Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

5. அற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா?

மனிதர்களுக்குச் சாத்தியமாகாத – கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய – ஏராளமான அற்புதங்களை இயேசு நிகழ்த்தியிருக்கிறார். இதன் காரணமாக
* அவர் கடவுளின் மகனாக
* கடவுளின் அவதாரமாக
* கடவுளின் தன்மை பெற்றவராக
* கடவுளாக

இருக்கிறார் என்பதும் கிறித்தவர்கள் காட்டுகின்ற சான்றுகளில் ஒன்றாகும்.
பல காரணங்களால் இந்த வாதமும் ஏற்கக் கூடியதன்று. பைபிளிலிருந்தே அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

இறந்தவர்களை உயிர்ப்பித்தவர்கள்

இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்துக் காட்டிய பெரிய அற்புதத்தை எடுத்துக் கொள்வோம். இறந்தவரை உயிர்ப்பிப்பதால் ஒருவர் கடவுளாகி விடுவார் என்றால் இன்னும் பலர் இதே அற்புதத்தைச் செய்ததாக பைபிள் கூறுகிறதே!
முழு பைபிளையும் ஆராய்ந்தால் இயேசு மூன்றே மூன்று நபர்களை மட்டுமே உயிர்ப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதை விட அதிக எண்ணிக்கையில் மற்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளனரே?

கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆத்மா அவனுள் திரும்பி வந்தது. அவன் பிழைத்தான்.
(முதலாம் ராஜாக்கள் 17:22)

கிட்டே போய் தன் வாய் பிள்ளையின் வாயின் மேலும், தன் கண்கள் அவன் கண்களின் மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின் மேலும் படும்படியாக அவன் மேல் குப்புறப்படுத்துக் கொண்டான். அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.
(இரண்டாம் ராஜாக்கள் 4:34)

இயேசுவைப் போலவே எலியாவும், எலிஷாவும் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக பைபிள் கூறியிருக்கும் போது கிறித்தவர்கள் இவ்விருவரையும் கடவுளர்களாக நம்ப மறுப்பது ஏன்?
எசக்கியேல் எனும் தீர்க்கதரிசி பல்லாயிரக் கணக்கான மனித எலும்புகளுக்கு உயிர் கொடுத்து எழச் செய்ததாக எசக்கியேல் 37ஆம் அதிகாரம் கூறுகிறது.
மூன்றே மூன்று நபர்களை – உடலுடன் கூடிய மூன்று நபர்களை – உயிர்ப்பித்ததால் இயேசு கடவுளாக முடியும் என்றால் உடலில்லாத வெறும் எலும்புகளை உயிர்ப்பித்ததாலும் பல்லாயிரம் மக்களை உயிர்ப்பித்ததாலும் எசக்கியேல் பெரிய கடவுள் அல்லவா? அவரை ஏன் கடவுள் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை? சிந்தித்துப் பாருங்கள்!

இயேசு உயிருடனும், உடலுடனும் நடமாடிய காலத்தில் தான் மூன்று நபர்களை உயிர்ப்பித்திருக்கிறார். இன்னொருவரோ தாம் மரணித்த பிறகும் கூட மற்றவர்களை உயிர் பெறச் செய்திருக்கிறார் என பைபிள் கூறுகிறது!
அப்பொழுது அவர்கள் ஒரு மனுஷனை அடக்கம் பண்ணப் போகையில் அந்தத் தண்டைக் கண்டு அந்த மனுஷனை எலிஷாவின் கல்லறையில் போட்டார்கள். அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிஷாவின் எலும்புகளின் மேல் பட்ட போது அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். (இரண்டாம் ராஜாக்கள் 13:21)

இயேசுவின் அற்புதத்தை விட இது பேரற்புதமாகக் கிறித்தவர்களுக்குத் தோன்றவில்லையா? எலிஷாவின் எலும்பு கூட மற்றவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்றால் இவர் இயேசுவை விடப் பெரிய கடவுள் அல்லவா? இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்ததை ஆதாரமாகக் கொண்டு அவரைக் கடவுள் எனக் கூற முடியாது என்பதை இது விளக்கவில்லையா?

