Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

பகுதி இரண்டு

கடவுளின் இலக்கணம்

கடவுளுக்கும், மனிதனுக்கும் தனித்தனி இலக்கணங்களை பைபிள் கூறுகிறது. கடவுளுக்குக் கூறப்பட்ட எந்த இலக்கணமும் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. மனிதனுக்குக் கூறப்படுகின்ற எல்லா இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்பதை பைபிளின் துணையுடன் இப்பகுதியில் காண்போம்.

1. காணப்படுதல் கடவுளின் தன்மை அன்று

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.  (யோவான் 1:18)

கடவுள் என்பவர் எவராலும், எச்சந்தர்ப்பத்திலும் காணப்படக் கூடாது என்று பைபிள் கூறுகிறது.
இயேசுவைப் பல்லாயிரம் மக்கள் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்பும் கூட அவரைச் சிலர் கண்டுள்ளனர். மரணிப்பதற்கு முன்னரும், மரணித்து உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு பலரால் காணப்பட்டுள்ளதால் இயேசு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க முடியாது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றது.

2. இரத்தமும் சதையும் கடவுளுக்குக் கிடையாது.

கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக் கூடாது. அவர் ஆவி வடிவிலேயே இருக்க வேண்டும் எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
தேவன் ஆவியாக இருக்கிறார்.
(யோவான் 4:24)
இந்த வசனத்தில் கூறப்படும் இலக்கணத்திற்கேற்ப இயேசு இருந்தாரா?
இல்லை என்று பைபிள் அடித்துச் சொல்கிறது.
இயேசுவின் முழு வாழ்க்கையிலும் அவர் ஆவியாக இராமல் மாம்சம், சதை, எலும்பு ஆகியவற்றுடனே இருந்தார்.
அவர் சிலுவையில் அறையப்பட்டபோதும் அவர் இவ்வாறே இருந்தார்.
ஒரு ஆவியைச் சிலுவையில் அறைய முடியாது.
இயேசுவைச் சுட்டிக் காட்டும் ஓவியங்களில் அவர் சிலுவையிலறையப்பட்டு இரத்தம் சிந்தும் நிலையிலேயே தீட்டப்படுகிறார்.
அது மட்டுமின்றி அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் இதே நிலையிலேயே இருந்திருக்கிறார்.

அவர், அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள்! நீங்கள் காண்கிற படி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
(லூக்கா 24:38-40)

உயிர்த்தெழுந்த பின்னரும் கூட இயேசு ஆவியாக இல்லை; இரத்தமும், சதையும், எலும்பும் உள்ளவராகவே இருந்தார். இதன் பிறகும் அவரைக் கடவுள் என்று எப்படி நம்ப முடியும்?

3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
(நீதிமொழிகள் 17:15)

கெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் கூறுகிறது.
அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாகப் போ சாத்தானே! நீ இடறலாயிருக்கிறாய். தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)

பேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்
இயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்
கடவுளுக்குரியவைகளைச் சிந்திக்காதவன் என்றும்
இயேசு எடை போட்டிருக்கிறார்.
அது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிஷேசங்களும் கூறுகின்றன.
இவ்வளவு மோசமான துன்மார்க்கனுக்கு இயேசு வழங்கிய அந்தஸ்து என்ன தெரியுமா?

பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன். பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டு இருக்கும். பூகோலத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்  என்றார். (மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்தும் ஐயமற அறியலாம்.

4. நிலையாமை கடவுளின் தன்மையன்று

கடவுள் என்றென்றும் நிலையாக இருக்க வேண்டும். அவருக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது.
கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார். (சங்கீதம் 9:7)

இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பினால் கூட அவர் பிறப்பதற்கு முன் இருந்திருக்கவில்லை. மரணத்திற்கும் உயிர்த்தெழுவதற்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர் இருக்கவில்லை. என்றென்றைக்கும் இராததால் இயேசு கடவுளாக இருக்க முடியாது என்று அறியலாம்.

