Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணமுடித்த போது மக்களை அழைத்து விருந்து வைத்தார்கள். விருந்துக்கு வந்த மக்களில் சிலர் விருந்து முடிந்தும் திரும்பிச் செல்வதில் தாமதம் செய்தார்கள். இது நபி(ஸல்)அவர்களுக்கு சங்கடமாக இருந்தது, இதை அவர்களிடம் சொல்ல வெட்கப்பட்டார்கள். இது பற்றியே 33:53ம் வசனம் அருளப்பட்டது.

33:53. முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.

இந்த வசனத்தில் ”நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்” என இறைவன் கூறுவது, நபி(ஸல்) அவர்களுடன் நேரடியாக வாழ்ந்த மக்களையே கட்டுப்படுத்தும். இதில் மற்ற முஸ்லிம்களுக்கு விருந்து உபச்சாரத்திற்கான சமுதாய சீர் திருத்தம் வலியுறுத்தப்படுகிறது – விருந்துக்குச் செல்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை முன் வைக்கப்படுகிறது. (முஸ்லிம்கள் பிறருடைய வீட்டில் அனுமதியின்றி நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதை பார்க்க, 24:27,28,29 இறை வசனங்கள்.) 

பர்தா சட்டம் இந்த நேரத்திலேயே அருளப்பட்டது என்பதை கீழ்கண்ட ஹதீஸ்களிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.

”பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜஹ்ஷ் மகள் ஸைனப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (‘வலீமா’விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அல்லாஹ்” இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்” எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்துவிட்டார்கள்”. (அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி)

”நான், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்”. (உமர்(ரலி) புகாரி)
33:59வது இறைவசனம், நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிடவில்லை. ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயப் பெண்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. 33:59வது வசனம் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே பொருந்தும். என்று வாதிப்பவர்கள் ”ஈமான் கொண்வர்களின் பெண்களுக்கும்” என்று இறைவன் குறிப்பிடுவது நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் – அனைத்து முஸ்லிம் பெண்களையும் குறித்துப் பேசுகிறது என்பதை விளங்கிக் கொள்ளட்டும்.

//இந்த வசனம் ‘வஹி’ எனப்படும் ‘இறை ஆவேசம்’ மூலம் முகமது நபியவர்களுக்கு வந்து இறங்கிய காலத்தைப் பார்த்தோமானால், அப்போது அவர் மிகுந்த சங்கடத்தில் ஆழ்ந்திருந்த காலம் என்பதை பார்க்கலாம். அவர் தமது (வளர்ப்பு) மகனாகிய சைத்-தினுடைய மனைவியான ஜைனப் பை மணந்து கொண்டது குறித்து, அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. நபிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதீனா வாசிகளும், அவரது மனைவிகளும் கூட இது சம்பந்தமாய் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிர்ப்பாயிருந்தனர்.//

‘வஹீ’ யை ‘இறை ஆவேசம்’ என்று மொழி பெயர்த்து ஆவேசப்பட்டிருக்கிறார். இறை ஆவேசம் என்று நாமறிந்து இதுவரை எவரும் மொழி பெயர்த்ததில்லை, எந்த அகராதி நூலிலும் ‘வஹீ’ யை இறை ஆவேசமாகப் பொருள் கொள்ளவில்லை.

”அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு ‘வஹீ’ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 53:3,4)

‘வஹீ’ யை இறை ஆவேசம் என மொழி பெயர்ப்பில் மேல் காணும் இறைவசனத்தை வாசித்தால், ‘அது அவருக்கு ‘இறை ஆவேசம்’ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை’ இப்படித்தான் வாசிக்க முடியும். எனவே ‘வஹீ’ யை ‘இறை ஆவேசம்’ என்று எழுதியது அறியாமையின் காரணம் எனப் புறக்கணிப்போம்.