அற்புதங்களை நிகழ்த்தியவர்கள்

இது போக, இயேசு நிகழ்த்திய மற்ற அற்புதங்களை எடுத்துக் கொள்வோம். அவரது அற்புதங்களை விட பெரிய அற்புதங்களை மற்றவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

ஐந்து ரொட்டித் துண்டுகளையும் இரண்டு மீன்களையும் பலருக்கு இயேசு விநியோகம் செய்திருப்பதாக பைபிள் கூறுகிறது. மற்றவர்கள் செய்த அற்புதங்களைக் கேளுங்கள்!

பின்பு பாகால் சலிஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற் பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும், தாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது அவன் ஜனங்களுக்கு சாப்பிடக் கொடு என்றான். அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன் இதை நான் நூறு பேருக்கு முன் வைப்பது எப்படி என்றான்? அதற்கு அவன் அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு! சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான். கர்த்தருடைய வார்த்தையின் படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது. (இரண்டாம் ராஜாக்கள் 4:42-44)

எலிஷா அவளை நோக்கி  நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது? சொல் என்றான். அதற்கு அவள் ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றுமில்லை என்றாள். அப்பொழுது அவன் நீ போய் உன்னுடைய அயல் வீட்டுக்காரர் எல்லோரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி உள்ளே போய் உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து நிறைந்ததைப் பக்கத்தில் வை என்றான்.

…. எலியா அவளைப் பார்த்து பயப்படாதே! போ! நீ சொல்கிறபடியே சமையல் செய்! ஆனாலும் முதலாவது எனக்கென்று சிறிய அடையைச் செய்து அதை என்னிடம் கொண்டு வா! பின் உனக்கும், உன் குமாரனுக்கும் செய்யலாம். இஸ்ரவேலின் கடவுளாகிய கர்த்தர் சொல்கிறதைக் கேள்.

கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மாவு செலவழிந்து போகவும் இல்லை. கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார் என்றான்.

அப்பொழுது எலியா அவளைப் பார்த்து 'பயப்படாதே! நீ போய் உன் வார்த்தையின் படி ஆயத்தப்படுத்து. ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டு வா! பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மா செலவழிந்து போவதுமில்லை. கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவள் போய் எலியாவின் சொற்படியே செய்தாள். அவளும் இவனும் அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின் படியே பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; என் கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவுமில்லை. (முதலாம் ராஜாக்கள் 17:13-16)

எலிசா அவர்களை நோக்கி நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள், ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். அப்பொழுது அவன், 'நீ போய், உன்னுடைய அயல் வீட்டுக்காரர் எல்லோரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி உள்ளே போய் உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான். அவள் அவனிடத்திலிருந்து போய் தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக் கொண்டு இவர்கள் பாத்திரங்களை அவர்களிடத்தில் கொடுக்க அவள் அவைகளில் வார்த்தாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின் அவள் தன் மகன் ஒருவனை நோக்கி, இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றாள். அதற்கு அவன், வேறே பாத்திரம் இல்லை என்றான். அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று. (இரண்டாம் ராஜாக்கள் 4:2-6)

இயேசுவின் அற்புதம் ஒரே நாளில் முடிந்து போய் விட்டது. எலிஷா, எலியா ஆகியோரின் அற்புதங்களோ நீண்ட நாட்கள் நிலைத்திருந்த அற்புதங்களாக இருந்தன. இந்த எலிஷாவையும், எலியாவையும் கிறித்தவர்கள் கடவுள் என்று நம்பி வழிபட்டிருக்க வேண்டுமே? அவர்களை விட்டு விட்டு இயேசுவை மட்டும் வழிபட என்ன நியாயம் வைத்திருக்கிறார்கள்?

