Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இஸ்லாம் மார்க்கத்தை விமர்சிக்கப் புறப்பட்டவர் 15.09.2006 நாளில் திண்ணைக் கட்டுரையில் கீழ்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

//(இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது. உதாரணமாக இறுதித்தீர்ப்பு நாளில் எல்லா நபிகளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகமதுவுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும். அவரே சிபாரிசு செய்யும் வல்லமை கொண்டவராகத் திகழ்வார். இந்த சிபாரிசின் மூலம் இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார். ஆனால், முகமதுவை ஏற்காதவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் முஸ்லிமாக இல்லாமல் போனதற்காக – முகமதுவின் மூலம் வெளிப்பட்ட ஏக இறைவனின் கட்டளைகளை ஏற்காது போனதற்காக நரகத்தீயில் வாட்டப்படுவர் – தவித்த வாய்க்கு தண்ணீர் கூட அங்கு தரப்படமாட்டாது- கொதிக்கும் எரிக்குழம்பே வாயில் ஊற்றப்படும் என்று தெரிவிக்கின்றது இஸ்லாம்).//

”இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது.” எப்படி இருக்கிறது பாருங்கள். இதைப் படித்து விட்டு நாலு கிறிஸ்தவர்கள் ”அப்படியா” என்று வரமாட்டார்களா என்ற தொனி தெரியவில்லையா? பின்னே நபிமார்களிடையே வேற்றுமை பாராட்டக்கூடாது என்று சொல்லியிருக்கும் இஸ்லாத்தின் மீது இப்படி ஒரு அவதூறைச் சுமத்துவதால் எதை எதிர்பார்க்கிறார் கட்டுரையாளர்..?
நபிமார்கள் அனைவரையும் நம்புவது நம்பிக்கையோடு தொடர்பு கொண்டதாக இஸ்லாம் கூறுகிறது.

2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
இங்கே, திருக்குர்ஆனை நம்புவதோடு மட்டும் நம்பிக்கை முடிந்து விடவில்லை. மாறாக திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் அருளப்பட்ட எல்லா வேதங்களையும் நம்ப வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது. முந்திய வேதங்களை நம்ப வேண்டும் என்ற கட்டளையில், முந்திய வேதங்கள் அருளப்பட்ட நபிமார்களையும் நம்ப வேண்டும் என்ற கட்டளையும் அடங்கி விடுகிறது.

நபிமார்களிடையே பாகுபாடுக் காட்டக்கூடாது, திருக்குர்ஆன் இப்படி சொல்கிறது…

2:136. (முஃமின்களே!)”நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம். இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.

2:285. (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார். (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர், இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ”நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம், (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
3:84. ”அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

நபிமார்களைப் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று எவ்வளவு அழுத்தமாகச் சொல்லித் தருகிறது மேற்கண்ட வசனங்கள். இறைத்தூதர்கள் என்ற பதவியில் அனைவரும் ஒரே தகுதியுடையவர்களே அதில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட தூதுப் பணிகளை அவர்கள் எவ்வித குறைபாடுமின்றி நிறைவேற்றினார்கள். தூதுப் பணிக்காக மக்களிடம் எவ்விதக் கூலியும் பெறவில்லை, எவரிடமும் விலை போகவில்லை. என்று நபிமார்கள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இறைத் தூதர்கள், குடும்பம், உறவினர்கள், தோழர்கள், ஊர் மக்கள் மட்டுமல்ல, தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதங்கள் இல்லாமல் இறைத் தூதுச் செய்திகளை எத்தி வைத்தார்கள். – (தூதுச் செய்தியை எத்தி வைக்கும் ஒரு பகுதிதான், அயல் நாட்டு மன்னர்களுக்கு இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைத்து எழுதிய கடிதங்களாகும். இது பற்றி வேறு பதிவுகளில்… இன்ஷா அல்லாஹ்) – பிற சமூகத்தவர்களுக்கும் இறைச் செய்தியை எடுத்துச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள். ஆகவே நபிமார்களிடையே எவ்வித பாகுபாடுமில்லை என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் நம்பிக்கை.

