கிறித்தவ நண்பர் ஒருவர் நபி(ஸல்) அவர்களின் திருமணங்களைப் பற்றி கீழ் கண்ட வினாக்களை எழுப்புகிறார்;.
இறைத்தூதர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் போது ஒன்று - இரண்டு திருமணங்கள் மட்டும் செய்திருக்கலாம். 11 திருமணங்கள் முடித்ததால் அதையே காரணங்காட்டி அரபுகள் 3 - 4 திருமணம் முடித்து அநீதம் இழைக்கிறார்கள் என்கிறார்.
இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்த பெண்களை திருமணம் முடிக்கக் காரணம் என்ன? என்றும் கேட்கிறார் இது பற்றி தெளிவான விளக்கம் வேண்டும் முபாரக் அலி - யாஹூ மெயில் வழியாக.
அரபுகளும் சரி உலகின் இதர பகுதிகளில் வாழும் முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களும் சரி இவர்களெல்லாம் திருமணத்தின் மூலம் ஒரே நேரத்தில் 3 - 4 மனைவிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கு காரணம் இறைத் தூதர் பலதாரமணம் புரிந்துள்ளார் என்பதனால் அல்ல மாறாக ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வரை ஒருவனுக்கு மனைவியாக இருக்கலாம் என்ற இறைவனின் அனுமதிதான் இதற்கு காரணமாகும்.
'....பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ - மும்மூன்றாகவே - நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கிடையில் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள்....' (அல் குர்ஆன் 4:3)
அரபுகள் உட்பட முஸ்லிம்களில் வசதிவாய்ப்புள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு இந்த வசனம்தான் காரணமாகும்.
இந்த வசனம் நபி(ஸல்) அவர்களின் 52ம் வயதின் இறுதிப் பகுதியில் இறங்கியது என்று விளங்க முடிகிறது. இந்த வசனம் இறங்கும் போது இறைத் தூதர் அவர்களுக்கு மூன்று திருமணங்களே முடிந்திருந்தன. அதில் முதல் மனைவி இறந்துப் போக இரண்டு மனைவிகளே உயிரோடு இருந்தனர். இறைத்தூதர் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்ததால் தான் முஸ்லிம்கள் பலதாரமணம் செய்கிறார்கள் என்று அந்த கிறித்துவ சகோதரர் விளங்கி இருப்பது தவறு என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இறைத்தூதர் இரண்டு மனைவிகளோடு இருந்தபோதே முஸ்லிம்கள் அதிகப்பட்சமாக நான்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இறைவன் புறத்திலிருந்து கிடைத்து விட்டது.
நான்கு திருமணங்கள் செய்பவர்கள் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்ற வாதமும் தவறு. ஒரு மனைவியோடு வாழ்பவர்கள் தங்கள் மனைவிகளுக்கு அநீதியே இழைப்பதில்லை என்று யாராவது சான்றிதழ் கொடுக்க முடியுமா... அநீதி இழைத்தல் என்பது ஆண்களின் மன நிலையைப் பொருத்ததாகும். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து பல மனைவியரோடு அவர்களுக்கு மத்தியில் பேதம் பாராட்டாமல் - பாராபட்சம் காட்டாமல் - சமமாக நடக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். சமூகத்திற்கோ - சட்டத்திற்கோ பயந்து ஒரு திருமணம் செய்து மனைவி வீட்டில் இருக்கும் போது அன்னிய பெண்கள் மீது கையை வைக்கும் கெடுமதியாளர்களும் ஆண்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். (பலதாமணம் பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடியதா... என்ற விவாதத்திற்கு உள்ளே நாம் செல்லவில்லை காரணம் கேள்வி அதுபற்றியதல்ல)
பலதாரமணத்தில் மட்டும் அநீதி இருக்கிறது என்று கூறுவது ஆண்களின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகத்தான் இருக்க முடியும்.
இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்தப் பெண்களைத் திருமணம் செய்ததற்குரிய காரணங்களை விளங்க வேண்டுமானால் அந்த திருமணங்களின் பின்னணியை நாம் விளங்க வேண்டும். அது விரிவாக விளக்கப்பட வேண்டிய வரலாறாகும்.