அற்புதம் நிகழ்த்த முடியாத இயேசு காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில் அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு அதனிடத்திற்போய் அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல் இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது என்றார். உடனே அத்தி மரம் பட்டுப்போயிற்று.
(மத்தேயு 21:18,19)

அற்புதம் நிகழ்த்தியதால் அவர் கடவுளாகி விடவில்லை என்பதற்கும் அவர் சுயமாக அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்பதற்கும் இதை விடச் சான்று வேறு என்ன வேண்டும்?
அற்புதம் நிகழ்த்தியதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் அவருக்குப் பசி எடுத்தது எப்படி?

கடவுளுக்குப் பசிக்குமா?

அத்தி மரத்தில் கனி இருக்குமா? இருக்காதா என்பது கடவுளுக்கு முன் கூட்டியே தெரியாமல் போகுமா?
ஏமாறுவதும், அறியாமையும் கடவுளுக்குரிய பண்புகளாக இருக்க முடியுமா?
அத்தி மரத்தைக் கனியுடையதாக்கியதும், கனியில்லாமல் செய்ததும் அந்த மரத்தின் செயலன்று. கடவுள் தாம் அவ்வாறு ஏற்படுத்துகிறார். இயேசுவே கடவுள் என்றால் மரத்தில் கனியில்லாமலாக்கியதும் அவர் தாமே? பிறகு ஏன் அத்தி மரத்தைச் சபிக்க வேண்டும்? அவ்வாறு சபிப்பது தம்மையே சபிப்பதாக ஆகாதா?

ஏதோ சில சமயங்களில் கடவுள் அனுமதிக்கும் போது இயேசு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். ஆயினும் அவர் முழுக்க முழுக்க மனிதராகவே இருந்திருக்கிறார். மனிதனுயை பலவீனங்களான பசி, அறியாமை, ஏமாறுதல், அர்த்தமற்ற கோபம் ஆகிய பலவீனங்கள் நீங்கப் பெற்றவராக அவர் இருக்கவில்லை என்பதை இது விளக்கவில்லையா?

அது தான் போகட்டும் விட்டு விடுவோம்! தெரியாமல் கனியில்லாத மரத்திடம் வந்து விட்டார். வந்தவர் கடவுள் அல்லவா? அவர் வந்த உடனே அம்மரத்தில் கனி உண்டாகியிருக்க வேண்டாமா? அப்படியும் நடக்கவில்லையே? ஊராரின் பசியைப் போக்கியவருக்குத் தம் பசியை நீக்கும் வகையில் அற்புதம் நிகழ்த்த முடியாமல் போனது ஏன் என்பதையாவது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?

காகங்கள் அவனுக்கு (எலியாவுக்கு) விடியற்காலத்தில் அப்பமும், இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
(முதலாம் ராஜாக்கள் 17:6)

கனி தருவது மரங்களின் இயல்பு. அந்த இயல்பே இயேசு விஷயத்தில் மாறி அவரைச் சிரமப்படுத்தியிருக்கிறது. பிறரது உணவைத் தட்டிப் பறிப்பது காகங்களின் இயல்பு. அந்த இயல்புக்கு மாற்றமாகக் காகங்கள் எலியாவுக்கு தினமும் உணவு கொண்டு வந்து உபசரித்திருக்கின்றன.

இவ்விரண்டில் எதை அற்புதம் என்று கிறித்தவர்கள் சொல்லப் போகிறார்கள்? இவ்விருவரில் யாரைக் கடவுள் என்று நம்புவதற்கு அதிகத் தகுதி இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள்!

