பகுதி மூன்று
கர்த்தரின் அறிவுரைகள்
இயேசுவைப் பற்றி எடுக்கப்படும் முடிவாகட்டும்! கிறித்தவர்கள் மதம் சம்மந்தப்பட்ட சட்டங்களைத் தீர்மானிப்பதாகட்டும்! கிறித்தவர்கள் வேதமாக நம்புகின்ற பைபிளின் போதனைக்கு உட்பட்டதாகவே அது இருக்க வேண்டும். பைபிளுக்கு முரணாக எடுக்கப்படும் எந்த முடிவாக இருந்தாலும் அதை நிராகரிக்க வேண்டும்.
இயேசுவைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ நம்புவதற்கு கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் தவறானவை என்பதை பைபிளிலிருந்தே நிரூபித்துக் காட்டினோம்.
முடிவாகச் சில போதனைகளை முன் வைக்கிறோம். கடவுள் ஒருவர் தான் என்பதை அழுத்தமாகச் சொல்லும் அந்தப் போதனைகளைப் பைபிளிலிருந்தே முன் வைக்கிறோம்.
கடவுள் யார்?
கடவுள் தன்னுடைய அதிகாரத்தை எவருக்கேனும் வழங்கியிருக்கிறாரா?
மோசேயின் உபாகமம்
ஆகையால் உயர வானத்திலும், தாழ பூமியிலும் கர்த்தரே தேவன். அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து (உபகாமம் 4:39)
இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்கிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசி
(உபாகமம் 6:4-7)
உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனங்காண்கிறவனாகிலும் எழும்பி நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும், அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து அவரைப் பற்றிக் கொள்வீர்களாக. (உபாகமம் 13:1-4)
அங்கே காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள். அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவானகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும் போது, அவரைக் கண்டடைவாய். (உபாகமம் 4:28-29)
மோசே எனும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தரால் அருளப்பட்டதாக கிறித்தவர்கள் நம்புகின்ற உபாகமத்தில் காணப்படும் ஓரிறைக் கொள்கைப் பிரகடனம் இவை.
இவைகளையெல்லாம் கிறித்தவர்கள் அலட்சியம் செய்தால் இந்த வேதத்தில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதைத் தவிர வேறு என்ன பொருள்? பரலோக ராஜ்ஜியத்தில், இந்தப் போதனைகளை மீறியதற்காக கர்த்தர் விசாரணை செய்தால் கிறித்தவர்கள் என்ன பதில் கூறுவார்கள்? சிந்தித்துப் பாருங்கள்!
ஏசாயாவிடம் கர்த்தர் உரைத்தவை.
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப் பின் இருப்பதுமில்லை. நான், நானே கர்த்தர். என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. நானே அறிவித்து இரட்சித்து, விளங்கப் பண்ணினேன். உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை. நானே என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 43:10-12)
வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. (ஏசாயா 45:18)
தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து இரட்சிக்க மாட்டாத தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள்.இதைப் பூர்வ கால முதற்கொண்டு விளங்கப் பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே! என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும். நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன். இந்த ரீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். (ஏசாயா 45:20-23)
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணார். அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது;அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? இதோ அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள். தொழிலாளிகள் நரஜீவன்கள் தானே; அவர்கள் எல்லோரும் கூடி வந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள். (ஏசாயா 44:9-11)
நானே கர்த்தர். வேறொருவர் இல்லை. என்னைத் தவிர தேவன் இல்லை. என்னைத் தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன். நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. (ஏசாயா 45:5,6)
நானே தேவன். வேறொருவரும் இல்லை. நானே தேவன். எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற் கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலை நிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி (ஏசாயா 46:9,10)
இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான். தட்டான் பொன் தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்
(ஏசாயா 40:18,19)
இவை யாவும் ஏசாயா எனும் தீர்க்கதரிசியிடம் கடவுள் உரைத்தவை.
சிலுவையையும், இயேசுவையும், அவரது தாயாரையும் உருவங்களாக்கி அவற்றைக் கடவுள்கள் என்று எண்ணி வழிபட்டு, பைபிளின் இந்தப் போதனைகளைப் புறக்கணிப்போர் தங்களைக் கிறித்தவர்கள் என்று கூறிக் கொள்ள அருகதை உள்ளவர்கள் தாமா?
பைபிளைத் தூக்கி எறிந்து விட்டு தங்கள் பாதிரிமார்கள் கூறிய திரித்துவம் (முக்கடவுள் கொள்கை) எனும் கொள்கையை ஏற்கலாமா?
பைபிள் மீது கிறித்தவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அது வலியுறுத்தும் ஓரிறைக் கொள்கையின் பால், அந்தக் கொள்கையை அழுத்தமாகப் போதிக்கும் இஸ்லாத்தின் பால் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதை உணருங்கள்!