சுருக்கமாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால்,
முதிர்ந்த வயது என்பது சமூகத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்டு அவலங்களை சந்திக்கக் கூடிய - பிறரது அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் மனம் விரும்பக் கூடிய ஒரு வயதாகும். இறைத் தூதர் வயது முதிர்ந்தப் பெண்களை திருமணம் செய்ய முன் வந்ததும் அந்தப் பெண்கள் மறுக்காமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும் இந்த பின்னணியைக் கொண்டதாகும் இது முதல் காரணம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பது ஆட்சியாளரின் கடமையாகும் என்பதை மிக அழுத்தமாக உலகில் உரைத்து அதை செயலாக்கப்படுத்திக் காட்டியவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள். அன்னியப் பெண்ணாக வைத்து ஆதரவு அளிப்பதை விட சொந்த மனைவியாக்கிக் கொண்டு ஆதரவளித்தால் அந்தப் பெண்களால் கூடுதல் பலன் பெற முடியும் என்பதால் மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதர ஆட்சியாளர்கள் இதே வழியைப் பின்பற்றலாமா என்றால் அனுமதிக்க முடியாது. ஏனெனில் முஹம்மத்(ஸல்) அவர்கள் வெறும் ஆட்சியாளராக இருந்து மட்டும் இந்த திருமணங்களை செய்யவில்லை. இறைவனின் தூதராக இருந்தும் செய்தார்கள். தம் செயல்களுக்கு நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவர்களின் உள்ளச்சத்தை உலகில் எந்த ஆட்சியாளரின் உள்ளச்சத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இந்த அளவுகோள் தான் இத்துனை மனைவிகளுக்கு மத்தியிலும் அவர்களை நீதமாக நடக்கச் செய்தது.
எல்லா வீடுகளிலும் நடக்கும் சக்களத்தி சண்டை இறைத் தூதரின் வீட்டிலும் நடந்ததுதான். அதற்கு கூட 'உன்னை விட நான்தான் அவர்களை அதிகமாக கவனிப்பேன்... உன்னை விட நான் தான் அவர்களை அதிகமாக கவனிப்பேன்... என்ற உபசரிப்பு போட்டி மனப் பான்மையில் நடந்ததாகும். அந்த மனைவிகளின் வீட்டில் பல சந்தர்பங்களில் வறுமை கவ்வி கிடந்த போதும் கூட அவர்கள் தங்கள் கணவரை போட்டிப் போட்டுக் கொண்டு நேசித்ததற்கு நீதி வழுவா அவர்களுடைய வாழ்க்கை முறையே காரணமாகும்.
அந்த இறைத்தூதருக்கு பிறகு வந்த எந்த ஆட்சியாளருக்கும் (அவர்களுடைய அன்புத் தோழர்கள் உட்பட) அவர்களுடைய பண்பு இருக்கவில்லை - இருக்க முடியாது என்பதால் அவர்களைப் போன்று மனைவிகளின் எண்ணிக்கையை - ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் - கொடுக்க முடியாது.
அவர்கள் பல திருமணங்கள் செய்ய வேண்டியதற்கு இன்னொரு முக்கியமான - அவசியமான காரணமும் இருந்தது.
அவர்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த இறுதி தூதராக இருந்ததால் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் ஒளிவு மறைவு இல்லாமல் மொத்த உலகுக்கும் சொல்ல வேண்டிய நிலை உருவானது. வெளி உலக வாழ்க்கையை அறிவிப்பதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் (தோழிகளும் அடங்குவர்) இருந்தனர். சரிபாதி வாழ்க்கையை வெளி உலகில் கழிக்கும் மனிதன் மீதி பாதி வாழ்க்கையை வீட்டில் தான் கழிக்க வேண்டும். இறைத் தூதரின் நிலையும் இதுதான்.
வெளி உலகத்தில் அவர்கள் வாழ்ந்த பாதி வாழ்க்கையை அறிவிக்க ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த போது மறுபாதி வாழ்க்கையை அறிவிப்பதற்கு ஒருவரோ - இருவரோ போதியவர்களாக இருக்க முடியாது. இதை ஈடு செய்வதற்காகவும் இவர்கள் நான்குக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
காலையில் எழுந்தது தொடங்கி இரவில் இல்லறத்தில் ஈடுபட்டு ஓய்வெடுக்கும் வரையிலான அனைத்து வழிமுறையையும் அவர்களின் மனைவிகள் மூலமே இவ்வுலகிற்கு கிடைத்துள்ளது. வெளி உலக வாழ்க்கையின் அறிவிப்பாளர்களுடன் ஒப்பிடும் போது இந்த மனைவிகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே... இன்னும் கூட அவர்களுக்கு மனைவிகள் தேவைப்பட்டிருக்கும் என்று நம் மனங்கள் நியாயம் கற்பித்தாலும் 'இதற்கு மேல் வேறு திருமணங்கள் செய்யக் கூடாது' என்று இறைவன் தடுத்து விட்டான். (பார்க்க அல் குர்ஆன் 33:52)
வயது முதிர்ந்தவர்கள் உட்பட நபி(ஸல்) பல திருமணங்கள் செய்ததற்கு இது போன்ற நியாயமான காரணங்கள் இருந்தன.
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)