Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

மனுதர்மத்தைக் குர்ஆனில் தேடுகின்ற சூபியின் மாறாத்தனம் கடந்த வாரத் திண்ணையில் [சுட்டி-1] வெளிப் பட்டிருக்கிறது.

“மனிதர்களே!” என்று மொத்த மனுக்குலத்தையும் விளித்து, “நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய்-தகப்பனின் வழி வந்தவர்கள்” என்றும் “உங்கள் அனைவரின் இறைவனும் ஒரேயொருவனே!” [004:001] என்றும் தீண்டாமையை அழித்தொழிக்கும் குர்ஆனில் மனு தர்மத்தைத் தேடி அலையும் சூபியை எதில் சேர்ப்பது? என்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும்.
இனி, அபூலஹபைக் குறித்து சூபி கேட்டிருப்பதற்கு விளக்கம்:

அபூலஹப் என்பவன் யார்? 

அப்துல் உஸ்ஸா என்ற இயற் பெயருடைய அபூலஹப், அப்துல் முத்தலிபின் மகன்களுள் ஒருவனும் வஹ்ஹாபிகளின் தலைவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையுமாவான். ஹர்புடைய மகளும் அபூஸுஃப்யானின் சகோதரியுமான அர்வா என்பவள் அபூலஹபின் மனைவியாவாள். 

“உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுப்பீராக!” [026:214] என்ற இறைகட்டளை வந்தவுடன், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் உள்ள ‘ஸஃபா’ என்ற குன்றின் மீதேறி நின்று, ”யா ஸபாஹா! யா ஸபாஹா!!” என்று குரலெழுப்பினார்கள். (எதிரிப் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த அரபுச் சொல் பயன்படுத்தப்படும்.)

பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள். 

அவர்களது அழைப்பைச் செவியேற்றவர்கள், “இவ்வாறு அழைப்பவர் யார்?” என வினவ சிலர் ”முஹம்மது” என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் உட்பட பலரும் அங்குக் குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.
அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்), ”இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள். 

அதற்கு அம்மக்கள், ”ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை” என்றனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
கஅபு இப்னு லுவய்யின் வழித்தோன்றல்களே! முர்ரா இப்னு கஅபின் வழித்தோன்றல்களே! குஸைய்யின் வழித்தோன்றல்களே! அப்துல் முனாஃபின் வழித்தோன்றல்களே! அப்து ஷம்ஸ் வழித்தோன்றல்களே! ஹாஷிம் வழித்தோன்றல்களே! அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்களே! அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்திலிருந்து விரும்பியதைக் கேட்டு பெற்றுக்கொள். உன்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்! நிச்சயமாக நான் உனது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உனக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. 

எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்” என்று கூறி முடித்தார்கள்.

இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். ”நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?” என்று கூறினான். அவனைக் கண்டித்து ”அழியட்டும் அபூ லஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்…” என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் அருளப் பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதீ, [சுட்டி-2 & 3]. 

அபூலஹபின் மீது தணியாத பாசம் கொண்ட சூபியின் கேள்வி யாதெனில், “கருணையாளனான அல்லாஹ் தெருச் சண்டைக்காரன் போல் சாபமிடலாமா?” என்பதே!

முஸ்லிம்களின் இறைவனைக் குறித்து எதுவுமே தெரியாத அறிவிலித்தனத்தால் விளைந்த கேள்வியைத்தான் சூபி கேட்கிறார்.

அல்லாஹ் கருணையாளன்தான். அதேவேளை கையாலாகாதவன் அல்லன். அடக்கியாள்பவனும் அவனே! அவனுடைய அன்பிற்குரிய அடியார்கள் பலரையே அடக்கி வைத்தவன்; வைத்திருப்பவன் எனும்போது அபூலஹப் அவனுக்கு எம்மாத்திரம்? 

அடுத்து, “இது அல்லாவின் வார்த்தையா?” என்று சூபி ஒரு கேள்வியை வைக்கிறார் – அந்தக்கால அபூலஹபைப் போலவே.

மேற்காணும் 111ஆவது அத்தியாயம் அருளப் பட்ட பின்னரும் பத்தாண்டு காலத்திற்கு மேல் அபூலஹப் உயிர் வாழ்ந்திருந்தான். அந்தப் பத்தாண்டுகளில் அவனுடைய குரைஷிக் குலத்தினரில் பெரும்பாலோர் சத்திய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டனர். 

சூபியைப் போலவே இறைவாக்கைப் பொய்ப் படுத்திவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்த அபூலஹப், சற்றே அறிவைப் பயன் படுத்தி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? 

“நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன்” என்ற ஓர் அறிவிப்பு அபூலஹபிடமிருந்து வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

1 – “குர்ஆன் இறைவாக்கு இல்லை” என்று நிறுவுவதற்கு 1400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய பரிதாப நிலை தொடந்திருக்காது. 

2 – நபி (ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் தூதர் என்ற உயர் பதவியிலிருந்து இறக்கி, வெறும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று ஆக்குவதற்கு இன்றுவரை செய்யப் பட்டுக் கொண்டிருக்கும் பூனையைக் கட்டி வைத்து சிரைக்கும் வேலை மிச்சமாகிப் போயிருக்கும்.

3 – உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பின்பற்றுகின்ற – எதிர்ப்புகளை எதிர்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து செம்மாந்து நிற்கின்ற – வாழ்க்கை நெறியான இஸ்லாம், இல்லாமலாகி இருக்கும். 

கேள்வி: அபூலஹப் ஏன் அதைச் சொல்லாமலே அழிந்து போனான்?
பதில்: அல்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இன்னொரு சாட்சியாக!

சுட்டிகள்
1 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80611233&format=html
2 – http://www.a1realism.com/history/Raheequl_makthooom/second_stage.htm#3
3 – http://www.usc.edu/dept/MSA/quran/maududi/mau111.html

நன்றி: வஹ்ஹாபி

0 Comments:

Post a Comment