உபாகமத்திலும், ஏசாயாவிலும் கூறப்படும் இந்தக் கொள்கைப் பிரகடனத்தை ஒன்றுக்குப் பல முறை மனதில் அசை போட்டுப் பார்க்கட்டும்.
வானிலும், பூமியிலும் கடவுள் ஒருவரே! அவருக்கு நிகரில்லை. இதை எல்லா நிலைகளிலும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
அற்புதங்களைக் கண்டு யாரையும் கடவுளர்களாக எண்ணி விட வேண்டாம். கிறித்தவர்கள் வணங்கும் இயேசுவின் சிலையும், சிலுவையும் பார்க்கவும், கேட்கவும், புசிக்கவும், முகரவும் சக்தியற்றவை.
கர்த்தருக்கு முன்னரோ, பின்னரோ எந்தத் தெய்வமும் இல்லை.
அனைவரையும் இரட்சிப்பவர் அவர் மட்டுமே.
முழங்காலை அவருக்கு முன்னால் மட்டுமே மண்டியிடச் செய்ய வேண்டும்
என்றெல்லாம் தெளிவாகப் பிரகடனம் செய்யும் இந்த வசனங்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி எனும் முக்கடவுள் கொள்கையைத் தகர்க்கவில்லையா? இயேசு உள்ளிட்ட யாரும் கடவுளுக்குக் குமாரர்களாக இருக்க முடியாது என்பதை அறிவுறுத்தவில்லையா?
இவற்றையெல்லாம் சிந்தித்து உண்மையான மார்க்கத்தின் பால் கிறித்தவர்கள் திரும்ப வேண்டாமா?
கிறித்தவக் குருமார்கள் புதிதாகக் கண்டுபிடித்த முக்கடவுள் கொள்கை தவறானது. அதற்கும், பைபிளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் மற்றும் சில பைபிள் வசனங்களைப் பாருங்கள்!
மோசேவின் லேவியராகமம்
விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
(லேவியராகமம் 19:4)
நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். (லேவியராகமம் 26:1)
மோசே தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதாகக் கிறித்தவர்கள் நம்பும் லேவியராகமத்தின் வசனங்கள் இவை.
யாத்திராகமத்தில் கர்த்தர் உரைத்தவை.
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். (யாத்திராகமம் 20:2-5)
நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும் அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும்அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக் கடவீர்கள்! (யாத்திராகமம் 23:24,25)
விக்கிரகத்தை உடைத்துப் போடுமாறு கடவுள் இட்ட கட்டளைக்கு தமது செயல் மாற்றமாக இருப்பது கிறித்தவ நண்பர்களுக்குத் தெரியவில்லையா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இன்னும் பல ஆகமங்களில் ஓரிறைக் கொள்கை எவ்வளவு வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்!
ஏரேமியாவுக்கு கர்த்தல் உரைத்தவை
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து அது அசையாத படிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேச மாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்பட வேண்டும். அவைகளுக்குப் பயப்பட வேண்டாம்; அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தாவே உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. (ஏரேமியா 10:3-6)
சங்கீதத்தில் தாவீது ராஜா உரைத்தவை
ஆகாய மண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? (சங்கீதம் 89:6)
ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.
(சங்கீதம் 86:8)
நீர் ஒருவரே தேவன்.
(சங்ககீதம் 86:10)
நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
(சங்கீதம் 113:5,6)
முதலாம் ராஜாக்கள்
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே! மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை. (முதலாம் ராஜாக்கள் 8:23)
பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் சில வசனங்கள் இவை!
ஆரம்பத்தில் ஒரே கடவுளாகிய கர்த்தரை வணங்கும் வழக்கமே இருந்து வந்தது. பின்னர் மக்களாக உருவாக்கிக் கொண்டவை தாம் சிலுவை, இயேசு, மேரி ஆகிய உருவங்கள் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.
பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நாம் விசாரிக்கப்படுவோம் என்பதை நம்புகின்ற எந்தக் கிறித்தவரும் இந்த முக்கடவுள் கொள்கைக்குப் பலியாக மாட்டார்கள்.
இனி புதிய ஏற்பாட்டில் காணப்படும் ஏகத்துவக் கொள்கைப் பிரகடனத்தைப் பாருங்கள்!
இயேசுவின் ஏகத்துவக் கொள்கைப் பிரகடனம்
அப்பொழுது இயேசு: 'அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே' என்றார். (மத்தேயு 4:10)
ஒரு கடவுளைத் தவிர மற்றவர்களை வணங்குவோர் சாத்தான்கள் என்பது இயேசுவின் இந்த வார்த்தையிலிருந்து தெரிகின்றது.
இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான் (மத்தேயு 6:24)
இரண்டு எஜமானர்களுக்கே ஊழியஞ் செய்ய முடியாது என்று இயேசு கூறியிருக்க கிறித்தவர்கள் இரண்டு அல்லது மூன்று கடவுள்களுக்கு உழியஞ் செய்ய முடியும் என்று நம்பலாமா?
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை;அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால் நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்கிறவன் எவனோ அவனே கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான். பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதின போது அது விழுந்தது;விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (மத்தேயு 7:21-27)
மூடர்களுக்கும் விளங்கும் வகையில் இயேசு செய்த இந்த போதனையைக் கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இயேசுவே என்றழைத்து பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாமல் போவதைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா? குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர் கேட்கிறார்கள் என்று கூறி இயேசுவைக் கடவுளாக்குவோர் அக்கிரமக்காரர், ஏமாற்றுக்காரர் என்று இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருப்பதை அவர்கள் உணர மாட்டார்களா?
ஒரே கடவுளாகிய கர்த்தரை – கர்த்தரை மட்டுமே – வணங்கி, வழிபட்டு கற்பாறையின் மீது தங்கள் கட்டிடத்தை எழுப்ப வேண்டாமா? ஆண்டவரே! என்று இயேசுவை அழைத்து மணல் மீது வீடு கட்டுவது மதியீனமாக அவர்களுக்குத் தோன்றவில்லையா?
தங்களின் பெற்றோர்களும் தங்களின் மதகுருமார்களும் இயேசுவைப் பற்றியும் அவர் போதித்த இலட்சியம் பற்றியும் தவறாகத் தங்களுக்குப் போதித்துத் திசை திருப்பி விட்டனர் என்பது இந்த வசனங்களிலிருந்து கிறித்தவர்களுக்கு உண்மையாகவே தெரியவில்லையா? சிந்தித்துப் பாருங்கள்.
மதபோதகர்கள் குறித்து இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றிருக்கிறார். அந்த எச்சரிக்கைகளை கிறித்தவர்கள் விளங்கினால் குருட்டுப் பக்தியிலிருந்து விடுபடுவார்கள்.
புதிய ஏற்பாட்டில் காணப்படும் மற்றும் சில வசனங்களைப் பாருங்கள்! இந்த வசனங்கள் கிறித்தவ மத குருமார்கள் நம்பிக்கைக்கு உரியவர்களலல்லர் என்பதை ஐயத்திற்கிடமின்றி விளக்கும்.
மாயக்கார வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (மத்தேயு 23:15)
நற்செய்தி கூட்டங்கள் நடத்துவோரைக் குறித்த எச்சரிக்கையாக இது கிறித்தவர்களுக்குத் தோன்றவில்லையா?
மாயக்கார வேதபாரகரரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாத படி பரலோக ராஜ்ஜியத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள். நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை. பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. (மத்தேயு 23:13)
ஆண்டவரே! என்று இயேசுவை அழைப்பவருக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் இடமில்லை என்று இயேசு கூறிய பிறகும் இயேசுவைக் கடவுளாக்கும் கிறித்தவ மதகுருமார்கள் பரலோக ராஜ்ஜியத்தைப் பூட்டிப் போடுகிறார்களா? இல்லையா? என்பதைச் சிந்தியுங்கள்!
தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள். தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதை விரும்புகிறீர்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்;பரலேகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். (மத்தேயு 23:5-10)
யாரையும் தந்தை என்று அழைக்கக் கூடாது என்று இயேசு தடுத்திருந்தும் மதகுருமார்கள் ஃபாதர் (தந்தை) என்று தாங்கள் அழைக்கப்படும் நிலையை உருவாக்கி விட்டார்களே! அவர்களையா கிறித்தவர்கள் நம்பப் போகிறார்கள்?
நீண்ட வஸ்திரங்களை அணிந்து, தங்களுக்குத் தனி மரியாதையை விரும்பக் கூடாது என்று இயேசு கட்டளையிட்டிருந்தும் அதைப் பகிரங்கமாக மீறித் தனி மரியாதையை எதிர்பார்ப்பவர்களையா கிறித்தவர்கள் நம்புகிறார்கள்?
மதகுருமார்கள் இயேசுவின் போதனைகளுக்கு மாற்றமான விழயைக் கிறித்தவர்கள் மீது திணித்து விட்டனர் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா என்ன?
இந்த மத குருமார்களின் வழிகாட்டுதலை ஒதுக்கித் தள்ளிவிட்டு இயேசுவின் போதனைகளின் பால் கிறித்தவர்கள் மனம் திரும்பட்டும்! இயேசு கூறுவதை இன்னும் கேளுங்கள்!
