக்கு அவசர உலகில் வாழ்ந்து வருகிறான். முந்தய சமுதாயத்துக்கு கடமையாக்கப்பட்ட 50 நேரத் தொழுகையே இவனுக்கும் கடமையாக்கப்பட்டால் நிறைவேற்ற இயலாது. முந்தய சமுதாயத்திலிருந்து பிந்தய சமுதாயங்கள் அனைத்து உலக விஷயங்களிலும் வேறுபாடுவார்கள் என்பதால் எல்லாக் காலங்களிலும், எல்லா சமுதாயத்துக்கும் ஒரே சட்டம் என்பது அனைத்தையும் அறிந்த இறைவனால் வகுத்த இறைச் சட்டமாக இருக்க முடியாது.

இஸ்லாம், எக்காலத்திலும் ஓரிறைக் கொள்கையில் எந்த மாற்றம் செய்திருக்கவில்லை. மனித வாழ்க்கை நெறியின் சட்டங்களில் சில சீர்திருத்தங்களைச் செய்தது, ஓரிறைக் கொள்கைக்கு எந்த விதத்திலும் பங்கம் எற்படுத்தியதாகாது! 

//இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?// – மீண்டும் ஒரு அறியாமையின் வெளிப்பாடு!

அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய வேதப் புத்தகம் திருக்குர்ஆன்! உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் திருக்குர்ஆன் தான் வேதவாக்கு! அதற்கு மேல் உயர்வான ஒரு வாக்கும் இல்லை, என்பதும் முஸ்லிம்களின் ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை! 

திருக்குர்ஆனை நிராகரித்தோரை அது எச்சரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறது. நிர்ப்பந்தம் செய்து எவரையும் நம்பிக்கைக் கொள்ளச் சொல்லவில்லை. திருக்குர்ஆன் இறுதி வேதம் என்பதற்கு திருக்குர்ஆனை விட வேறு சான்றுகள் முஸ்லிம்களுக்குத் தேவையில்லை! 

இறைவனின் நியதி!

அனைத்தையும் அறிந்த இறைவன், தனக்கென சில நியதிகளை வகுத்துக் கொண்டிருக்கிறான். இறைவன் தனக்குத் தானே விதித்துக் கொண்ட அந்த நியதிகளை எவருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

நன்றி: http://www.islamkalvi.com/   

0 Comments:

Post a Comment