5. கொல்லப்படுவது கடவுளின் தன்மை அன்று

கடவுளை ஒருவரும் ஒருக்காலும் கொலை செய்ய முடியாது. கொல்லப்பட்ட யாரும் கடவுளாயிருக்க முடியாது என்றும் பைபிள் கூறுகிறது.
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே! (எசக்கியேல் 28:9)

குத்திப் போடப்பட்டவன் மனுஷனாகத் தான் இருக்க முடியுமே தவிர கடவுளாக இருக்கவே முடியாது என்ற இந்த இலக்கணத்துக்குப் பொருந்த இயேசு கொல்லப்பட்டிருக்கிறார்.
நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி…. (அப்போஸ்தலர் 5:30)

கொலை செய்யப்பட்டதன் காரணத்தால் தாம் கடவுள் இல்லை என்று இயேசு தெளிவாகக் காட்டிச் சென்ற பின் அவரைக் கடவுள் என்று கூறலாமா?

6. கடவுளுக்குத் துன்பமில்லை

கடவுளுக்கு எந்தத் துன்பமும் ஏற்பட முடியாது. மற்றவர்களின் துன்பங்களை அவர் நீக்கக் கூடியவராக இருக்க வேண்டும்' எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அனேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங்கீதம் 34:19)
இயேசு இந்த இலக்கணத்திற்கு மாறாகத் துன்பங்கள் பல அடைந்திருக்கிறார். அது மட்டுமின்றித் தம்மைத் துன்பங்களிலிருந்து காக்கும் படி கடவுளிடம் வேண்டுதலும் செய்திருக்கிறார்.
இப்பொழுது என் ஆத்மா கலங்குகிறது. நான் என்ன சொல்லுவேன். பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனா? ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். (யோவான் 12:27)

சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து; என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும் படிச் செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல. உம்முடைய சித்தத்தின் படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார். (மத்தேயு 26:39)

அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து; (மத்தேயு 26:67)

அவரைக் கட்டி; கொண்டு போய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள். (மத்தேயு 27:2)

அப்பொழுது அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும் படிக்கு ஒப்புக் கொடுத்தான். அப்பொழுது, அவன் பாபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்துச் சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக் கொடுத்தான். அப்பொழுது தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டு போய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச் செய்து… (மத்தேயு 27:26-27)

முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு, யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி, அவர் மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். 
(மத்தேயு 27:29-30)

அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் சீட்டுப் போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இப்படி நடந்தது.
(மத்தேயு 27:35)

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு; ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27:46)

இயேசு தமது வாழ்நாள் முழுவதும் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பதை நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. மேலே நாம் சுட்டிக்காட்டியவை அவரது வாழ்வில் கடைசியாக பட்ட துன்பங்கள் மட்டுமே. மிகவும் கேவலமான முறையில் இயேசு நடத்தப்பட்டிருக்கிறார்.
என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று புலம்பும் அளவுக்கு அவரால் தாங்கிக் கொள்ள முடியாத பெருந்துன்பத்தை அவர் அடைந்திருப்பதை இதிலிருந்து அறியலாம்.

கடவுள் என்பவர் எந்தத் துன்பத்தையும் அடையக் கூடாது. அடைய மாட்டார் என்று பைபிளே கடவுளுக்கு இலக்கணம் சொல்லும் போது அதை மீறி துன்பத்திற்கு ஆளானவரைக் கடவுள் எனக் கூறுவது தகுமா? கிறித்தவர்கள் இதையும் சிந்திக்க வேண்டும்.
இதிலிருந்து இயேசு கடவுளல்லர் என்பது தெளிவாகவில்லையா? பைபிள் கூறும் கடவுளுக்குரிய இலக்கணத்தைக் கூடக் கிறித்தவர்கள் நம்ப வேண்டாமா?