தொழுநோயைக் குணப்படுத்தியவர்கள்

இயேசு அற்புதமான முறையில் தொழுநோயளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார் என்றால் அதே அற்புதத்தை மற்றவர்களும் கூடச் செய்துள்ளனர்.
அப்பொழுது எலிஷா அவனிடத்தில் ஆளனுப்பி 'நீ போய் யோர்தானில் ஏழு தரம் ஸ்நானம் பண்ணு! அப்பொழுது உன் மாம்சம் மாறி நீ சுத்தமாவாய்' என்று சொல்லச் சொன்னான். (இரண்டாம் ராஜாக்கள் 5:10)

அப்பொழுது அவன் இறங்கி தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழு தரம் முழுகின போது அவன் மாம்சம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி அவன் சுத்தமானான்.
(இரண்டாம் ராஜாக்கள் 5:14)

குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்தவர்கள்

இயேசு சில குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் என்றால் அதையும் கூட மற்றவர்களும் செய்துள்ளனர்.
அப்பொழுது எலிஷா விண்ணப்பம் பண்ணி கர்த்தாவே இவன் பார்க்கும் படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான். உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்…
(இரண்டாம் ராஜாக்கள் 6:17)

அவர்கள் சமாரியாவில் வந்த போது எலிஷா 'கர்த்தாவே! இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும்' என்றான். பார்க்கும் படிக்கு கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும் போது இதோ அவர்கள் சாமாரியாவின் நடுவே இருந்தார்கள். (இரண்டாம் ராஜாக்கள் 6:20)

தண்ணீரில் நடந்தவர்கள்

இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். அவர்கள் வலது புறத்திலும், அவர்கள் இடது புறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக இருந்தது.
(யாத்திராகமம் 14:22)

எலிஷா இரும்புக் கோடாலியைத் தண்ணீரில் மிதக்கச் செய்திருக்கிறார்.
பார்க்க இரண்டாம் ராஜாக்கள் 6:6.

இயேசு எந்த அற்புதத்தை நிகழ்த்தியதாகக் கூறி அவரைக் கடவுள் என்று வாதம் செய்தாலும் அந்த அற்புதங்களை அவருக்கு முன்பே மற்றும் பலர் செய்திருப்பதாகப் பைபிளில் காண முடிகின்றது. இயேசுவை விடச் சிறப்பாகச் செய்திருப்பதையும் காண முடிகின்றது. அவர்களையெல்லாம் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்பினால் இயேசுவைக் கடவுள் என்று நம்புவதில் ஓரளவாவது நியாயமிருக்கும்.

அற்புதம் நிகழ்த்தியது எப்படி?

அப்படியானால் மனிதர்கள் எப்படி அற்புதம் நிகழ்த்த முடியும்? என்ற நியாயமான கேள்விக்குரிய விடையை பைபிளிலிருந்தே நாம் அளிப்போம்.
நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
(யோவான் 5:30)

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
(லூக்கா 11:20)

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, 'கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
(மத்தேயு 7:22,23)

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
(மத்தேயு 7:21)

இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.

மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப் படி அவர் விரும்பிய போது செய்து காட்டியவை தாம் எனவும் இயேசு விளக்கம் தருகிறார்.
இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறித்தவர்கள் காத்திருக்கிறார்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா?

அங்கே அவர் சில நோயாளிகளின் மேல் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினதேயன்றி வேறொரு அற்புதமும் செய்யக் கூடாமல் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு கிராமங்களிலே சுற்றித் திரிந்து உபதேசம் பண்ணினார். (மாற்கு 6:5,6)

இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.

அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொள்ள மாட்டார்கள். அதிக விசுவாசம் கொள்வார்கள்.
ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவு.

அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே! உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக 'இந்தப் பொல்லாத விபசார சந்ததியர் அடையாளத்தைத் தேடுகிறார்கள்' ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு 12:38,39)

மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.
மேலும், இயேசு சில அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய போது அவரது காலத்து மக்கள் அவரைக் கடவுள் என நம்பவில்லை.

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
(மத்தேயு 9:8)

அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு அதன் மூலம் தம்மைக் கடவுள் என்று வாதம் செய்திருந்தால் மக்களும் அவரைக் கடவுள் என்று நம்பியிருப்பார்கள். இயேசு அவ்வாறு வாதம் செய்யாததால் அவரை மனிதர் என்றே நம்பினார்கள். மனிதருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கிய கர்த்தரையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

கெட்டவர்களும் அற்புதங்கள் நிகழ்த்தலாம்

அற்புதங்கள் நிகழ்த்துவதால் ஒருவன் கடவுளாக முடியாது. ஏன்? அற்புதம் செய்பவர்கள் நல்ல மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. இதையும் பைபிள் தெளிவாகக் கூறுகின்றது.

உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் எழும்பி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி உங்களுக்கு ஓரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும் அந்தத் தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளை கேளாதிருப்பீராக. உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், அன்பு கூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
(உபாகமம் 13:1-4)

தீர்க்கதரிசி அல்லாதவரும் கூட அற்புதங்கள் செய்யலாம்; நாம் முழு இதயத்துடன் கர்த்தரை மட்டுமே வழிபட வேண்டும் என்று அறிவிக்கும் இந்த வசனங்கள் கிறித்தவர்களின் கண்களில் படவில்லையா? இதை அறிந்து கொண்டே இயேசுவைக் கடவுளாக்க முயன்றால் மேற்கண்ட வசனங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதே பொருள்.

இயேசுவும் கூட இதைத் தெளிவாகப் பிரகடனம் செய்திருக்கிறார்.

ஏனெனில் கள்ளக் கிறிஸ்துகளும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். (மத்தேயு 24:24)
அற்புதங்களை இயேசு மட்டுமின்றி இன்னும் பல நல்ல மனிதர்கள் செய்திருப்பதாக பைபிள் கூறுவதாலும்

நல்ல மனிதர்கள் மட்டுமின்றி மோசமான மனிதர்கள் கூட அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று பைபிள் கூறுவதாலும்

அற்புதங்கள் நிகழ்த்திய இயேசு கடவுளாக முடியாது என்பதை ஐயமற அறியலாம்.

இதன் பின்னரும் இயேசுவைக் கடவுள் என்று யாரேனும் நம்பினால் அவர் பைபிளையும் நம்பவில்லை; இயேசுவின் போதனையையும் மதிக்கவில்லை என்பதே அதன் பொருளாகும்.

6. மரணித்த பின் உயிர்த்தெழுந்தால் கடவுளாக முடியுமா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம் என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்.

இதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையினடிப்படையிலேயே இதை அணுகுவோம்.

மரணித்த பின் உயிர்த்தெழுதல் என்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.

ஒன்று மரணித்தல்

மற்றொன்று உயிர்த்தெழுதல்

இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பக்கூடிய கிறித்தவர்கள் இதை நம்புவதற்கு முன் அவர் மரணித்ததை நம்புகிறார்கள்! மரணித்தல் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதைச் சிந்தித்தார்களா?

யார் மரணத்தைச் சுவைக்கிறாரோ அவர் கடவுளாக இருக்கவே முடியாது என்று பைபிள் ஐயத்திற்கிடமின்றி கூறிக் கொண்டிருக்கிறது.
பாவஞ் செய்கிற ஆத்மாவே சாகும்… (எசக்கியேல் 18:20)

மனிதனாகப் பிறந்த அனைவரும் மரணிக்கின்றனர். எனவே அனைவரும் பாவஞ்செய்தவர்களே. இறைவன் மாத்திரம் தான் இதிலிருந்து தூய்மையானவன். இயேசு மரணித்ததால் அவரும் பாவம் செய்திருக்கிறார்; அதனால் அவர் கடவுளாக இருக்க முடியாது என்பதை இந்த வசனம் கூறவில்லையா?

கர்த்தரோ மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா… (எரேமியா 10:10)

கடவுள் உயிருடன் இருக்க வேண்டும் எனவும், நித்தியமாகவும், நிரந்தரமாகவும் இருக்க வேண்டும் எனவும் இவ்வசனம் கூறுகிறது. நிரந்தரமான உயிருள்ளவர் என்ற தகுதியை மரணித்ததன் மூலம் இயேசு இழந்து விடுகிறாரே! இதன் பின்னரும் அவரிடம் கடவுள் தன்மை இருப்பதாக நம்புவது பைபிளின் போதனைக்கே முரண் என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவில்லையா?

