Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

4. வரலாற்றுச் சம்பவங்களைக் கூறுமிடத்து பெரும்பாலும் இஸ்ரவேலிய இன உணர்வின் தாக்கம் பைபிளை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக ஆபிரஹாம் என்ற தீர்க்கதரிசியின் வரலாற்றை விவரிக்கும்போது இது காணப்படுகின்றது. ஆபிராம் மற்றும் அவரது குமாரர்களான இஸ்மவேல், ஈஸாக் ஆகியோரின் வரலாற்றை விவரிக்குமிடத்து யூத இனவெறியையும் அடிமைகயோடு அவர்களது கடுமையான அணுகுமுறையையும் பைபிளின் ஆதியாகமம் வெளிப்படுத்துகின்றது. ஆபிராமுடைய முதல் மனைவியாகிய சாராள் தனக்கு வாரிசுகள் இல்லாததால் தனது அடிமையாகிய ஆகாரை ஆபிராமுக்கு மறுமனையாட்டியாக்கிக் கொடுத்தார் என கூறுகின்றது.
ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது அவள் கர்ப்பந்தரித்தாள். (ஆதி 16:3)
ஆபிரகாமின் மூலம் கற்பமடைந்த ஆகார் சராளுடன் அற்பமாக நடந்து கொண்ட காரணத்தால் சாராள் அவளைக் கடுமையாக நடத்தி கற்பிணி என்றும் பாராமல் வீட்டை வெளியேற்றியதாகவும் அதற்கு ஆபிரகாமும் உடந்தையாக இருந்ததாகவும் பைபிள் கூறுகின்றது.
அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள். உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள். (ஆதி: 16:6)
தன் மூலம் கற்பமடைந்த அடிமைப் பெண்ணை சித்ரவதை செய்து வீட்டை விட்டு வெளியேற்றிய ஆபிரகாமின் கதை மூலம் அடிமைகளைச் சித்ரவதை செய்வதில் தவறில்லை என்ற சட்டத்தை உருவாக்க யூத ரப்பிகள் முனைந்தமை இங்கு புலனாகிறது.

தங்கள் மோசமான வாழ்க்கைச் சூழலுக்கேற்ப மாமனிதர்களின் வரலாற்றைத் தவறாகச் சித்தரித்ததன் காரணமாக அவற்றை விவரிக்குமிடத்து ஏராளமான முரண்பாடுகளையும் பைபிளில் காண இயலும். தனது முதுமைப் பருவத்தில் இறைவன் அளித்த அருட்கொடையாகிய தனது ஒரே மகனையும் மனைவியையும் இறை கட்டளைக்கு அடிபணிந்து பாலைவனத்தில் விட்டுச் சென்ற தியாகச் செம்மலே திருக்குர்ஆன் கூறும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள். ஆனால் பைபிளின் ஆதியாகமம் சாராள் ஆகாரைக் கொடுமைப் படுத்தியதாகவும் அதற்கு ஆபிராம் உடந்தையாக இருந்ததற்கு ஓர் உதாரணமாக இச்சம்பவத்தை உட்படுத்தியுள்ளது. ஆதியாகமம் 21ம் அத்தியாயம் கூறுவதைப் பார்ப்போம்.
பிள்ளை வளர்ந்து பால் மறந்தது. ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான். பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம் பண்ணகிறதைச் சாராள் கண்டு ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்கவேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால் அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அவளை அனுப்பிவிட்டான். அவள் புறப்பட்டுப்போய் பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். (21 : 8 – 14).
ஆனால் உண்மை என்னவெனில் ஈஸாக் பிறப்பதற்கு முன்னரே இஸ்மவேலை வனாந்தரத்தில் விடப்பட்ட சம்பவம் நடைபெற்றுவிட்டது. ஈஸாக்கை மேம்படுத்திக் காட்டவும் அடிமைப் பெண் மற்றும் அவளது மகன் மீது புரியும் கொடுமைகளைச் சரிகாணவும் ஈஸாக்கின் பிறப்பு முற்படுத்திக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்மவேல் கைக்குழந்தையாக இருக்கும்போதே இச்சம்பவம் நடைபெற்றுவிட்டதாக ஆதியாகமத்தின் 21:14 தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அவளை அனுப்பிவிட்டான். (21:14) இதிலிருந்து தோளில் தூக்கி வைக்கக் கூடிய அளவுக்கு கைக்குழந்தையாகவே இஸ்மவேல் இருந்தார் என்பது திண்ணம். மேலும் பின்வரும் குறிப்புகளும் இஸ்மவேல் கைக்குழந்தையாக இருந்தபோதே வனாந்தரத்தில் விடப்பபட்டார் என்பதற்குச் சான்றாக உள்ளன.
துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். (ஆதியாகமம் 21:15,16)
ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16) தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான். (ஆதியாகமம் : 21:5)
மேற்கண்ட பைபிளின் கூற்றுப்படி ஈஸாக்குக்குப் பால்குடி மறந்த நாளில் இஸ்மவேலை வனாந்தரத்தில் விட்டிருந்தால் அன்று இஸ்மவேலுக்கு பதினாறு வயது நிரம்பியிருக்கவேண்டும். இங்கே கேள்வி என்னவெனில் ஒரு பதினாறு வயது வாலிபனை அவனது தாய் எவ்வாறு தோளில் சுமக்க முடியும்? என்பதாகும். ஆதியாகமம் 21 ஆம் அத்தியாயம் விவரிக்கும் இஸ்மவேல் பதினாறு வயது வாலிபன் அல்ல. மாறாக கைக்குழந்தை ஆகும். இப்படிப்பட்ட முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? யூத ரப்பிகளின் கையூடல்கள் என்பது தெளிவு. தங்களின் மன இச்சைகளுக்கு ஏற்றவாறு தீர்க்கதரிசிகளின் வரலாற்றை வளைத்ததன் காரணமாக இயல்பாகவே ஏற்பட்ட முரண்பாடுகளை அவர்கள் அறியாமல் இருந்துவிட்டனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

நன்றி: http://www.islamkalvi.com/

0 Comments:

Post a Comment