அந்த நாளையும், அந்த நாழிகைகயையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலிருக்கிற தூதர்களும் அறியார்கள். குமாரனும் கூட அறியார். (மத்தேயு 26:36)
ஒரே கடவுளாகிய கர்த்தரையே வழிபட வேண்டுமென்று இயேசுவின் இந்தக் கூற்று உங்களைத் தூண்டவில்லையா?
போதகரே! நியாயப் பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. (மத்தேயு 22:36-38)
இந்தப் பிரதானமான கொள்கை கிறித்தவர்களிடம் இன்றைக்கு இருக்கிறதா? பிரதானமான இந்தக் கொள்கையைக் கைவிட்டு விட்டு எந்த அடிப்படையில் தங்களைக் கிறித்தவர்கள் என்கிறார்கள்?
அப்பொழுது செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடு கூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்து கொண்டு, உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக் கொள்கிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். (மத்தேயு 20:20-23)
ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்று மக்களுக்குப் போதிக்கவே இயேசு வந்திருக்கிறார். தம்மைக் கடவுள் என்று வாதிட வரவில்லை. சர்வ அதிகாரமும் ஏக இரட்சகனாகிய கர்த்தருக்கு மட்டுமே உரியது என்று போதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.
இவ்வளவு தெளிவான போதனைகளுக்குப் பிறகு கிறித்தவர்கள் எங்கே போகிறார்கள்?
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்;அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27:46)
மரணிக்கும்(?) நேரத்தில் வட இயேசு கடவுளை அழைத்திருக்கிறார் என்பது எதைக் காட்டுகிறது. இயேசு கூட தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாது; அது கடவுளுக்கு மட்டுமே உரிய தனியகதிகாரம் என்பதைக் காட்டவில்லையா?
மத்தேயுவின் சுவிசேஷத்தில் காணப்படும் இயேசுவின் சில போதனைகளை இது வரை கண்டோம்.
ஏனைய சுவிசேஷங்களிலும் இயேசு இந்தக் கொள்கையைப் போதித்ததாகக் காணப்படுகின்றன. அவற்றையும் பாருங்கள்.
பிரதானமான கற்பனை எதுவென்று இயேசுவிடம் கேட்கப்பட்ட போது முழு ஆத்மாவுடன் கர்த்தரிடம் அன்பு கூர வேண்டும் (மார்க்கு 12:29,30) இயேசு மரணிக்கும் போது என் கடவுளே ஏன்என்னைக் கைவிட்டீர் என்று கூறிய விபரம் மார்க்கு 15:34-லிலும் கூறப்படுகிறது.
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதாவைத் தவிர யாரும் அறிய முடியாது என்று இயேசு கூறிய விபரம் மார்க்கு 13:32-லிலும் கூறப்பட்டுள்ளது.
என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்கிறேன் என்றார். (யோவான் 8:26)
நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். (யோவான் 8:28)
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால் அவனை நான் நியாயந் தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். (யோவான் 12:47)
இவை யாவும் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிஷேசங்களும் கூறும் உண்மை. இவற்றுக்கு முரணாக முக்கடவுள் கொள்கையை உருவாக்கியவர் பவுல் என்பதை அனைவரும் அறிவர். அவர் கூட தன்னையுமறியாமல் அந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்.
பவுல் கூறுவது
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறார்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமேன். (தீமோத்தேயு 6:16)
இயேசு கடவுளோ, கடவுளின் குமாரரோ இல்லை என்பதற்கு இதை விட சான்றுகள் தேவையில்லை. பைபிளை நம்பும் மக்கள் இயேசு கடவுளின் குமாரன் என்ற கொள்கையை ஒருக்காலும் நம்ப மாட்டார்கள். பைபிளைத் தூக்கி எறிந்து விட்டுத் தான் அதை நம்ப முடியும்.
கிறித்தவர்கள் பைபிளையும் கர்த்தரின் வார்த்தைகளையும் இயேசுவின் போதனைகளையும் தூக்கி எறிந்து விட்டு முக்கடவுள் கொள்கையில் இருக்கப் போகிறார்களா? முக்கடவுள் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு கர்த்தரின் கூற்றுக்கும் இயேசுவின் போதனைகளுக்கும் மதிப்பளிக்கப் போகிறார்களா?
எந்த முடிவுக்கு வரப் போகிறார்கள்?
இயேசு தம்மைக் கடவுள் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் குமாரர் என்றோ கூறவில்லை. மாறாகக் கடவுளுக்கு அஞ்சி நடந்த சிறந்த மனிதராகவும் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்தோதும் தூதராகவும் இருந்தார் என்பதைப் பைபிளின் வசனங்களை மேற்கோள்காட்டி நாம் நிரூபித்தோம்.
நன்றி: www.onlinepj.com
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)