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை. இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?
(ஏசாயா 40:28)

கடவுளுக்குச் சோர்வோ, களைப்போ கூட ஏற்படக் கூடாது! மிகப் பெரிய சோர்வாகிய மரணம் அவருக்கு வந்ததேன்? இதன் பின்னரும் இயேசுவிடம் கடவுள் தன்மையிருப்பதாக எப்படி நம்ப முடியும்?

நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்! (ஒ தீமோத்தேயு 1:17)

கடவுளுக்கு மரணமும் ஏற்படக் கூடாது; மற்றவர்களுக்கு அவர் காட்சி தரவும் கூடாது என்று இந்த வசனம் கூறுகிறது.

இயேசுவிடம் இந்த இரண்டு பலவீனங்களும் அமைந்திருந்தன.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. எனவே அவருக்கு மரணம் ஏற்பட்டிருப்பதால் அவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது.

கடவுள் யாருக்கும் காட்சி தரக் கூடாது என்ற பைபிளின் மேற்கண்ட கூற்றுக்கு மாற்றமாக இயேசு பலராலும் காணப்பட்டுள்ளார். அவரை அனேகம் பேர் கண்களால் கண்டதற்கு நான்கு சுவிசேஷங்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

பலராலும் காணப்பட்ட ஒருவர் ஒருக்காலும் கடவுளாக முடியாது.

இயேசு மரணித்து விட்டாலும் மரணித்த பின் உயிர்த்தெழுந்திருப்பதால் அவர் கடவுளாகி விட்டார். உலகில் வாழும் போது தான் மனிதராக வாழ்ந்தார். மரணித்து உயிர்த்தெழுந்த பின் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது' என்று கிறித்தவ மத குருமார்கள் கூறுவதை நாம் அறிவோம்.

இயேசு மரணித்த பின் உயிர்த்தெழவில்லை; அது தவறான தகவல் என்பதை இயேசுவின் சிலுவைப் பலி  என்ற நூலில் நாம் விளக்கியுள்ளோம். அது சரியான தகவல் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக ஆகி விடவில்லை.

ஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேசிய பேச்சுக்களிலும் கூட, தம்மை மனிதர் என்றே வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

இயேசு உயிர்த்தெழுந்த பின் கூறியதைக் கேளுங்கள்!

இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்கு போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார். (யோவான் 20:17)

என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதே! எனக்கும் உங்களுக்கும் ஒரே கடவுள் தான்  என்று உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு கூறுகிறார். மரணிப்பதற்கு முன்பு எப்படி அவர் கடவுளாக இருக்கவில்லையோ அப்படியே உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக மாறி விடவில்லை என்பதற்குத் தெளிவான வாக்கு மூலம் இது!

இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி  நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே  என்று சொல்லித் தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா  என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன் கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்தார்
(லூக்கா 24:36-43)

உயிர்த்தெழுந்த பின்பும் இயேசுவுக்கு மாம்சமும், எலும்புகளும் இருந்துள்ளன. இது கடவுளுக்கு இருக்க முடியாது.

உயிர்த்தெழுந்த பின்பும் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று பிறரிடம் யாசித்திருக்கிறார். இதுவும் மனிதனின் இயல்பு தான். உயிர்த்தெழுந்த பின்பும் அவருக்குப் பசித்திருக்கிறது. பொரித்த மீன் சாப்பிட்டிருக்கிறார். இந்தத் தன்மையும் கடவுளுக்கு இருக்க முடியாது.

உயிர்தெழுந்த பின்பும் சீடர்களும் வேறு சிலரும் இயேசுவைக் கண்களால் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்னரும் அவரை மற்றவர்கள் பார்த்திருப்பதால் அவர் கடவுள் தன்மை பெறவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இயேசு மரணிப்பதற்கு முன் எவ்வாறு மனிதராகவே – கடவுளின் அம்சம் ஒரு சிறிதும் அற்றவராகவே – இருந்தாரோ அப்படித் தான் உயிர்த்தெழுந்த பின்பும் மனிதத் தன்மை கொண்டவராகவே இருந்திருக்கிறார். இந்த வசனம் இதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.

