Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை நோக்கி சகோதரர் ஜோ கீழ்கண்ட கேள்விகளை வைத்திருக்கிறார்…

//இஸ்லாமிய சகோதரர்கள்பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேரன்புக்குரியவராகவும் திகழ்கிறார் என்றும் கருத்துரைக்கிறார்கள் .இது பற்றி எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆனால் இயேசு(ஈஸா நபி) குறித்து இஸ்லாம் நம்பிக்கை பற்றி மேலும் தகவல்களை நேரடியாக நம் இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து பெறலாமே என்ற நோக்கத்தில் இந்த பதிவு.

1. இயேசு அன்னை மரியின் மகனாக பிறந்தார் .ஆனால் அன்னை மரி தன்னுடைய கன்னித் தன்மையை இழக்காமலேயே ஆணின் மூலமாக அன்றி ,இறைவனால் கருத்தரிக்க வைக்கப்பட்டு இயேசு பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல முஸ்லிம்களின் நம்பிக்கையும் கூட .ஆக ஆதாம் என்கிற ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?

2. இந்த உலகின் இறுதி நாள் வரும் போது வானகத்திலிருந்து இயேசு மறுபடியும் இந்த மண்ணுலகுக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை .அது போலவே இஸ்லாமியர்களும் இறுதி நாளின் போது இயேசு மறுபடியும் வந்து குரானை ஓதுவார் என்று நம்புகின்றனர் .இங்கும் இறுதித் தூரரான முகமது நபிக்கு கிடைக்காக சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன ? ஏன் இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?//

*******************************************

சகோதரர் ஜோ இந்தக் கேள்விகளில் //”இறுதித் தூதரான முகமது நபிக்கு கிடைக்காத சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன?”// என்பதையே முக்கியமாகக் கேட்டிருக்கிறார். கேள்வியில் விதர்ப்பம் இல்லை என்றே எடுத்துக் கொள்வோம்.
சிறப்பின் காரணம் என்னவென்பதை உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டால் தவறாகாது. நபிமார்களிடையே ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க இந்த நபிக்கு ஏன் இந்த சிறப்பு? என காரணத்தைத் தேடினால் – நபிமார்களிடையே வேற்றுமை இல்லை. எல்லா நபிமார்களையும் ஒரே படித்தரத்தில் வைத்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற – இஸ்லாத்தின் கொள்கைக்கு முரண்பட்டதாகும்.
நபி இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் இடத்தில், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் முஹம்மது நபி தந்தையின்றி பிறந்திருப்பார்கள், தொட்டிலில் பேசியிருப்பார்கள், இறைவனால் உயர்த்தப்பட்டிருப்பார்கள், இறுதி நாளின் நெருக்கத்தில் பூமிக்கு இறங்கி வரத்தான் செய்வார்கள்!

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இடத்தில், இயேசு (அலை) அவர்கள் இருந்திருந்தால் இயேசு (அலை) அவர்களும் இறுதி நபியாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்கள், உலக மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருப்பார்கள், மறுமை உலகில் – பரலோக ராஜ்யத்தில் பரிந்துரைப்பதையும் பெற்றிருப்பார்கள்.

எந்தெந்த நபிக்கு என்னென்ன சிறப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்தக் கால மக்களின் நம்பிக்ககைக்கேற்ப இறைவன் தீர்மானிக்கிறான். அவன் தீர்மானித்தத் தகுதிகளை, அவன் தேர்ந்தெடுக்கும் மனிதரை இறைத்தூதராக நியமித்து, அவருக்கு சிறப்பு தகுதிகளையும் வழங்குகிறான். அதைத்தான் இறைவன் இப்படிக் கூறுகிறான்…

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

2:253. அத்தூதர்கள் – அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்.

இறைத்தூதர்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறான் என்பது இறைத்தூதர்கள் சிலருக்கு இறைவன் வழங்கிய சிறப்புத் தகுதி. இறைவன் கூறும் இந்தச் சிறப்புத் தகுதி கண்ணோட்டத்தில் நபிமார்களுக்கு வழங்கிய சிறப்புகளை சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அந்த சிறப்புத் தகுதியை வைத்து இயேசு (அலை) அவர்களை விட முஹம்மது (ஸல்) அவர்கள் உயர்ந்த நபி என்றோ, முஹம்மது (ஸல்) அவர்களை விட இயேசு (அலை) அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு அடிப்படையில் பாராபட்சமான பேச்சுக்கள் கூடாது என்பதையே…

”அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்.”

”நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை”

திருக்குர்ஆன், 2:136, 285 ஆகிய வசனங்கள் கூறிகிறது.