//ஜைனப் பை மணந்து கொண்டது குறித்து, அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. நபிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதீனா வாசிகளும், அவரது மனைவிகளும் கூட இது சம்பந்தமாய் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிர்ப்பாயிருந்தனர்.//

நபி(ஸல்) அவர்களுக்கு அடைக்கலம் தந்த மதீனாவாசிகளான அன்சாரிகள், நபி(ஸல்) அவர்கள் ஸைனபை(ரலி) அவர்களை மணந்த போது நபி(ஸல்) அவர்களுக்கு எதிர்ப்பாயிருந்தனர் என்பது அப்பட்டமான பொய் என்று நாம் கூறுகிறோம். உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஆவணங்களை வைத்து நிரூபிக்கட்டும்.

//அவரது மனைவிகளும் கூட இது சம்பந்தமாய் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிர்ப்பாயிருந்தனர்.//

21ம் நூற்றாண்டில் இருந்து கொண்டு இதே கண்ணோட்டத்துடன், 6ம் நூற்றாண்டின் உலக நாடுகளின் சரித்திர வரலாற்றை ஒப்பிட்டு நோக்குவது வராலாற்றின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. ஆண்கள் பலதார மணமுடித்துக் கொள்வது அக்காலத்தில் சர்வ சாதாரணம். அக்காலப் பெண்களும் இதை எதிர்க்கவில்லை. ஆண்களின் பலதார மணத்தை, திருமணக் கலாச்சாரமாகவே அன்றைய சமூகமும் அங்கீகரித்திருந்தது. பெண்களும் பலதாரத் திருமணக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களிடையே சக்களத்தி சண்டைகள் நடந்திருக்கின்றன, ஒருவர் மற்றவர் மீது பொறாமை கொண்டிருக்கிறார்கள். (பார்க்க, 66:1-5) இது அவர்களின் பெண்ணியல்பாக இருந்தது.

நபி(ஸல்) அவர்களின் பலதார மணத்தை, நபி(ஸல்) அவர்களின் மனைவிகள் எதிர்த்தார்கள் என எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மாமி மகளாகிய ஸைனப்(ரலி) அவர்களை மணமுடித்த போது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள், ஸவ்தா, ஆயிஷா, ஹஃப்ஸா, குஸைமாவின் மகள் ஸைனப் ஆகிய நான்கு பெண்களும் அத்திருமணத்தைக் கண்டு அதிர்ச்சியடையவில்லை, எதிர்க்கவில்லை. மாறாக ”பாரக்கல்லாஹ்” – அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும். என்று நான்கு மனைவிமார்களும் நபி(ஸல்) அவர்களுக்கு மணவாழ்த்துக் கூறினார்கள். (புகாரி)

வரலாறு இவ்வளவு தெளிவாக இருக்க, நபி(ஸல்) அவர்கள் மனைவிமார்கள் ‘அதிர்ச்சியடைந்தார்கள், எதிர்ப்பாயிருந்தார்கள் என்று சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை.

//முகமது நபியவர்களுக்கு வந்து இறங்கிய காலத்தைப் பார்த்தோமானால், அப்போது அவர் மிகுந்த சங்கடத்தில் ஆழ்ந்திருந்த காலம் என்பதை பார்க்கலாம்.//
 
மிகுந்த சங்கடத்தில் ஆழ்ந்திருந்த காலம், என்பது உண்மையே. நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணமுடித்ததால் ஏற்பட்ட சங்கடங்கள் அல்ல. பஞ்சாத்தால் ஏற்பட்ட வறுமை சங்கடமான காலமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களும், நபியைப் பின் பற்றிய அன்றைய முஸலிம்களும் இச்சங்கடங்களை சோதனையாகவேக் கருதி பொறுமையை கடைப்பிடித்தனர். இது உஹதுப் போர் நடந்து முடிந்த காலம் – அகழ்ப் போர் நிகழ்வுக்கு முன் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் நேரம் நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் பஞ்சத்தால் வறுமைக்குத் தள்ளப்பட்டனர்.