மற்றவர்களும் உயிர்த்தெழுந்துள்ளனர்

மற்றொரு கோணத்திலும் இதைக் கிறித்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இயேசு உயிர்த்தெழுந்து அந்த நிலையிலேயே நீடிப்பதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் இது போல் இன்னும் பலர் இறந்த பின் உயிர்த்தெழுந்துள்ளதாக பைபிள் கூறுகிறதே? அவர்களையும் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர்கள் என்றோ கிறித்தவர்கள் கூறாமலிருப்பது ஏன்?

இதோ! பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டான்.
(ஆதியாகமம் 5:24)

விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலேயே அவன் காணாப்படாமற் போனான். (எபிரேயர் 11:5)

இயேசு கூட மரணத்திற்குப் பின்பே தேவனாலே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். கடவுளுக்கு மரணம் ஏற்பட முடியாது. ஆனால் ஏனோக்கு மரணத்தைக் காணாமலேயே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறான்.
கிறித்தவர்கள் இயேசுவை விடப் பெரிய கடவுளாக ஏனோக்கை ஏன் நம்புவதில்லை? விளக்குவார்களா?

அவர்கள் பேசிக் கொண்டு நடந்து போகையில் இதோ அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழற்காற்றில் பரலோகத்திற்கு ஏறிப் போனான். அதை எலிஷா கண்டு… (இரண்டாம் ராஜாக்கள் 2:11,12)

இயேசுவைக் கர்த்தர் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றதை எவரும் பார்த்ததில்லை. ஆனால் எலியாவைக் கர்த்தரே எடுத்துச் சென்றிருக்கிறார். உயிருடன் எடுத்துச் சென்றிருக்கிறார். இன்னொரு தீர்க்கதரிசியாகிய எலிஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே எலியா எடுத்துச் செல்லப்பட்டார். பலமான சாட்சியத்துடன் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் 'எலியா இயேசுவை விடப் பெரிய கடவுள்' என்று கிறித்தவர்கள் நம்ப வேண்டுமல்லவா?

எலியா, ஏனோக்கு போன்றோர் உயிருடன் பரலோகத்துக்குக் கர்த்தரால் எடுத்துக் கொள்ளப்பட்டதும் இன்னும் பலர் இறந்த பின் உயிர் பெற்றதாக பைபிள் கூறுவதும் 'இயேசு கடவுளல்லர்; கடவுளின் மகனுமல்லர்; மனிதர் தாம்' என்பதை எள்ளளவும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

கிறித்தவர்களுக்கு உண்மையிலேயே பைபிளில் நம்பிக்கை இருக்குமானால் இயேசுவைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ நம்புவதை விட்டொழித்து ஒரே கடவுளின் பால் திரும்பட்டும்.

7. பரிசுத்த ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா?

இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம்.

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?

இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான்.
(லூக்கா 1:15)

அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக… (லூக்கா 1:67)

இவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்?

எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு… (லூக்கா 1:41)

யோவானும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்
அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்
அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்
என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா?
இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?

இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார்
( மத்தேயு 4:1-10) இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.

யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16) கூறுகிறார். அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.

இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்?
இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!

பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். (மத்தேயு 10:20)

பரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயசுவின் சீடர்களும் கடவுளர்களா?
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?
அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். (லூக்கா 2:25)

இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். (அப்போஸ்தலர் 5:32)

அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 11:24)

இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு… 
(அப்போஸ்தலர் 6:5)

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்
(இரண்டாம் தீமோத்தேயு 1:14)

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)

இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்?

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை.
தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.

இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா?

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.
சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. (யாக்கோபு 1:13)

கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.

ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் – தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!

தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், 'இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்' என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.

நன்றி: www.onlinepj.com 

0 Comments:

Post a Comment