7. கடவுள் தவறு செய்ய மாட்டார்

கடவுள் அனைத்து விஷயங்களிலும் நல்லதையே செய்ய வேண்டும். எந்தத் தவறும் செய்யக் கூடாது என்று பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
கர்த்தரைத் துதியுங்கள். அவர் நல்லவர்…
(முதலாம் நாளாகமம் 16:34)

இந்த இலக்கணம் தம்மிடம் இல்லை என்று இயேசுவே மறுத்துள்ளார்.
அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே  என்றார்.
(மார்க்கு 10:18)

8. கடவுள் அறியாமைக்கு அப்பாற்பட்டவர்

கடவுளுக்கு எதைப் பற்றியும் அறியாமை இருக்கக் கூடாது. அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களின் உள்ளத்தில் மறைத்து வைத்திருப்பதும் கூட அவருக்குத் தெரிய வேண்டும். இவ்வாறு பைபிள் கூறுகிறது.
தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால்…(முதலாம் ராஜாக்கள் 8:40)

மனிதர்களின் இருதயங்களில் உள்ளதை அறிவது ஒருபுறமிருக்கட்டும்! வெளிப்படையான பல விஷயங்கள் கூட இயேசுவுக்குத் தெரியாமல் இருந்திருக்கின்றன. அப்பொழுது இயேசு, என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். (லூக்கா 8:45)

காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்தி மரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல், இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது என்றார்; உடனே அத்தி மரம் பட்டுப் போயிற்று. (மத்தேயு 21:18-19)

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28) என்று இயேசு கூறினார்.
அந்தப் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவன் அவரைக் காட்டிக் கொடுப்பான் என்பதை அப்போது இயேசு அறியவில்லை.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார். குமாரனும் அறியார்.
(மார்க்கு 13:32)
இப்படி ஏராளமான விஷயங்களை இயேசு அறிந்திருக்கவில்லை. பக்தர்களைக் காப்பது என்றால் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் இல்லையா? தன்னைத் தொட்டது யார் என்பதைக் கூட அறியாத ஒருவர் தங்களை இரட்சிப்பார் என்று கிறித்தவர்கள் நம்புவது முறை தானா? சிந்திக்கட்டும்.

9. கடவுள் உறங்க மாட்டார்

இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை. தூங்குகிறதுமில்லை.
(சங்கீதம் 121:4)
அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். – (மத்தேயு 8:24)
இயேசு நன்றாக அயர்ந்து தூங்கினார் என்று இவ்வசனம் கூறுகிறது. கடவுள் உறங்கக் கூடாது என்ற இலக்கணத்துக்கு இது முரணாகவுள்ளது.

10. கடவுள் பாவியா?

இயேசு தம்மைச் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்திருக்கிறார். (மத்தேயு 26:38-45, மார்க்கு 14:36, லூக்கா 22:44)

ஆனாலும் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.
தேவனிடம் நல்லவர் செய்யக்கூடிய எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. பாவிகளின் கோரிக்கைக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்பது பைபிளின் போதனை. (யோவான் 9:31)

இயேசுவின் கோரிக்கை இறைவனால் ஏற்கப்படாதது எதைக் காட்டுகிறது?
இயேசு பாவம் செய்பவராக இருந்திருக்கிறார்; நல்லவராக இருக்கவில்லை என்று இந்த வசனத்திலிருந்து விளங்கவில்லையா?

11. கடவுள் போதை அடிமையா?

மதுபானம் அருந்துவதைப் பைபிள் கடுமையாகக் கண்டிக்கிறது. எல்லாத் தீமைகளும் மதுபானம் அருந்துவதால் தான் ஏற்படுகிறது எனவும் பைபிள் கூறுகிறது. (பார்க்க: நீதிமொழிகள் 23:29-35)

இயேசுவோ மதுபானம் அருந்துபவராக இருந்தார் என்று பைபிள் அறிமுகம் செய்கிறது.
மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப் பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். (மத்தேயு 11:19)

இயேசு மதுபானம் அருந்துபவராக மட்டுமல்ல. அதை மிகவும் விரும்பக் கூடியவராக இருந்தார் என்பதும், இது மக்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தது என்பதும், அதை மக்கள் விமர்சனம் செய்தார்கள் என்பதும், அந்த விமர்சனம் இயேசுவின் காதுகளுக்கு எட்டியது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து தெரிகிறது.
மதுபானம் அருந்திய ஒருவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?
(இயேசு இறைவனின் தூதராக இருந்ததால் அவர் மதுபானம் அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்று இஸ்லாம் அவரைக் கண்ணியப்படுத்துகிறது. பைபிள் அவரை மதுபானப் பிரியர் எனக் கூறுவதால் அதைச் சுட்டிக் காட்டுகிறோம்)

12. கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்

விபச்சாரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது பைபிள்.
(நீதிமொழிகள் 6:29)
ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.
(யோவான் 8:3-11)
அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை. இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர். ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை)

இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமா? இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?
கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்?