நபி (ஸல்) அவர்களும் ”எல்லா நபிமார்களையும் விட என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்” என்று இதைத்தான் முஸ்லிம்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.

நபிமொழிகள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘இவரை நீர் அடித்தீரா?’ என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘இவர் கடைவீதியில், ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன்.

உடனே நான், ‘தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். ‘மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு)விட்டதா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். (புகாரி, 2411, 2412, 3398, 3408, 3414)

”ஒருவர் மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனூஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது” (புகாரி, 3413, 3415, 4630.)
———————–
மேலும், இறைவன் நபிமார்களில் சிலரை, சிலரை விட மேன்மையாக்கியிருப்பதாவும் கூறுகிறான்.

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

2:253. அத்தூதர்கள் – அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம், அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்.

இறைத்தூதர்களில் சிலரைவிட சிலருக்கு சிறப்பை வழங்கியிருப்பதாக இறைவன் சொல்வது, உதாரணமாக: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பற்றியும் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கிய பாக்கியங்கள் பற்றியும் அல்லாஹ் சிறப்பித்து திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுடன் பேசியிருக்கிறார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி பிறந்தார்கள், தொட்டிலில் பேசினார்கள், இன்றுவரை மரணிக்காமல் வாழ்கிறார்கள்.

நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கியது போன்ற ஆட்சியை யாருக்கும் வழங்கவில்லை என்றும் அல்லாஹ் கூறிகிறான்.

இது போன்ற நபிமார்களின் சிறப்புகளில் ஒன்றாக, இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மறுமையில் பரிந்துரை செய்யும் தகுதியை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// – 15.09.2006 திண்ணைக் கட்டுரை.
இதையும் கோணலாகவே விளங்கி எழுதியிருக்கிறார். மறுமையில் முஸ்லிம்களுக்குத்தான் கேள்வி கணக்குக்காக துலாக்கோல் நிறுவப்படும். உலக வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தார், என்பதை கணக்கிட்டு இவர் சொர்க்கம் செல்லத் தகுதியானவரா? என்பது அங்கு பரிசீலிக்கப்படும்.

அவர் ஓரிறைக் கொள்கையை ஏற்றவராக இருந்தாலும் செய்த குற்றத்திற்காக நரகத்தில் தங்கும் தண்டனைப் பெற்று, தண்டனை முடிந்து பிறகு சொர்க்கத்தில் சேர்க்கப்படுவார். யாரும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் சொர்க்கத்தில் நுழைந்த விட முடியாது.

மேலும், எவ்வளவு கொடூரங்கள் இழைத்திருந்தாலும் முஸ்லிம்கள் தண்டனையின்றி மன்னிக்கப்படுவார்கள் என்றால் தொழுகை, உண்ணா நோன்பு, போன்ற வணக்க வழிபாடுகளை செய்வது தேவையற்றாகிவிடும். மற்றும் மனிதனுக்கு செய்யும் அநீதங்களையும் இஸ்லாம் கண்டிப்பாகத் தவிர்க்கச் சொல்வது அர்த்தமற்றதாகிவிடும் எனவே…

மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை பற்றியும், எவ்வளவு கொடூரங்கள் செய்திருந்தாலும் முஸ்லிம்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பது பற்றியும் தனிப் பதிவுகள் எழுத வேண்டும். – அந்த அளவுக்கு கட்டுரையாளரால் இவைகள் திரிக்கப்பட்டிருக்கிறது. – இன்ஷா அல்லாஹ் எழுதுவோம்.

ஒரு நபிமொழி

…பிறகு, ‘அறிந்துகொள்ளுங்கள், மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம்.
அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக்கத்(திலுளள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு ‘இவர்கள் உங்க(ளுடைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, ‘நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!” என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டுதான் இருந்தார்கள்” என்று கூறப்படும். (புகாரி, 4625)

//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// – 
இப்படிச் சொன்னவர், மேற்கண்ட நபிமொழியிலிருந்து பாடம் பெறுவாரா..?


நன்றி: http://www.islamkalvi.com/ 

0 Comments:

Post a Comment