தொடர்ந்து மூன்று நாள்கள் கூட உணவின்றி கொலைப் பட்டினியில் வயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு அந்த நிலையில் அகழ் தோண்டுகிறார்கள். நபி(ஸல்) அவர்களும் பட்டினியின் காரணமாக வயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு அகழ் வெட்டும் பணியில் மண் சுமக்கிறார்கள். இதுதான் சரித்திர உண்மை.

பஞ்சத்தால் ஏற்பட்ட வறுமை நேரத்தில், நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் சிலர் பொறுமை இழக்கிறார்கள். அப்போது அருளப்பட்ட இறை வசனங்கள் இதுதான்,

33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம், ”நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
33:29. ”ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!

நீங்கள் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும், மறுமையையும் விரும்புபவர்களாக இருந்தால் சோதனைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்க்கையை விரும்புபவர்களாக இருந்தால் ”வாருங்கள் உங்களை அழகிய முறையில் விடுதலை செய்து விடுகிறேன்” என்று நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.

நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு, நபி(ஸல்) அவர்களின் மனைவிகள் வேறு எவரையும் மணந்து கொள்ளக் கூடாது என்றும். நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் அன்னையைப் போன்றவர்கள், அதாவது அவர்களைத் திருமணம் செய்வது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. என்றும் அருளப்பட்ட (33:53) வசனத்தின் கடைசிப் பகுதி நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்ட நிபந்தனையா? என்றால் நிச்சயமாக இல்லை.

நபி(ஸல்) அவர்களுக்குப்பின் மறுமணம் செய்து கொள்ள விரும்பாதவர்கள் மட்டுமே நபி(ஸல்) அவர்களின் மனைவியாக தொடர்ந்து இருக்கலாம். நபி(ஸல்) அவர்களுக்குப்பின் மறுமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இப்போதே மணவிலக்குப் பெற்று நபி(ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து விடலாம். என எதைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமை, நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களின் விருப்பத்திற்கே விடப்பட்டது.

”இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) ‘நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்படவேண்டாம்” என்று கூறினார்கள்.

என் பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப் போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள்,

‘நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்லமுறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்து வைத்துள்ளான்” எனும் (திருக்குர்ஆன் 33:28, 29)வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்”. (ஆயிஷா (ரலி) புகாரி)

நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள், நபி(ஸல்) அவர்களுக்குப்பின் எவரையும் மணக்கக்கூடாது என்பதை நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களே விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் இதில் நிர்ப்பந்திக்கவில்லை என்பது தெளிவு. நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அன்னையைப் போன்றவர்கள் – மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள். இது எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கும் அந்தஸ்து அல்ல. இதனாலேயே ”நபியின் மனைவிகளே நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல” (33:32) என்று இறைவன் மற்றப் பெண்களிலிருந்து நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களை வித்தியாசப்படுத்துகின்றான். அதுமட்டுமல்ல அவர்களுக்கென்று சில அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் போதிக்கிறான் என்பதை கீழ்வரும் இறை வசனங்களிலிருந்து அறியலாம்.
33:30நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சலபமேயாகும்!
 33:31. அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான், இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள், முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள், தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
33:34மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.

நபியின் மனைவிகளை ”உங்கள் வீட்டிலேயே தங்கியிருங்கள்” என்று இறைவன் கூறுவதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டுமா? என்றால், இல்லை.
”பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியரான) ஸவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சாரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப்(ரலி) பார்த்துவிட்டு ‘ஸவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!” என்று கூறினார்கள். ஸவ்தா(ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது ஸவ்தா(ரலி) வீட்டினுள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர்(ரலி) என்னிடம் இவ்வாறெல்லாம் கூறினார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி)

நபியின் மனைவிகள் அஞ்ஞானக் காலத்துப் பெண்கள் போல் அலையக்கூடாது என்பதையே இறைவன் தடுக்கிறான் தங்களின் தேவைக்காக நபியின் மனைவிகள் வெளியில் சென்று வருவதைத் தடை செய்யவில்லை என்பதை அறியலாம்.

நன்றி: www.islamkalvi.com  

0 Comments:

Post a Comment