13. கடவுள் முன்கோபியா?.

சாந்த குணம் தான் புத்திசாலித்தனம்; முன்கோபம் மதியீனம் என்று பைபிள் கூறுகிறது.
(பார்க்க: நீதிமொழிகள் 14:29)
இயேசு இந்தப் போதனையை பல தடவைகள் மீறியிருக்கிறார்.
விரியன் பாம்புக் குட்டிகளே! நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்?
(மத்தேயு 12:34)
இதே கருத்து லூக்கா 3:7-லிலும் உள்ளது.
இந்தப் பொல்லாத விபச்சாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்…
(மத்தேயு 12:39)
இதே கருத்து மத்தேயு 16:4-லிலும் உள்ளது.
அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
(மத்தேயு 15:26)
சர்ப்பங்களே – விரியன் பாம்புக் குட்டிகளே
(மத்தேயு 23:33) எனத் திட்டினார்.

இப்படியெல்லாம் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி சாந்த குணத்தை இயேசு இழந்திருப்பதாக பைபிள் கூறுகிறது. இதன் பிறகும் அவரைக் கடவுள் என்று கூறலாமா?

14. கடவுளுக்குப் பசி, தாகமா?

ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொறித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி… (லூக்கா 24:41-43)

இயேசு… தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான் 19:28)

ஏதோ ஓரிரு சந்தர்ப்பங்களில் தான் அவர் சாப்பிட்டார் என்று நினைத்து விடக் கூடாது. நன்றாக விரும்பிச் சாப்பிடக் கூடியவராக இருந்தார்.
இயேசு மதுபானம் அருந்தியதாகக் கூறும் வசனத்தில் (மத்தேயு 11:19) போஜனப் பிரியர் என்று கூறப்பட்டுள்ளது.
சாப்பிடுவதில் அதிக விருப்பம் உள்ளவராக இயேசு இருந்திருக்கிறார். சாப்பிடுதல் கடவுளின் இலக்கணமாகுமா? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

15 கடவுள் மலஜலம் கழிப்பாரா?

வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசன வழியாய்க் கழிந்து போம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? மத்தேயு 15:17

வாயின் வழியாக எது உள்ளே போனாலும் அது வெளியே வந்தாக வேண்டும் என்பது இயேசுவே கூறுகிற நியதி. அவர் தனது வாயின் வழியாக பல உணவுகளையும், பானங்களையும் உள்ளே செலுத்தியுள்ளார். எனவே அவர் மல ஜலம் கழித்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
கடவுள் மல ஜலம் கழிப்பாரா? என்பதைச் சிந்திப்பவர்கள் இயேசுவைக் கடவுள் என்று ஒருக்காலும் கூற மாட்டார்கள்.

16 கடவுள் நன்பரைக் கைவிடுவாரா?

இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கிய குருநாதர் யோவான் காவலில் வைக்கப்பட்டதை அறிந்தும் இயேசு அவரைக் காக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், (மத்தேயு 4:12)

தனக்கு ஞானஸ்நானம் தந்த குருநாதராகிய யோவான் காவலில் வைக்கப்பட்டது தெரிந்ததும் அவருக்கு எந்த வகையிலும் உதவாமல் ஊரைவிட்டே வெளியேறி கலிலேயாவுக்குச் சென்றுவிட்டதாக என்று இவ்வசனம் கூறுகிறது.
குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஊரிலேயே இருந்திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை.

17. கடவுளுக்கு அச்சமில்லை

கடவுள் அச்சத்திற்கு அப்பாற்பட்டவர்; யாருக்கும், எதற்கும் அஞ்சத் தேவையற்றவர். ஆனால் இயேசு அச்சமுற்று வரிப்பணம் வசூலிக்கிறவர்களிடம் வரி செலுத்தக் கூறியிருக்கிறார்.