இயேசு – ஈஸா (அலை) அவர்களின் சிறப்பு பற்றி திருக்குர்ஆன் சொல்லும் காரணங்கள்.

இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சிலர் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிப்பட்டார்கள், சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமையானப் போக்கிலிருந்து யூதர்களை விலக்கி நல்வழிபடுத்திடவே இயல்புக்கு மாறாக ஒரு அற்புதத்தை அத்தாட்சியாக நபி இயேசு அவர்களின் பிறப்பை இறைவன் சிறப்பாக தேர்ந்தெடுத்தான்.

43:59. அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவர் மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் சந்ததியருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.

3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

3:49. இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ”நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

3:50. ”எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.”

3:51. ”நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.”
மேற்கண்ட வசனங்களில் இயேசு (அலை) அவர்களின் பிறப்பின் சிறப்பு பற்றிய காரணங்கள் தெளிவுபடுத்துப்படுகிறது. இறைத்தூதர் இயேசு அவர்களின் அற்புதமான பிறப்பின் ஏற்பாடு இம்ரானின் குடும்பத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.

3:33. ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் – மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:35. இம்ரானின் மனைவி, ”என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்.

66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
நபி இயேசுவைப் பெற்றெடுக்க இம்ரானின் மகள் மர்யம் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்து அந்தச் செய்தி வானவர்கள் மூலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது.

3:42. (நபியே! மர்யமிடத்தில்) வானவர்கள், மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்).

இம்ரானின் மகளாகிய மர்யம் (அலை) அவர்கள் மகத்தான அத்தாட்சியாக ஆண் துணையின்றி கருவுற்று இயேசு என்ற ஈஸா (அலை) இறைத்தூதரைப் பெற்றெடுக்கிறார், இந்த அதிசயப் பிறப்பின் சிறப்புக்குக் காரணம், ஏற்கெனவே தவ்ராத் என்ற வேதம் வழங்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகள், இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசுவின் பிறப்பை, முதல் மனிதரும் முதல் நபியுமாகிய ஆதாம், என்ற ஆதம் நபியின் படைப்புக்கொப்பாக சிறப்பித்து அத்தாட்சியாக (பார்க்க:திருக்குர்ஆன், 3:59) சான்றாக்கினான் இறைவன்.

ஆனால் இந்த அற்புதத்தைப் பார்த்த பின்னும், இயேசு பல அதிசயங்களை செய்து காட்டிய பின்னும், யூதர்கள் இயேசுவை இறைத்தூதராக ஏற்கவில்லை (பார்க்க: திருக்குர்ஆன், 3:52) அவரை ஒரு நல்ல மனிதராகக் கூட ஏற்கவில்லை. மோசமாக விமர்சித்தார்கள். யூதர்களின் தவறான விமர்சனங்களில் எள்ளளவும் உண்மையில்லை என்று இயேசுவின் சிறப்பைச் சுட்டிக்காட்டி அவர் மீது சுமத்தப்பட்டக் களங்கத்தைத் திருக்குர்ஆன் துடைத்தெறிகிறது.

இனி…

திருக்குர்ஆன் மர்யம் என்று குறிப்பிடும் மரியாள் பற்றியும், இயேசுவின் பிறப்பு பற்றியும் பைபிள் என்ன கூறுகிறது?

3:46. ”மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார், இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.” (மேலும் பார்க்க: திருக்குர்ஆன், 5:110, 19:39,40)

இயேசு பிறந்ததும் தொட்டிலில் பேசுவார் என்பதை அவர் பிறப்பதற்கு முன்பே முன்னறிவிப்புச் செய்தும், மரியாளின் கற்பு பற்றி தவறாக விமர்சித்தவர்களின் சந்தேக எண்ணங்களை நீக்கிட, இயேசு தொட்டில் குழந்தையாக இருக்கும் பருவத்தில் பேசி, அந்த அதிசயத்தை நடை முறையில் நடத்திக் காட்டி மரியாளின் கற்பொழுக்கத்தை நிலை நாட்டியதாக வரலாற்றுச் செய்தியை திருக்குர்ஆன் கூறுகிறது.

மரியாளின் கற்பு சம்பந்தமாகவும், இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியது தொடர்பாகவும் பைபிள் என்ன கூறுகிறது? என்பதை வசன எண்களுடன் அறியத் தந்தால் நன்றாக இருக்கும். இது நபி இயேசுவைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது? என்பதை அறிந்து கொள்ள கிறிஸ்துவ நண்பர்களிடம் நேரடியாகக் கருத்துக்களைக் கேட்டுப் பெறலாமே என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டது நன்றி!

நன்றி: www.islamkalvi.com/  

0 Comments:

Post a Comment