அவன் வீட்டிற்குள் வந்த போது, அவன் பேசுவதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி  சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்? என்று கேட்டார். அதற்குப் பேதுரு அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி, அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார். (மத்தேயு 17:25-27)

அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.
தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.
இயேசு, தாம் யூதர்களால் பிடிக்கப்படப் போவதை அறிந்து அச்சமும் துக்கமும் கொண்டிருந்தார்.

.அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, நான் ஜெபம் பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி, பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக் கொண்டு போய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர், என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள் என்று சொல்லி… (மாற்கு 14:32-34)

யூதர்கள் தம்மைக் கல்லால் எறியத் தேடிய போது இயேசு இருளைத் தேடினார்.
(யோவான் 8:59-10:39)

ஆகையால் இயேசு அதன் பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம் விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப் போய், அங்கே தம்முடைய சீஷருடனே கூடத் தங்கியிருந்தார். (யோவான் 11:54)

யூதர்கள் தன்னைத் தேடுகிறார்கள் என்பதை அறிந்தவுடன் இயேசுவுக்கு ஏற்பட்ட அச்சம் சாதாரணமானது அல்ல.
மரணத்துக்கு நிகரான துக்கத்தில் இருக்கிறேன் என்றார்.
நான் ஜெபம் பண்ணும் போது யாரும் என்னைப் பிடித்து விடாதிருக்கத் துணையாக இருங்கள் என்கிறார்.
தனக்குப் பாதுகாப்பாக தூங்காமல் விழித்திருக்குமாறு சீடர்களிடம் கெஞ்சுகிறார்.
இருளைத் தேடி ஓடி தலைமறைவாக இருந்துள்ளார்.
காட்டுக்குச் சென்று ஒளிந்திருக்கிறார்.
வேறொரு ஊருக்குச் சென்று அங்கே ஒளிந்து கொண்டார்
என்றெல்லாம் இவ்வசனங்கள் கூறுகின்றனவே? கடவுள் இப்படித் தான் அஞ்சி நடுங்குவாரா? மனிதனுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வது தான் கடவுளின் தன்மையா? என்னோடு இருங்கள் என்று மற்றவர்களிடம் கெஞ்சுவது தான் கடவுளின் இலக்கணமா?
 
18 கடவுள் பிசாசினால் சோதிக்கப்படுவாரா?

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டார். (மத்தேயு 4:1)

19. கடவுள் சலிப்படையார்

இயேசு தமக்குத் தனிமையில்லை; ஓய்வில்லை என்று சலிப்புற்றிருக்கிறார்.
அதற்கு இயேசு நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
(மத்தேயு 8:20)

20. கடவுளுக்கு படிப்படியான வளர்ச்சி உண்டா?

பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர் மேல் இருந்தது. (லூக்கா 2:40)

அவருக்குப் பன்னிரண்டு வயதான போது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய் (லூக்கா 2:42)

இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் அதிகரித்து, கடவுளுக்கும் மனுஷனுக்கும் பிரியராக மென்மேலும் வளர்ந்து வந்தார். (லூக்கா 2:52)

சாதாரண, சராசரி மனிதனுக்கு உள்ள அத்தனைத் தன்மைகளும், பலவீனங்களும் இயேசுவிடம் இருந்துள்ளன. மனிதர்கள் எப்படிப் பலவீனங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அப்படித் தான் இயேசுவும் இருந்திருக்கிறார் என்பதை பைபிளின் இந்த வசனங்கள் தெளிவாகக் காட்டவில்லையா?

21 கடவுள் தாய்க்குப் பிறப்பாரா?

அவள் தன் முதற் பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். (லூக்கா 2:7)

தாய் வயிற்றில் உருவாகிப் பிறந்தவர் கடவுளாக இருப்பது கிடக்கட்டும். தூய்மையானவராகக் கூட இருக்க முடியாது என்று பைபிள் கூறுகிறது.
ஸ்திரீயிடத்தில் பிறந்தவன் சுத்தமாய் இருப்பது எப்படி? (யோவான் 25:4)

22 கடவுள் தாய்ப்பால் குடிப்பாரா?

அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக் கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும், பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். (லூக்கா 11:27)

23 கடவுள் விருத்த சேதனம் செய்யப்படுவாரா?

பிள்ளைக்கு விருத்த சேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். (லூக்கா 2:21)

24 கடவுள் தொழில் செய்வாரா?

 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். (மார்க்கு 6:3)

25 கடவுள் பாவ அறிக்கையிடுவாரா?

தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். (மத்தேயு 3:6)

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யோவானிடம் மக்கள் ஞானஸ்நானம் பெற்றனர் என்பதை இவ்வசனம் கூறுகிறது.

மேலும் ஞானஸ்நானம் பெறுபவர் தான் பாவம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டு பாவ அறிக்கையிட வேண்டும் என்றும் இவ்வசனம் கூறுகிறது.
இந்த யோவானிடம் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றதாக பைபிள் கூறுகிறது.
அப்பொழுது யோவானால் ஞானஸ் நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
(மத்தேயு 3:13)

எனவே ஞானஸ்நானம் பெறும் போது இயேசுவும் பாவ அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்பதை இரண்டு வசனங்களிலிருந்தும் நாம் அறியலாம்.

26 கடவுள் பிறருக்கு கால் கழுவி விடுவாரா

பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். 
(யோவான் 13:5)

27 கடவுள் நறுமணம் பூசிக் கொள்ள ஆசைப்படுவாரா

ஒரு ஸ்திரீ விலையேறப் பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக் கல் பரணியைக் கொண்டு வந்து அவர் போஜன பந்தியிலிருக்கும் போது அந்தத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே என்றார்கள்.
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி : நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
(மத்தேயு 26:7-10)

28 கடவுளுக்கு மோசமான பரம்பரையா?

வேசிப் பிள்ளைகள், விபச்சாரச் சந்ததியினர் கர்த்தரின் சபைக்கு உட்படலாகாது என்று பைபிள் கூறுகிறது. (உபகாமம் 23:2, 3)

விபச்சாரச் சந்ததிகள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லும் இயேசுவையே விபச்சார சந்ததி எனவும் பைபிள் கூறுகிறது.

தாமார்

தாமார் தனது மாமனாராகிய யூதாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டு பிள்ளை பெற்றவள் என்று பைபிள் கூறுகிறது.

அப்பொழுது  உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது? சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக் கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நேக்கி: வழியண்டை நீரூற்றுக்கள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டு போனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்று மாதம் சென்ற பின்பு 'உன் மருமகளாகிய தாமார் வேசித் தனம் பண்ணினாள், அந்த வேசித் தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டு வாருங்கள், அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்றான். அவள் வெளியே கொண்டு வரப்பட்ட போது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்த போது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிற போது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறி வந்ததென்ன, இந்த மீறுதல் உன் மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது. (ஆதியாகமம் 38:13-29)

பைபிளின் மேற்கண்ட வசனத்தில் தாமார் என்ற பெண்ணைப் பற்றிக் கூறப்படுகிறது. அவன் தெரிந்து கொண்டே தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து அதன் மூலம் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள் எனக் கூறப்படுகிறது. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தனது மாமனாரிடம் வஞ்சகமாக அடைமானம் பெற்றுக் கொண்டவள் என்பதும் தெரிகின்றது.

ஒழுக்கம் கெட்டவள் என்று பைபிள் அறிமுகப்படுத்தும் தாமார்' என்பவள் வழியில் தான் இயேசு பிறந்தார் எனவும் பைபிள் கூறுகிறது.

மத்தேயுவின் முதல் அதிகாரத்தில் 1 முதல் 16 வரை இயேசுவின் பரம்பரைப்பட்டியல் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் தாமார் என்ற ஒழுக்கங்கெட்டவளும் இடம் பெற்றுள்ளாள்.

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றொன்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; 

யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; 

பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; 

எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; 

அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; 

நகசோன் சல்மோனைப் பெற்றான்;

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; 

போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; 

ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். 

தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; 

ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; 

அபியா ஆசாவைப் பெற்றான்;

ஆசா யோசபாத்தைப் பெற்றான்; 

யோசபாத் யோராமைப் பெற்றான்; 

யோராம் உசியாவைப் பெற்றான்;

உசியா யோதாமைப் பெற்றான்; 

யோதாம் ஆகாசைப் பெற்றான்; 

ஆகாஸ் எசோக்கியாவைப் பெற்றான்;

எசோக்கியா மனாசேயைப் பெற்றான்; 

மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன பின்பு, 

எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; 

சலாத்திலேல் சொரொபாபேலைப் பெற்றான்;

சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; 

அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோதைப் பெற்றான்;

ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆதீமைப் பெற்றான்; ஆதீம் எலியூதைப் பெற்றான்;

எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார். (மத்தேயு 1:1-16)

இதில் மூன்றாவது வசனத்தைப் பாருங்கள்!

தாமார் என்பவள் மாமனாருடன் விபச்சாரம் செய்தாலும் அவள் விபச்சாரம் செய்வதற்கு முன் கணவன் மூலம் பிள்ளை பெற்றிருக்கலாம் அல்லவா? அந்தப் பிள்ளையின் வழித் தோன்றலாக இயேசு பிறந்திருக்கலாம் அல்லவா? என்றெல்லாம் நாம் நல்லெண்ணம் வைக்க நினைத்தாலும் பைபிள் அதற்கு குறுக்கே நிற்கிறது.

ஏனெனில் தாமார் தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து எந்தப் பிள்ளையைப் பெற்றாலோ அந்தப் பிள்ளையும் இயேசுவின் பரம்பரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தாமார் விபச்சாரம் செய்ததைக் கூறும் வசனத்தில் விபச்சாரத்தில் பிறந்த மகனுக்கு பாரேஸ் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாரேஸ் வழியில் தான் இயேசு பிறந்தார் என்று மத்தேயுவின் பரம்பரைப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

மத்தேயு மூன்றாம் வசனத்தில் இவரது பெயர் கூறப்பட்டுள்ளது.

விபச்சார சந்ததியினர் கடவுளை நெருங்க முடியாது என்று ஒருபக்கம் பைபிள் கூறுகிறது.

மறுபக்கம் இயேசு விபச்சார சந்ததிகளின் வழித்தோன்றலாக வந்தவர் எனவும் கூறுகிறது.

கடவுளுக்கு மகன் இருக்க முடியாது என்பதை மறந்து விட்டு மகன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மாமனாரும் மருமகளும் கூடி விபச்சாரம் செய்து அதன் மூலம் பிறந்த சந்ததியின் வழித்தோன்றலில் தானா தனது மகனைக் கடவுள் தேர்வு செய்வார்? இதைக் கூட கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

உரியாவின் மனைவி

மேலும் அதே வம்சப் பட்டியலில் 'தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான்'
(மத்தேயு 1:6) என்று கூறுகிறது.

இன்னொருவன் மனைவி மூலம் தாவீது ராஜா பெற்ற சாலமோன் வழியாக இயேசுவின் வம்சம் தொடர்வதாக பைபிள் கூறுகிறது.

ராகாப்

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். (மத்தேயு 1:5)

இயேசுவின் வம்சப் பட்டியலில் இடம் பெறும் இந்த ராகாப் யார்?

அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டிக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். (யோசுவா 2:1)

இந்த விபச்சாரியின் வழியில் தான் இயேசு பிறந்ததாக பைபிள் கூறுகிறது.

ரூத்

போவாஸ் ஒபேதை ரூத்தினிடத்தில் பெற்றான். (மத்தேயு 1:5)

இயேசுவின் பாரம்பர்யப் பட்டியலில் இடம் பெறும் ரூத் என்பவள் யார்?

அவளும் தகாத நடத்தையுடயவள் என்று ரூத் 1:4, 4:10 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

கடவுள் எந்தப் பரம்பரை தமது சபைக்கு வரலாகாது என்று கூறினாரோ அந்தப் பரம்பரையிலிருந்து தான் தனக்கு மகனைத் தேர்வு செய்வாரா?

பைபிள் கூறும் இயேசுவின் பாரம்பர்யம், நடத்தை, அவரது பலவீனங்கள் இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது இயேசு நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு வர இயலாது. இதன் பின்னரும் கிறித்தவர்கள் அவரைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ கூறினால் இது வரை நாம் எடுத்துக் காட்டிய அத்தனை பைபிள் வசனங்களையும் மறுக்கிறார்கள் என்றே பொருள்.

கடவுளிடம் இருக்கக் கூடாத பலவீனங்கள்

இயேசுவிடம் காணப்பட்ட பலவீனங்கள் அனைத்தையும் மீண்டும் நினைவு கூர்ந்து பாருங்கள்! இத்தனை பலவீனங்களையும் கொண்டிருந்த ஒருவர் கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க இயலுமா? என்றும் சிந்தியுங்கள்!

* இயேசு கண்ணீர் விட்டுக் கலங்கி, துக்கங் கொண்டிருந்தார். 
*இயேசுவுக்குத் தாகம் எடுத்திருக்கிறது. 
* இயேசு சாப்பிட்டிருக்கிறார். 
* இயேசு பயந்திருக்கிறார்.
* இயேசு கவலைப்பட்டிருக்கிறார்.
* இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார்.
* குருவைக் கைவிட்டிருக்கிறார்..
* மிகவும் சலிப்படைந்திருக்கிறார்.
* மதுபானம் அருந்தியிருக்கிறார். 
* மலஜலம் கழித்திருக்கிறார்.
* அரசனுக்குப் பயந்திருக்கிறார்.
* மோசமான ஆட்சியாளருக்குப் பயந்து கொண்டு வரி செலுத்தி இருக்கிறார். 
* பலரை மோசமான முறையில் திட்டியிருக்கிறார்.
* விருத்த சேதனம் செய்யப்பட்டிருக்கிறார்.
* தாய்ப்பால் குடித்திருக்கிறார். 
* தொழில் செய்திருக்கிறார். 
* மனிதனாகவே வளர்ந்தார். 
* பாவ அறிக்கையிட்டிருக்கிறார். 
* பிறருக்கு கால் கழுவி விட்டிருக்கிறார். 
* ஓடி ஒளிந்திருக்கிறார். 
* நறுமணம் பூசிக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்.
* துன்புறுத்தப்பட்டுள்ளார்.
* அவரது முகத்தில் துப்பியுள்ளனர்.
* தலையில் குட்டி கன்னத்தில் அறைந்துள்ளனர்.
* வாரினால் அடிக்கப்பட்டார். 
* முள் முடியைத் தலையில் சுமந்தார். *
அவரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். 
* அவர் வேதனை தாளாமல் கத்தியிருக்கிறார். 
சாதாரண, சராசரி மனிதனுக்கு உள்ள அத்தனை பலவீனங்களும் இயேசுவிடம் இருந்துள்ளன. மனிதர்கள் எப்படிப் பலவீனங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அப்படித் தான் இயசுவும் இருந்திருக்கிறார் என்பதைப் பைபிளின் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறவில்லையா?


இவ்வளவு பலவீனங்களைக் கொண்ட ஒருவரைக் கடவுள் என்று நம்ப, கிறித்தவர்கள் வெட்கப்பட வேண்டாமா? தன்னையே காத்துக் கொள்ள முடியாதவர் தங்களைக் காப்பார் என்று கிறித்தவர்கள் நம்புவது விவேகமாகுமா?

கடவுள் இவ்வளவு பலவீனங்கள் உள்ளவரைத் தான் தனக்கு மகனாக தேர்வு செய்வாரா?

கடவுளின் மகன் என்றால் சராசரி மனிதர்களின் அத்தனை பலவீனங்களும் அவரிடம் இருந்திருக்குமா?

மனிதர்களையும், இயேசுவையும் யார் படைத்தானோ – இயேசு எவனிடம் தமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்தனை செய்தாரோ அந்த ஒரே கடவுளிடம் தான் அனைவரும் திரும்ப வேண்டும்! ஏனெனில் அவனிடம் தான் இத்தகைய பலவீனங்கள் ஏதும் கிடையாது.

நன்றி: www.onlinepj.com  

0 Comments:

Post a Comment